கால் - முரளி
(சமீபத்தில் எனக்கு காலில் அடிபட்ட சரித்திர நிகழ்வை கல்வெட்டில் பதிந்து தஞ்சாவூர் பெரிய கோவில் முன் வைத்து கூடவே அமர்ந்து வருங்கால சந்ததியினருக்கு தெரியப் படுத்த வேண்டும் என்பது என் அவா..... இருந்தாலும் சரியான கல் கிடைக்காததாலும், கால் வலியுடன் தஞ்சாவூர் வரை செல்ல வேண்டிய சிரமத்தாலும் , அந்த சரித்திர நிகழ்வை வலை தளத்தில் பதிவிடுகிறேன் வாசகர்கள் கற்கள் தேட நினைப்பதும் பல "******", "******" வார்த்தையில் திட்டுவதும் புரிகிறது... வருங் காலத்தில் கூகிளில் "கால்" என்று தேடினால் என் கதையும் வருமல்லவா....?) ( "இருப்பா.., டீ இன்னும் வரல..... ")
---------------------------------------------------------------------------------
பகலில் வளர் பிறை போல் வளர்ந்து அப்பம் போல் வீங்கி, இரவின் ஓய்வில் தேய் பிறை போல் தேயும் என் பாதத்தின் இன்றய நிலமையின் காரண வரலாறு.....
காலை 9:00 மணி. பள்ளியில் பேத்தியை கொண்டு விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். இரு சக்கர வாகனத்தில் பிரதான சாலையை கடக்க பொறுமையாக காத்திருந்து, பிறகு மெல்ல வண்டியை கிளப்பினால், அதி வேகமாக பிரதான சாலையில் வந்த இளைஞர் கட்டுப் பாடு இழந்து நேரே என் வலது கால் முட்டிக்கும் கீழ் ஒன்பது அங்குலம், கணுக்காலுக்கு மேல் ஒன்பது அங்குலம் கூடிய மையப் பகுதியில் (சரியாக நடுக்காலில் ) மோதி, அவர் கீழே விழுந்தார். சில கணங்களுக்குப் பிறகு வலி தாங்காமல் நானும் விழுந்தேன்.... என் மேல் என் வண்டியும் விழுந்தது.... இளைஞர் சுதாகரித்து எழுந்து கொண்டு அவர் வண்டியை நிமிர்த்தினர்...
பொது மக்கள் பத்து பேர் உடனே எங்கிருந்தோ வந்து கூடி விட்டனர். ஒருவர் என் வண்டியை நிமிர்த்தி சாலையோரம் நிருத்தினார். இன்னும் சிலர் என்னை துக்கி சாலையோரம் கிடத்தினர் சுற்றி மக்கள் கூட்டம். என்னை இடித்த அன்பர், நான்தான் தவறு செய்தது போல் பேச ஆரம்பித்தார். எனக்கு தாங்கொணா வலியில் கடுங் கோபம் வர அவரைப் பார்த்து "என்னப்பா பார்த்து ஓட்ட மாட்ட ....? இவ்வளவு வேகமாகவா ஓட்டுவது...? உனக்கு ஒண்ணும் அடி இல்லையே...? (நன்கு கவனியுங்கள் இவரது காட்டமான வார்த்தைளே இவ்வளவுதான்.)
அதற்குள் கூட்டத்தினர் அடுத்த நடவடிக்கையாக உதவி செய்ய முயற்சித்தனர். கைப் பேசி இருக்கா? வீட்டு நம்பர் என்ன? எங்கே வீடு ? சராமாரியாக கேள்விகள். எனக்குக் கொஞ்சம் தண்ணீர் குடிக்க வேண்டும் போல் இருந்தது. கேட்டேன். தண்ணீர்....? தண்ணீர்....? என்று நாலு பக்கமும் குரல் பரவியது. ஆனால் தண்ணீர் எங்கிருந்தும் வரவில்லை. எங்கிருந்தோ ஒரு போலீஸ்காரர் உதயமானார். யார் இடித்தது என்று அவர் சுற்று முற்றும் பார்க்க, என்னை இடித்த அன்பர் அதற்குள் அந்த இடத்தை விட்டு நழுவி மறைந்து விட்டிருந்தார்.
