நீரோடை - சுதந்திரத்திலொரு சுகம்
சுதந்திரமாய் ஒரு சொத்து
தெளிவான திருவிழா
திரையிடா தொருவிழா
நதியோடும் நகையோடும்
நாம்காணு மொருவிழா!
இமைமூடா பார்வைக்குள்
ஈடில்லா காட்சியதில்
இமயமென நிற்கின்றாள்
இனிவருமா என்றிவளோ..?
படிக்கட்டு போட்டாலும்
பதட்டங்க ளில்லாமலே
பக்குவமாய் நடக்கின்றாள்
பதிலேதும் சொல்லாமல்..!
வெள்ளியலை சொந்தக்காரி
விரதத்தில் இருக்கின்றாள்
வேகத்தை குறைத்துவிட்டு
விவேகத்தி லுள்ளதுபோல்..!
வெயிலோடு விளையாடும்
வெண்தேகம் இவளுக்கு
காவலாக நிற்கின்றான்
கரைமீது தென்னையவன்..!
பசுமையவள் பாதுகாப்பில்
பயமிலா பெண்ணொருத்தி
நாடியதை பிடித்தபடி..
நடனமாடி வருகின்றாள்..!
துள்ளிவிழும் நீரலைகள்
துரத்திவரும் கதிரலையால்
கண்களிலே மின்னுதடி
காணாத வைரம்போல்..!
சொல்லிவிட்டு மாளாது
சொர்கமதை வாயளவில்,
சுதந்திரத்தை யென்மனதில்
சொத்தாக்கித் தந்தவளை..!