சாதி ஒழி மதம் அழி சாதி-பொங்கல் கவிதைப் போட்டி 2015

உயர்ந்தவர் தாழ்ந்தோர் என்ற
உண்மை இல் கற்பிதங்கள்
பயன்தரா மதத்தின் பேரால்
படைத்திட்ட படிமம் இன்று
வியந்திடும் விகாரம் பெற்று
வீச்சரிவாளாய் மாறி
பயம் தரும் பேயின் கையில்
பலி எடுத்திடத் துடிக்குதன்றோ

நந்தனைத் தீயில் இட்டார்
நாயன்மாரோடு சேர்த்தார்
நந்திக்கும் சந்நிதிக்கும்
நடுவே ஏன் சுவரை வைத்தார்
சிந்தித்தும் விடை கிடைக்கா
சிதம்பர ரகசியங்கள்
சந்திக்கு வந்தபின்பும் -பாவச்
சரித்திரம் மாறவில்லை!

குடித்திடக் குவளை இரண்டு
குளித்திடக் கிணறு இரண்டு
எரித்திடச் சுடலை இரண்டு
எப்போது இவை தாம் ஒன்று?
ஒன்றே குலம் என்றெண்ணும்
உயரிய சிந்தை கொண்டு -நாம்
ஒரு மதம் வர்க்கம் என்போம்
நன்றே நம் இனம் தழைக்க!


மேலுள்ள படைப்பு எனது சொந்தப் படைப்பு என்பதை உறுதி மொழி செய்கிறேன்.

எழுதியவர் : உமை (15-Jan-15, 3:19 am)
பார்வை : 86

மேலே