பயணம் ஒன்று கிளம்பப் போகின்றேன்
பயணம் ஒன்று கிளம்பப் போகின்றேன்
--பார்ப்பவர் பைத்தியமென்று சொல்லும் அளவுக்கு- மொத்த
பல்லைக் காட்டி இளிக்கப் போகின்றேன்
மயில் வண்ண மாற்றுத் துணியிலே-உயர்ந்த
மாருதம் எல்லாம் இரசிக்கப் போகின்றேன்
--மலைமீது பொழியும் மழையின் துளிகளை - என்
மைவிழிகள் அசையாது காணப் போகின்றேன்
உயிரைத் தொடும் மெல்லிய பூங்காற்றில் - என்
நனைந்த உடைகள் உலர்த்தப் போகின்றேன்
--உரசி உரசிப் பேசும் இலைகளைப் - பார்த்து
கலவிக் கொஞ்சம் கற்கப் போகின்றேன்
தனியொரு அன்றிலை தண்ணீரில் கண்டால்- அதன்
தவிப்பைக் கொஞ்சம் குறைக்கப் போகின்றேன்
--மனிதன் ஒருவன் பசியில் இருந்தால் - என்
உணவு தந்து பசியாற்றப் போகின்றேன்
நடந்து போகும் வழியிலே நாணம்- மறந்து
நடனம் கூட ஆடப் போகின்றேன்
--நதியும் கடலும் இணையும் புள்ளி - இதுவென்று
நானே உங்களுக்குச் சொல்லப் போகின்றேன்
உழுவது எப்படி யென்று உழைக்கும் -ஒரு
உழவனைக் கண்டு உரையாடப் போகின்றேன்
--எழுவது எப்படி யென்று எரிமலைச் -சென்று
எழுத்தாணியிலே குறிப்பொன்று எழுதப் போகின்றேன்
இமைகளும் இதயமும் பேசும் மொழி - புரிகிறதா
என்று இயற்கையைக் கேட்கப் போகின்றேன்
--இறுக்கி அணைக்க ஆசை; உன்னுருவம் - கொஞ்சம்
காண்பியென இறைவனை வேண்ட போகின்றேன்
ஊரை நன்றாய் இரசித்து
உடலும் கொஞ்சம் வியர்த்து
ஆடிப் பாடிக் களைத்து
அயர்ந்து நானும் உறங்கப் போகின்றேன் - அதில்
இப்படியே ஒரு கனா காணப் போகின்றேன்