புது பெண்ணின் வேண்டுதல்

பூ சிரிக்கும் தோட்டத்தில்
புதுசா மணமானவள் புழுங்கி சொன்னது...,

வண்ண வண்ண பூத்தொடுத்து,
வாழகட்டை நாறெடுத்து...
மாலை ஒன்னு நான் முடித்து
போடுறேண்டா ஒனக்குன்னு
வரம் ஒன்ன கடனா கேட்டு
போயிருந்தேன் கடவுள் கிட்ட....!
வரமாத்தான் நான் கேட்ட,
தாலியத கழுத்தில் முடிக்க...
ஐப்பசியில் வரன் பேசி
அப்பனாத்தா சேர்ந்திருந்து
தைமுகூர்த்த தேதியில கரை சேத்து விட்டாங்க.....!!
போற எடம் எப்படியோ- ன்னு
நான் முழிச்சி கெடந்திருக்க,
புருசனுந்தான் என்கிட்டே அனுசரிச்சு நடக்கையிலே
பாக்கியந்தான் முன் சென்மம் செஞ்சிருக்கோம் நாமன்னு
களிப்போடு வாழ்ந்திருந்தேன்...
வேண்டுதல் கடனயுந்தான் மறந்திருந்தேன்....
நெற்றி வகிட்டில் மொதோ மொதலா
குங்குமந்தான் நானும் வச்சி
மாசம் இது ஏழோடு எட்டுமாச்சி....
விஷேசந்தான் ஏதுமுண்டா - ன்னு
பாக்குற எல்லாம் கேட்டுப்போக...
பதில் சொல்லி அலுத்தாச்சி....!
மகராசி என் மாமியா
ஜாடைப்பேச்சும் அதிகமாச்சி....!!
மாசாமாசம் வீட்டிலே ஒதுங்கும் "அந்த"
அஞ்சுநாளும் நரகந்தேன்...!!!
அடுத்த மாசம் "அந்த நாட்கள்" வராமலே போகாதா...?
வயித்தில தான் எனக்கேதும்
ஜீவன் வந்து சேராதா.....?
"தெய்வ குத்தம் ஏதுமுண்டா?" - என
என் அம்மா வந்து கேட்டு போக,
அடடடா மறந்தேனே ...,
புள்ளையாருக்கு மலைக்காட்டி போடுறேன்னு சொன்னேனே....
ஞாபகந்தான் வந்துவிட, ஓடோடி வந்தேன் பூப்பறிக்க...
காத்தடிக்க தலையாட்டும் மல்லிகையே... மல்லிகையே...
ஒன்ன நான் பறிச்சு புள்ளையார்க்கு,
மாலையாத்தான் போடப்போறேன்...
பழைய கடனடைக்க போற என்னால்
வரம் கேட்க்க முடியாதே...
தாலியத நான் கேட்டேன்
தந்துபுட்டான் எனக்கவந்தான்...
அந்த கடனடைக்க மாலை உன்ன,
அவன் கழுத்தில் போட்டிடுவேன்...
காதோரம் தொங்கும் நீ,
என் கலக்கத்த சொல்லிவிடு.....
மறுமாசம் எனக்கு "அந்த நாள்" வராமல் தள்ளிவிடு.....!!!!

எழுதியவர் : கவிமணி (19-Jan-15, 7:27 pm)
பார்வை : 176

மேலே