சாதி ஒழி மதம் அழி சாதி - பொங்கல் கவிதை போட்டி - வினோதன்
யார் செய்த சதி இச்சாதி ?
யார் கலந்த மாசு இம்மதம் ?
அண்ட விந்துக்கள் சமரிட்டு
பூக்கும் நம்முள்ளிவை புகுந்ததெப்படி ?
ஆதிமனிதனின் அடையாளமென்ன ?
மனிதனென்பது மட்டும் தானே ?
இடைசெறுகளால் விளைந்த
இடைஞ்சல்களே இக்கருமமெல்லாம் !
சாதி, மத கொடி தூக்குவோருக்கு
தனித்தனி குருதிவகை உண்டோ ?
வரன் பார்க்கையில் இவை பார்க்குமிவர்கள்
இரத்தம் தேவையெனில் மறப்பதேன் ?
இரயில் கொளுத்துபவன் - வளம்நோக்கி வால்நீட்டி
வன்முறை செய்பவன் - பிஞ்சுக் குழந்தைகளைகூட
பிய்தெறிபவனென யாரெனினும் மதம் பார்ப்பதில்லை
நான் - மனிதத்திற்கு எதிரியெனில் எனக்கும்தான் !
தசையாலான உடம்பில் எத்திசையிலும்
சாதி மதத்திற்கென தனியுறுப்பு இல்லை !
திசுக்களின் தேவை பிராணவாயு மட்டுமே !
உங்கள் காமம் மட்டுமெப்படி அப்பாற்பட்டதாய் ?
சாதியையும் மதமும் நுண் அரசியற் கருவிகள்
அவற்றின் தூபமிடுதலும் அரசியல் தேவைகளே !
ஆண் பெண்ணென இருசாதி - மனிதமென்னும்
ஒரே மதம் - என்பதை தவிர வேறொன்றுமில்லை !
- வினோதன்
இவை என் சொந்த வரிகளென உறுதியளிக்கிறேன்
இர.வினோத்கண்ணன் பி. ஹெச்டி
இணை ஆராய்ச்சியாளர்
உயிர்தொழிற்நுட்பவியல்
இந்திய தொழிற்நுட்பக் கழகம் - மெட்ராஸ் (IIT Madras)
சென்னை - 600 036
அழைப்பிலக்கம்: 9894326328