44 இலஞ்சங் கொடுத்துப் பழக்காதே
லஞ்சம் கொடுத்துப் பழக்காதே! - நீ
நல்ல வனையும் கெடுக்காதே!
ஒருவன் கொடுத்துப் பழக்கிவிட்டால் - அவன்
ஒவ்வோ ரிடமும் எதிர்பார்ப்பான்! - பின்
ஒழுங்காய் வேலை செயமாட்டான்! - பதில்
உரைக்கக் கூடப் பணம்கேட்பான்!
கொடுக்கா தவனை அவமதிப்பான்!
கோபம் கொண்டு அலைக்கழிப்பான்!
கொடுத்துத் தொலைவோம் எனும்நிலைக்குக்
கொண்டு வந்து பல்லிளிப்பான்!
பணத்தின் ருசியைக் காட்டிவிட்டால் - அது
பைத்தியம் பிடித்து அலையவைக்கும்!
குணத்தில் சாது வானவனும்
குண்டர் போல நடக்கவைக்கும்!
உரிமம் தருகிறேன் கொடுஎன்பான்!
வரியைக் குறைக்கிறேன் கொடுஎன்பான்!
தருகிறேன் வேலை கொடுஎன்பான்!
தவறை மறைக்கிறேன் கொடுஎன்பான்!
காட்டில் மரங்கள் வெட்டப்படும்!
ஆற்றில் மணலும் அள்ளப்படும்!
நாட்டின் வளங்கள் சுரண்டப்படும்!
நன்னீர் சோற்றுக்குப் பஞ்சம்வரும்!
அரசுத் துறைகள் நட்டப்படும்!
வரிவ சூலும் மட்டுப்படும்!
பெரிய திட்டம் பணமின்றிப்
பேச்சள வோடு முற்றுப்பெறும்!
சாலையில் தாரும் இருக்காது!
கூரையில் சிமிண்டும் இருக்காது!
மருந்தில் குணமும் தெரியாது!
மழைநீர் தங்கிப் பெருகாது!
சமூக விரோதச் செயல்பெருகும்!
சட்ட விரோதப் பணம்பெருகும்!
தேசத் துரோகம் குழிபறிக்கும்!
தெய்வக் குற்றம் வழிமறிக்கும்!
பாடு பட்டவன் மனம்நோவான்!
பங்கு கேட்டவன் தினம்வாழ்வான்!
கேடு கேட்டவன் அரசாள்வான்!
கேள்வி கேட்டவன் தரைவீழ்வான்!
நீதி நேர்மை பார்க்காது! - லஞ்சம்
நெஞ்சில் இரக்கம் காட்டாது!
போதும் என்று நிறுத்தாது! - கை
புத்த னிடமும் மடங்காது!
நாட்டைப் பற்றி நினைக்காது!
நன்றி என்பதும் இருக்காது!
போட்டி போட்டுப் பொன்குவிக்கும்!
புதைத்துத் தானும் புதைந்துவிடும்!