முதுகெலும்பி 13 பொங்கலோ பொங்கல்

“டேய்ய்ய்ய்... ஓடுநண்டேய்ய்ய்.... திண்ண மொழுக மண்ணு வெட்டப்போறேம் வாறீயாடா..”

செத்த நில்லுண்ணே... இந்த ரெண்டு காயப் பறிச்சிப் போட்டுட்டு வாறம்.” அவம் இப்ப நீலா வீட்டு மரத்துல தென்னங்காயி பறிச்சிக்குடுக்குற அளவுக்கு நெருங்கிட்டாம். என்ன.... அவனுக்கும் ஒரு ரெண்டு வருசம் பொறுத்து அந்தப் புள்ளைய கட்டிப்புடணும். காதலுதாங்க மனுசன பக்குவப்படுத்தும் . பதப்படுத்தும் இல்லையா..?

அப்பறம் என்னங்க .. எல்லாரும் சொகமா இருக்கியளா ?

கொஞ்சம் சொனங்கிருச்சிங்க... அம்புட்டு வேல. நமக்கு வேல இல்லாத திருநாளு என்னைக்கி.... ஏதோ மயிலம் புண்ணியத்துல நாலு காசு பாத்துப்புட்டம் ஊரு சனமெல்லாம். கலியாண வேல வேற கெடக்கா..அதெம் உங்ககிட்ட பேசமுடியல...

என்னங்க .. எல்லாரும் மயிலனத் தேடுறீயளா.. பொங்கலு வருதுல்ல...அவம் வெளுப்புலையே மொதப் பஸ்சு புடிச்சி பொங்கச் சாமான வாங்கப் போயிட்டான். அவம் இந்த வாட்டி கடை போடப்போறானாம்.

எல்லாரும் பொங்கல் கொண்டாட போயிருவம். அதுக்கு முன்னாடி எங்க மண்ணுல பொங்கலு எப்படி இருக்குமுன்னுதெம் உங்களுக்கு சொல்லப் போறேம்.

பொங்கலுக்கு ஒரு பத்துநா இருக்கையில கொளத்துல தண்ணி லேசா எறங்கும். அப்பப்போயி பதமான எடமாப்பாத்து களிமண்ணு வெட்டிவந்து கொஞ்சம் மணலு கலந்து செவரு திண்ணையின்னு மொழுகுவம். செல ஆளுக அதுலயே அடுப்பும் செஞ்சிக்கிருவாக. இப்பஞ் செஞ்சாத்தா பொங்கலுக்கு காயும் ஈரமண்ணு...

பூசுனது எல்லாம் அரைக்காச்சலா வாரப்ப காவிப்பொடி வெள்ளப்பொடி கலக்கி பட்ட பட்டையா கலரு அடிப்பம். திண்ணைக்கும் அப்பிடித்தெம். ஆனா அதுக்கு முன்னாடி சாணியக் கொழச்சி பூசிருவம். இத எங்க ஊருப் பக்கம் திட்டாணின்னும் சொல்லுவாக.நீங்கல்லாம் ச்சீன்னு ஒதுக்குற சாணிய வீட்டுத் திண்ணைக்கி பூசுவம் ஏந்தெரியுமா? புழுப் பூச்சி அண்டாது. நோய்நொடி வராது.டாக்டருகல்லா நோய் வராம இருக்க ஊசி குத்துறாகளே. அந்தமாதிரின்னு வச்சிக்கங்க. இப்பல்லா உங்க டவுனுப்பக்கம் வெறுந்தண்ணிதா தெளிக்கிறீகன்னு டூரிங் கொட்டாயில சினிமா பாத்துத் தெரிஞ்சிக்கிட்டேம்....


