வெள் ஆமை
வெள்ளாமை என்று முன்னோர்கள்
சரியாகத்தான் சொன்னார்கள்
நாகரிக ஓட்டப் போட்டியில்
வெல்லாமையே விதியானது
விவசாயம் என்றும் முன்னோர்கள்
சரியாகவே சொன்னார்கள்
நாகரிகம் வெளுத்து வாங்கியதில்
சாயம் வெளுத்துவிட்டது
எருமைப் பூட்டி மனிதர்கள்
உழுவதை மறந்ததால்
வறுமைக் கோட்டில் மனிதர்கள்
விழுவதைப் பெற்றார்கள்
கல்லுக்குள் மறைந்துள்ள சிற்பத்துக்கு
உளிதான் காரணம்
நெல்லுக்குள் மறைந்துள்ள மணிகளுக்கு
களிதான் காரணம்
மண்ணைப் பரிசாகப் பெற்றவர்கள்
தரிசாக விட்டதால்
மண்ணை அரிசியாக மாற்றுவது
நின்று விட்டது
கோவணம் கேவலம் என்று
ஆவணம் ஆனதால்
கச்சை கட்டிய விவசாயி
பிச்சை கேட்கிறான்
மதுக்கடை திறந்தவன் எல்லாம்
புதுக்கடையும் திறந்துவிட்டான்
வயிற்றில் பால்வார்க்கும் விவசாயி
கயிற்றில் தொங்கிவிட்டான்
உணவு உடை உறையுள்
மனிதனுக்கு அடிப்படை
சிந்தித்தால் இவை மூன்றுக்கும்
விவசாயமே அடிப்படை
பொங்கலன்று அரிசி எல்லாம்
பொங்கித்தான் அழிகின்றன
அடுத்தவருடம் பொங்கும் அரிசி
என்னால் விளைந்ததாய் இருக்கட்டுமே!