என் கைப்பேசி மூலம் என் பெண்ணைத் தொடர்பு கொள்ள அவர்கள் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்தனர். அதற்குள் பொதுஜனம் என் கைப் பேசியில் உள்ள இன்னொரு எண்ணுக்கு தொடர்பு கொண்டார். எதிர் முனையில் உள்ள என் நணபரிடம் "சார் உங்கப்பாவுக்கு விபத்து ஏற்பட்டுள்ளது, உடனே வரவும்" என்றார். அது எப்படி என் நண்பர் எனக்குத் தந்தையானார் என்பது திருவாளர் பொது ஜனத்துக்கே வெளிச்சம். சூட்டிகையான நண்பன் சரியாக புரிந்து கொண்டு தன்னால் உடனே வரமுடியாது என்பதால் (வெளியூரில் இருந்தார்) மற்றொரு நண்பரிடம் தொடர்பு கொண்டு எனக்கு வேண்டிய உதவிகளை செய்யுமாறு கூறினார்.
இவையெல்லாம் நடந்தது அறியாமல் பாதை ஓரம் வலியால் துடித்துக் கொண்டிருந்த எனக்கு நண்பனிடம் இருந்து தொலை பேசி அழைப்பு வர, வலியிலும் ஒன்றும் நடவாதது போல் நலம் விசாரித்தேன். இடைமறித்த நண்பன் எனக்கு நேர்ந்த விபத்தைப் பற்றி வினவினான். அட ... நம் செய்தி இத்தனை விரைவாக பரவுகிறதே என்று வியப்புற்று "கவலை வேண்டாம் என் பெண் சிறிது நேரத்தில் வந்து விடுவாள்" என்று கூறினேன். எந்த தேவை என்றாலும் உடனே தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
போலீஸ்காரர் அந்த வழியே வந்த ஆட்டோவை நிறுத்தி முதலுதவிக்கு உடனே செல்லுமாறு பணித்தார். அவரை சற்று பொறுத்தருளக் கூறி "பெண் வந்து விடுவாள்" என்று கூறும் போழுதே மாப்பிள்ளையும் பெண்ணும் வந்தனர். என்னை காரின் முன் சீட்டில் வசதியாக(?) அமர வைத்து பெண் வண்டி ஒட்ட மாப்பிள்ளை பின் சீட்டில் அமர்ந்தார். அதற்கு முன் இரு சக்கர வண்டியை பத்திரப் படுத்தி சாவியை எடுத்துக் கொண்டு பொது மக்களிடமும் போலீஸாரிடமும் நன்றி கூறி விடை பெற்றோம்.
மருத்துவ மனை வந்து முதலுதவி பெற டாக்டருக்காக காத்திருக்க, வந்தவர் கணுக்காலில் எலும்பு முறிவு இருக்கலாம் என சந்தேகித்து நுண் கதிர் படம் எடுக்கப் பணித்தார். காலில் அடிபட்ட இடத்தில் மருந்திட்டு கணுக்காலுக்கு க்ரெப் பான்டேஜ் சுற்றினர். உடம்பில் சதைப் பகுதி தேடி ஒரு ஊசி போட்டனர். அங்கு நுண் கதிர் படம் எடுக்கும் வசதி இல்லாததால் அருகில் உள்ள ஒரு புதிய பெரிய மருத்துவமனைக்கு சென்றோம்.
மாப்பிள்ளை என்னை காரிலேயே அமரச் செய்து உள்ளே சென்று விசாரித்தார். இப்பொழுது நான் பின் சீட்டில் கால் நீட்டி சற்று அரைப் படுக்கை நிலையில் இருந்தேன். அடிபட்ட இடத்தில் எரிச்சலும், கணுக்காலில் வலியும் மிகுதியாக இருந்தது. நடுக்காலில் கருப்பாகவும் ஒரு முட்டை அளவு வீங்கி இருந்தது. மனம் மட்டும் லேசாக எதோ பறப்பது போல் பரபரப்பாக இருந்தது. வாய் மட்டும் மூடாமல் ஏதோ பேசிக் கொண்டிருந்தது. அடி பட்ட போது விரைந்த அட்ரினாலினின் பின் விளைவோ? கொஞ்சம் வேடிக்கையாகவும் இருந்தது. உள்ளிருந்து வந்த மாப்பிள்ளை x-ray வசதி இங்கும் இல்லை என்றும் அவர்களுடைய மற்றொரு கிளைக்குச் செல்ல வேண்டும் என்றார்.