அப்பறம்.. எங்க பொங்கலு பொதுவா மூணு நாளுங்க. மொதநாளு வீட்டுப் பொங்கலு. அவுகவுக வசதிக்கு தகுந்தாப்புல வெள்ளனையாவோ அந்திக்கோ வைப்போம். புது அடுப்பு வச்சி சாம்பிராணி போடுவம்.. மரவெறகு எல்லாம் இல்ல.வெறும் தென்னம் பாள.. கூராஞ்சி இப்பிடித்தேம் வெறகுக. இல்லன்னா பொங்க பதம் வராது.பொங்கி வாறப்ப பொங்கலோ பொங்கலுன்னு கூவி கொலவை போடுவம். பொங்குன பானைக்கி மஞ்சத்தழ... பிச்சிப்பூன்னு கட்டிவிட்டு எறக்கி.. தலைவாழ மூணு எடுத்து படையலு போடுவம். படையச் சோத்த எடுத்து அடுப்புக்கு...மொதல்ல.. அப்பறமா வீட்டச்சுத்தி நிக்கிற காக்கா குருவிகளுக்கு குடுத்து பொறவுதா எங்களுக்கு. புதுப்பச்சரிசி வெல்லம் போட்டு எறக்கி மெதமான சூட்டோட பொங்கல் அமிர்தமா எறங்கும் பாருங்க. வயிரும் மனசும் சேந்து ஒழைச்சவனுக்கு நெறையிற நேரங்க அது..... ஒழைச்ச பெருமை...

மறுநா வெளுப்புலையே மாடு கன்னுகள ஒட்டிக்கிட்டு கொளம் ஆறுன்னு போவம். அவிங்கள நல்லா வைக்கப் பிரி வச்சி தேச்சிக் குளுப்பாட்டுவம். அதட்டக்கூட மாட்டம். அவுகளுக்கு அன்னைக்கி பூரா கொண்டாட்டந்தேன். கொட்டாச்சிய காவித்தண்ணில நனைச்சி அவுக ஒடம்பு பூராவும் வளையம் வப்பம். கொம்புகளுக்கு கலரு அடிப்பம். இப்படியா கல்யாணச் சோடி கணக்கா சோடிச்சி ஊருக் கெடையில கட்டிப்புடுவம். அவுகளும் எல்லாருமாக் கூடி நலம் விசாரிச்சிக்கிறதாவே படும் எங்களுக்கு.


சாயங்காலமா ஊருக்கெடைக்கி முன்னாடி ஊருசனம் எல்லாருமா கூடிப் பொங்கவைப்போம். பொங்கி வாறப்ப ஊரு மொத்தம் ஒண்ணாக் கூடி பொங்கலோ பொங்கலு பாடுவோம் பாருங்க.. சந்தோசமுன்னா அங்க நின்னு உணரனும் நீங்கல்லாம். அப்பறம் எல்லாப் பானையில இருந்தும் கொஞ்சம் சோறு எடுத்து மொத்தமா வாழைப்பழம்.. வெல்லக்கட்டி எல்லாஞ் சேத்து பெசஞ்சி உருட்டி மாடுகளுக்கு ஊட்டுவம்.. அப்பறமாதா எங்களுக்கு. இதுக்குப்பேரு ஆயங்கால உருண்டை.. இந்த உருண்ட குடுக்குறதுல பல மொறை கட்டுப்பாடு எல்லாம் இருக்கும். கொஞ்சம் மாறினாலும் கொதிச்சி கலவரமாயிரும். அதுனால வகையா எல்லாருக்கும் பிரிச்சி குடுத்துட்டு அப்பறந்தே எல்லாருக்கும்... அம்புட்டு ருசியா இருக்கும் அந்த உருண்ட... இருக்காம என்ன...? அம்புட்டும் சுத்தமான ஒழைப்புல்ல....!!


அதெல்லா முடிஞ்ச பொறவு பானைய வீட்டுக்குத் தூக்கிட்டு வந்து எங்க தாத்தம் பாட்டனுக்கெலாம் பூசை போட்டு கும்புட்டு விழுவோம்...


அடுத்தநாளுதாங்க பொங்கத் திருவிழா...
காலையிலேயே மைக்குசெட்ட அலறவிட்டு அலப்பறையக் குடுப்பம். விடியக்கால கெளம்பி எளவட்டப் புள்ளைக எல்லாம் கோலப்போட்டிக்கி கோலம் போட ஆரம்பிச்சிருக்கும்..நாங்கதா நாட்டாம.. அதாங்க.. நடுவரு.... வேட்டிய மடிச்சிக்கட்டி வீடுவீடாப் போயி கோலம் பாப்பம்.. கோலத்த மட்டுமா பாப்பம்...? ஹ்ஹஹஹ்ஹா... அது ஒரு ரசனைங்க..... அப்பறந்தாங் காலக் கஞ்சி குடிக்கிறது.. ..


