நாளைய தமிழும் தமிழரும் பொங்கல் கவிதைப் போட்டி-2015
இருக்கு வேதத்தின் ‘ நீரும் பழமு’மாய்
இருக்கும் இத் தமிழ் இராமம் என்று
இரும்பூதெய்தி இறுமாந்திட வைக்கும்
சுமேரிய மன்னனின் தலை நகர் ஓர் ”ஊர்”
ஆபிரகாம் வாழ்ந்து சிறந்ததும் ஓர் “ஊர்”
உலகளாவிய தமிழ் உன்னதத்திலும் கூர்.
முல்லையுங் குறிஞ்சியும் மருதமும் நெய்தலும்
சொல்லிய முறையால் தனித்துவம் கொண்ட
தமிழிதின் வளமையை சொல்லவும் வேண்டுமோ?
உலக மயமாக்கலும் உல்லாசத் தாக்கலும்
நலங்கெடத் தமிழை நசுக்கிச் சுருக்குமோ?
கலத்தினில் விளக்கென குன்றிடச் செய்யுமோ?
அயலர் வரவால் அயன்மொழித் தொடர்பால்
கயலாற் காத்த கன்னித் தமிழ்ச் சீர்
புயலினிற் பறக்கும் பஞ்சு போலாகுமோ?
நிலம் பெயர்ந்தாலும் நெருக்கமுற்றாலும்
வயல் இழந்தாலும்செயல் இழந்தாலும்
வாய்ச்சொல் வீரராய் தமிழர் வாழ்வரோ?
சங்கம் வளர்த்திட்ட ‘தமிழ் காப்பு’ மரபினில்
பங்கம் வராமல் தமிழினி வளரும்
சங்கு கொண்டிதை சரித்திரம் சொல்லும்.
குலவழி வளர்ந்து குரல்வழி வழிந்து
வழிவழி தழைத்து மொழியிது பிழைக்கும்
அழிவினை அழித்து முழவுகள் முழக்கும்.
இது எனது கவிதை என உறுதி அளிக்கிறேன்,
தா. ஜோசப் ஜூலியஸ்
எண்.4/45, 11வது டிரஸ்டு கிராஸ் தெரு
மந்தவெளிப்பாக்கம்,
சென்னை-600028