ஒரு கி.மி. தொலைவில் உள்ள அந்த கிளைக்குச் சென்றோம். காரின் அருகிலேயே சக்கர நாற்காலி கொண்டு வந்தனர். கரடு முரடான பாதையைக் கடந்து சற்றே செங்குத்தான சரிவில் ஏற்றி ஒரு மிகச் சிறிய லிப்டிற்குள் தள்ளினர். எப்படியோ செவிலியரும் தன்னை அந்த லிப்டிற்குள் நுழைத்துக் கொண்டார். நிச்சயமாக மாப்பிள்ளைக்கும் பெண்ணிற்கும் அதில் இடம் இல்லை. அவர்கள் இரண்டு மாடி ஏறித்தான் ஆகவேண்டும். படுத்த நிலையில் நோயாளி வந்தால் என்ன செய்வார்கள்? (அந்தப் பக்கம் செல்லும் போது விசாரிக்க வேண்டும்). மேசை மேல் அமர வைத்து, காலின் கீழ் x-ray film வைத்து ஒரு தடுப்பின் பின்னால் ஒளிந்து கொண்டு இரண்டு முறை படம் எடுத்தார். சிறிது நேரத்தில் படத்தை கையில் கொடுத்து, கூடுதல் தகவலாக எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக நுண் கதிர் படம் எடுத்த நிபுணர் கூறினார். மீண்டும் அந்த இடுக்கமான லிப்டின் உள் புகுந்து தரைத் தளத்தில் வெளி வந்தேன். அந்த சாய்வான பகுதியில் இப்போது கீழ் நோக்கி (உருண்டு ஓடிவிடாமல் இருவர் பிடிக்க) பத்திரமாக கரடு முரடு பாதை தாண்டி காரின் அருகில் சேர்த்தனர்.
மீண்டும் முதலுதவி பெற்ற இடத்துக்குச் சென்றோம். என்னைக் காரிலேயே அமர வைத்து என் கால் படத்துடன் உள்ளே சென்றனர். திரும்பி வந்தவர்கள் கணுக்காலில் ப்ராக்சர் உறதி காலில் இன்னொரு ப்ராக்சர் இருக்கிறதா என்று உறுதி செய்ய ஐந்து கி.மி. தொலைவில் உள்ள நிபுணரைப் பார்த்து வரச் சொன்னார். நான் என் மகளிடம் அவ்வளவு தொலைவு செல்ல வேண்டாம் அருகில் ஒரு எலும்பு முறிவு நிபுணர் உள்ளார் அங்கு செல்லலாம் என்றேன். மணி சுமார் காலை 10:00 இருக்கும். மருத்துவர் இன்னும் வரவில்லை. காலையிலிருந்து நான் ஒன்றும் உண்ணாமல் இருந்ததால் வீட்டுக்குச் சென்று என்னை விட்டு விட்டு பிறகு தான் மட்டும் x-ray படத்துடன் சென்று வரலாம் என பெண் முடிவெடுத்தாள்.
எனக்கு எல்லாம் பாதி பாதி புரிந்தது போல் இருந்தது. கொஞ்சம் மையமாகவும் மௌனமாகவும் இருக்க முயற்சித்தேன். (எல்லாம் அவள் பார்த்துப்பா என்ற தைரியம் உண்டு). போகும் வழியில் மாப்பிள்ளை இறங்கினார். அவர் அலுவலகம் செல்ல வேண்டி இருந்ததால் இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு அவர் வீட்டுக்குச் சென்றார். இனிமேல் எனக்கு இரு சக்கர வாகனம் கிடையாது என்றும் அதை அவர் பறிமுதல் செய்வதாகவும் அறிவித்தார். இனிமேல் எங்கு செல்வதானாலும் காரில்தான் செல்ல வேண்டும் என்ற கட்டளை வேறு. (அருகில் உள்ள பெட்ரோல் பங்க் கடைக்காரர் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிப்பது கேட்கிறது)
என்னை வீட்டில் கொண்டு சேர்த்து சிறிது காப்பி அருந்தி விட்டு பெண் மீண்டும் எலும்பு முறிவு நிபுணரிடம் சென்றாள். நிபுணர், 'நோயாளியை அழைத்து வந்தால்தான் எதுவும் கூறமுடியும்' என்று கூற, மீண்டும் வீட்டிற்கு வந்து என்னை அழைத்துச் சென்றாள். பரிசோதித்த நிபுணர் கணுக்கால் எலும்பிலும், பாதத்தின் மேல் பக்கத்தில் உள்ள ஒரு எலும்பிலும் மயிரிழை விரிசல் விட்டிருப்தாகவும் 'காலை' கீழே வைக்காமல் இருந்தால் க்ரேப் பான்டேஜில் சரியாகிவிடும் என்றார். காலில் பஞ்சை சுற்றி கணுக்காலையும் பாதத்தையும் சுற்றி கட்டு போட்டு விட்டார். நடுக்கால் அடி பட்டு வீங்கி இருந்தாலும் சேதாரம் ஒன்றுமில்லை.