அதுக்கு அப்பறம்.. ஓட்டப்பந்தயம் .. தேங்கா ஒடைக்கிறது..பானை ஒடைக்கிறது .. கனியும் கரண்டியும் சாக்கு கட்டிக்கிட்டு ஓடறது... இப்படி நெறைய வெளயாட்டு நாளு பூரா நடக்கும்.. பானை ஒடைக்கிறப்ப மட்டும் பொம்பிளைப் பிள்ளைகளதூரமாவே நிப்பாட்டிருவம். பாட்ட சத்தமா வச்சிருவம். பயபுள்ளைக கொலுசத்தட்டி வளையலைக் குலுக்கி காமிச்சிக் குடுத்துருங்க. அவிங்க மாமனோ மச்சானோ பானை ஒடைக்க வாறப்ப.... அந்த நேரம் பாக்கணுமே.... அங்கிட்டும் இங்கிட்டுமா கண்ணு காது கையி வளையலு வெரலு தாவணி தலைமுடி கோதுறது இப்படின்னு வாயத்தவிர எல்லாம் பேசிக் கெடக்கும்.. அங்கிட்டும் இங்கிட்டும் ஒரே நேச மழதாம் போங்க...

சாயங்கால நேரம் எளவட்டப் பயலுகளுக்கு கபடிப் போட்டி நடத்துவம். அப்பறமா எல்லாருங் குளிச்சி முடிச்சி மசண்ட பொழுது வாக்குல மேடைக்கி முன்னாடி கூடுவம். ஊரு பொடிசுக எல்லாம் அதுக பள்ளிக்கொடப் பாட்டு.. சினிமாப் பாட்டு... ஆட்டம்...போட்டு அசத்த வெடலப் பயலுக கவித வாசிக்கிறது... பேசுறதுன்னு தெறம காட்டுவாய்ங்க. ஒரே கும்மாளமா இருக்கும் ஊரு முழுக்க... அப்பறமா பெரிய மனுசைங்கள கவுரவப் படுத்துவம். இந்த வாட்டி சாமித்தாத்தாவுக்கும் மயிலானுக்கும் செய்யலாமுன்னும் ஒரு யோசனை இருக்கு.. அப்பறம் பரிசு... சின்னப் புள்ளைக எல்லாருக்கும்... பெரியவகள்ள செயிச்சவகளுக்கு மட்டும்... இப்படியா கொண்டாடி முடிப்பம் எங்க ஊரு பொங்கல....


“என்னண்ணே.. கதையா...? கோச்சிக்கிறாத...இன்னைக்கி அவுக வீட்டுல கறிக்கொழம்பாம்.. ரெண்டு வாயி தின்னுட்டுப் போகச் சொல்லிச்சி...” வெக்கத்தோட கடவாயத் தொடச்சிக்கிட்டே சொன்னாம்.. ஓடுநண்டு....

“எலேய்.... என்னைய விட்டுப்புட்டு..... ...”?

“அண்ணே.. சோறு வச்சது நீலாண்ணே.. நீ இருந்தா நல்லவா இருக்கும்..”. ன்னாம் வெக்கம் வாய்க்காத் தண்ணியா ஓடுச்சு...

“சரிடா... இந்தத் தையில ஒரு கலியாணம்.... அப்பறம் ஒரு நிச்சயம்.. பண்ணிருவம் அப்ப...!!

பாத்துடா.. எம் புள்ளைக்கி அண்ணனயோ.. அக்காவையோ வெதச்சிறாத.....அதுக்குள்ளே ” ஹஹஹஹா... பொறுமையா இருக்கணும்ண்ணே ன்னு கிண்டல் பேசிக்கிட்டே மண்ணு வெட்டப் போய்க்கிட்டு இருக்கம்...

சரிங்க... எல்லாரும் பொங்கலுக்கு எங்க ஊருக்கு வாங்க.... மண்ணுல மக்களோட பொங்கல கொண்டாடுவோம்... பொங்கல் வாழ்த்துக்கள்ங்க அம்புட்டு பேருக்கும் ..

(கலியாணம் இருக்கு)

எழுதியவர் : நல்லை.சரவணா (9-Jan-15, 10:29 am)
பார்வை : 255

சிறந்த கட்டுரைகள்

மேலே