விடியாத விடியல்கள்
இயற்கை விடியல்
நாளும் நிகழ்ந்தும்
விடியாத விடியல்கள்
இன்னும்தான் உள்ளனவே
உலகில்பல கண்ணெதிரே !
இன்னுயிர் பலநீத்து
இன்பமே காணாது
இன்னலின் விளிம்பில்
இலங்கைத் தமிழன் ...
விடிந்திடுமா அவனுக்கும் !
இச்சையின் எல்லையில்
எச்சமாய் பிறந்திட்டபலர்
உளைச்சலின் உச்சத்தில்
ஆதரவற்ற அனாதைகளாய் ...
விடிந்திடுமா அவர்களுக்கும் !
பிறந்ததால் வளர்ந்திட்டு
பிழைத்திட வழியின்றி
தழைக்கவும் வழியறியா
தளிர்களும் வையகத்தில் ...
விடிந்திடுமா இவர்களுக்கும் !
ஏழ்மையெனும் அரக்கனிடம்
என்றுமே சிக்கித்தவிக்கும்
பாடுபடும் உயிரினங்களும்
பாரினில் பரவிகிடக்குதே ...
விடிந்திடுமா ஏழைகளுக்கும் !
அறியாமல் பிறந்தாலும்
அறியாமலே சிக்குண்டு
அறியாமை விபத்தினால்
அழிகிறான் சாதிமதத்தால் ...
விடிந்திடுமா சமூகத்திற்கும் !
கல்லாமை இல்லாமை
கலந்திங்கு சறுக்கிடுதே
வளமில்லா வாழ்வினால்
சரிகின்றதே பலர்நிலையும் ...
விடிந்திடுமா அவர்களுக்கும் !
கேடுகெட்ட அரசியலால்
நாடுகெட்ட நிலையின்று
கூறுகெட்ட உள்ளங்களால்
நாதியற்ற நடுத்தரமன்றோ ...
விடிந்திடுமா இவர்களுக்கும் !
இணையவுள்ள காதலர்கள்
இறக்கின்றனர் இறுதியிலே
விரட்டிடும் சாதிவெறியால்
விளைவுகளோ விபரீதம் ...
விடிவுண்டா சமுதாயத்திற்கு !
உணவிலும் கலப்படம்
உள்ளத்திலும் ஊனம்
உணர்விலும் களங்கம்
உருப்படுமா உலகமும் ...
விடிந்திடுமா கோளத்திற்கு !
கானல்நீராய் அன்புபண்பு
வற்றியநெஞ்சாய் பாசமும்
வழிதவறிய பாதையில்தான்
பயணிக்கும் தலைமுறையும் ...
விடிந்திடுமா வளர்வோருக்கும் !
வீராப்பிங்கே பொல்லாப்பாகி
மாராப்பில்லா மங்கைநிலையாகி
தன்மானத்திற்கே தலைகுனிவாகி
தடுமாறுகிறது இனமானமிங்கே ...
விடிந்திடுமா தமிழினத்திற்கும் !
வரிசையில் நிற்கிறது அடுக்கிட
வருத்தமோ தடுக்கிறது எழுதிட !
விடியாத விடியல்கள் விடிந்திட
துடியாக துடிக்கிறது உள்ளமும் !
விடியட்டும் பிறக்கட்டும் புத்துலகம் !
பழனி குமார்