ஒரு வாரத்திற்கு தேவையான பல மாத்திரைகளும், ஒரு மாதத்திற்கு தேவையான சில மாத்திரைகளும் எழுதி, அதை அவரிடமே வாங்க வேண்டும் என்று பணித்தார். பல ஆயிரங்கள் ஆக அருகில் உள்ள ATM சென்று வந்து பணம் செலுத்தினாள் பெண். ஐந்து நாட்களுக்குப் பின் மறு பரிசீலனைக்கு போக வேண்டும். ஐந்து நாட்களுக்குப் பிறகு மீண்டும் x-ray, மேலும் ஒருவாரம் கழித்து பரிசீலனை என ஒருமாதம் ஒற்றைக் கால் வாழ்க்கை. முடிவாக முப்பத்திரண்டு நாட்களுக்குப் பிறகு காலை கீழே வைக்கலாம், நடக்கலாம் என்றார். காலை கீழே வைத்தால் "ஆ...ஆ..." ஏன் இப்படி விநோதமாக இருக்கிறது? ஏன் நடக்க முடியவில்லை....?
ஒரு சின்ன பின்னோடடம் இங்கே சொல்வது பொருத்தமாக இருக்கும். ஒரு இருபத்தைந்து வருடங்களுக்கு முன் என் மாமனார் தொடை எலும்பு முறிந்து அறுவை சிகிச்சை செய்த பிறகு நடக்க முற்பட்ட போது நான் அவரை "நடங்க சார் கமான்... கமான்" என எப்படி உற்சாகப் படுத்தினேன். அவரும் பல்லைக் கடித்துக் கொண்டு (மாப்பிள்ளை ஆயிற்றே ஒன்றும் சொல்லமுடியாது) மெல்ல சிரித்துக் கொண்டு "அப்பறம் ட்ரை பண்ரேன் சார்" என்பார். இன்றுதான் அன்று அவர் எப்படி கஷ்ட்டப் பட்டிருப்பார் என்பது புரிகிறது. நான் கிண்டியில் குதிரையை கூப்பிடுவது போல் "கமான் ... கமான்... " என்று என்ன பாடு படுத்தினேன்... பாவம் நல்ல மனிதர் ஒன்றும் சொல்லாமல் சிரித்து மழுப்பியது இன்றும் கண் முன் நிழலாடுகிறது....
நாம் இரண்டு கால்களுடன் சுலபமாக நடக்கும் போது ஒரு கால் மற்ற காலுக்கு எவ்வளவு உதவியாக இருக்கிறது என்பதை உணர்வதே இல்லை. ஒற்றைக் காலால் நடக்கும் போதுதான் இரண்டாவதின் இன்றியமையாத தன்மை புரிகிறது. ஒரு ஐந்து அடி நொண்டினால் இந்த கால் எவ்வளவு வலிக்கிறது. சிறிது நேரம் கூட ஒற்றைக் காலால் நிற்க முடிவதில்லை. நின்றால் சமனில்லாமல் அப்படியே ஒரு பக்கம் தள்ளி விடுகிறது. முப்பது நாட்களுக்குப் பிறகு காலை கீழே வைத்தால் அந்தக் கால் நமது போலவே இல்லை. இடமும் வலமும் வேறு வேறு கதியில் இயங்குவதால் நடப்பது மிகக் கடினமாக உள்ளது. ஒன்றோடு ஒன்று வேறுபட்டு நம்மை கீழே தள்ள முயற்சிக்கிறது.
இரண்டும் இணைந்து பயணிப்பதன் இனிமை ஒரு காலை உடைத்துக் கொண்டா புரிதல் வேண்டும்...... இது போல் தானோ இரண்டு கரங்கள், இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரு மனங்கள்.....?
படித்தவர்களுக்கு வேறு ஏதாவது வாழ்க்கைப் பாடம் உணர்த்தினால் என் காலில் அடிபட்டதில் ஏதோ பயன் உண்டென்று நான் மகிழலாம்.....
-----------oooOooo----------------

