கலைப் பொங்கல் வாழ்த்து
புதுப்பானை வைத்து புலரிவரும் வேளை
புதுவேகத் தோடே புவிமேல் –புதிதாக
பொங்க லிடுமின்நாள் வாழ்வில் ஒளிவெள்ளம்
தங்கிடவேச் செய்யும் வழி
மஞ்சள்நீ ராடி மனைவாசல் கோலமிட்டு
துஞ்சுகின்றச் சூரியனைத் தொட்டெழுப்பி – நெஞ்சத்தால்
பொங்கும் நிறைவானப் பொங்கல் நிலம்விளைய
பங்களித்த நன்றிப் பகர்வு.
இடர்நீக்கி வையம் எதிர்நோக்கும் இன்பச்
சுடர்தேக்கி வந்தே நிதமும் – படரும்
இருள்போக்கி என்றென்றும் ஏழை எளியோர்க்கு
அருள்வார்க்கும் பொங்கல் அமுது
எழுத்து இணைய தளவயல் நின்றே
அழுத்தமாய் தோன்றுகின்ற எண்ணம் உழுது
கவிதை விளைந்த கலைப்பொங்கல் பொங்கும்
கவிஞர்க் கெனதன்பு வாழ்த்து !
*கவிஞர்களுக்கு மட்டுமல்ல எழுத்து இணைய தள உரிமையாளர்கள் மற்றும் நண்பர்கள் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்
*வாழ்த்துக்களுடன்
மெய்யன் நடராஜ்