இப்படி நாம் காதலிப்போம் “பொங்கல் கவிதை போட்டி 2015”

(தலைவன்)
மேற்கிழுத்துச் சூரியனைச் சொன்னதடி காதல்
மின்னலுக்கு மேகமது தாளமிட்ட காதல்
மார்கழிவா சல்களுக்கு மாவரிசிக் காதல்
மஞ்சளிளம் பூக்களுக்கும் மாடுசொல்லும் காதல்

கண்மணிநீ புள்ளியிடும் கைவிரலில் காதல்
கண்டுதினம் நள்ளிரவில் வேர்த்திருக்கு வாசல்
கண்ணியமாய் என்னிதயக் கூடுதனில் காதல்
காரிகையே தூரிகையே காட்டுவதேன் ஊடல்

கண்ணதாசன் கற்பனையின் தெள்ளமுதப் பாடல்
கன்னியுன்க ழுத்துவரி தந்ததிந்தக் காதல்
சூத்திரங்கள் நானறியேன் சுட்டிடுமோ மோதல்
சூசகமாய் சொல்லுவது எப்படியென் காதல்

(தலைவி)
வாங்கவாங்க காளிதாச வாத்தியாருப் பேரா
வண்ணவண்ணச் சொல்லெடுத்து வீசுகின்ற வீரா
எங்கிருந்து வந்திகளோ தெற்குமக்கு ஊரா
எங்கமக்க சேந்துவந்தா ஆத்திருவோம் மோரா

மாவிளக்கா, பூக்கணக்கா, பொண்ணிருந்தா தேரா
மத்தியானம் மத்தசுமை விட்டுரங்கு றீரா
பொங்கவரப் போகுதையா புத்திகொண்டு நீரா
போயினாலு காசுகண்டு வீடுவரு வீரா

(தலைவன்)
ஆரணங்கே ஆத்திரமாய் ஏனடியுன் ஆடல்
அள்ளிவைத்த என்வரிகள் ஆசையிலோர் தேடல்
புள்ளினமே போதுமடி சந்தவரிச் சாடல்
பொன்பெருக்கி வந்திடுவேன் பொங்குமினிக் காதல்

* மீ.மணிகண்டன்
* 09-Jan-15

எழுதியவர் : மீ.மணிகண்டன் (9-Jan-15, 6:21 am)
பார்வை : 179

மேலே