ஊடல் இன்பம்

சுற்றித் திரிந்த காலம் மறந்து
இற்றுப்போன நட்பென நாளும்
வெற்றிக் களிப்பில் திளைத்திடவே - என்
ஒற்றை சொல்லால் பிரிந்து சென்றாயோ....?!

பற்றிய கொம்பில் பழுதாகி, வீழ்ந்தால்
சுற்றிய கொடியும் சுருண்டு வாடுமே...!
வற்றிய நெஞ்சில் வஞ்சமே அன்றி...
மற்றைய எண்ணம் ஏதுமில்லையோ...?!

ஆற்றிய வினைகள் அனைத்தும் நானே
போற்றிய செயலென பொறுப்பு ஏற்றபின்
தூற்றிடு மெண்ணம் தொடர்கிறதே..!- அதை
மாற்றிட மனதில் எண்ணமில்லையோ..?!

போற்றிய நட்பும் போனபின் வாழ்வில்
வெற்றிடம் காணுதே....வேதனை ஆனதே..!!
சாற்றிய கூற்றை சரிபார்த்து என்னை
ஏற்றிடும் எண்ணம் என்று தோணுமோ....?!

காற்றிடம் தூது செல்லச் சொல்வதா..?!
ஆற்றிடம் தூது செல்லச் சொல்வதா..?!
போற்றிடும் நட்பே புரிந்து திரும்புமா...?!-இல்லை
போக்கிடம் இன்றி மனது வருந்துமா....?!!

எழுதியவர் : இரவி (13-Jan-15, 8:52 pm)
Tanglish : oodal inbam
பார்வை : 107

மேலே