உயிர் தந்த தேவதைக்கு-- அரவிந்த்
ரத்தத்தை பாலாக்கி
என் பசியாற்றி,
என் பிறப்புக்காக
ஒரு மறுபிறப்பு
பிரசவத்தில் எடுத்த,
என் தாய்க்கு
ஒரு கவியெழுத ஆசைப்பட்டேன்...
தமிழ்த்தாய் துணை கொண்டு
கவியின் உச்சத்தை தொட்டு எழுதினாலும்
ஈடாகுமோ
அம்மா என்ற வார்த்தைக்கு..
கருவில் நான் உதித்த
முதல் நொடி முதல்
எனக்காகவே வாழ துவங்கிய
தியாகத்திற்கு நிகராய்,
எத்தனை
தங்கக்கட்டிகள் வைத்தாலும்
ஈடாகுமோ...
உறக்கத்தை துறந்து
உணவினை மறந்து
பத்தியத்தின் பக்குவத்தை புரிந்து
தன்னை மறந்திருப்பாள் அவள்...
என்னால் வலி பிறக்க
அதை சந்தோஷ கண்ணீரால்
ரசித்திருப்பாள்...
உனக்கு
வலி கொடுத்ததால் தானோ
அழுதுகொண்டே
பிறந்தேனோ நான்...
என் முதல்
அழு குரல் கேட்டு
கசிந்த கண்ணீர்த்துளிகளை
துடைத்து சிரித்திருப்பாய்...
கொடிகளை தாங்கும்
கிளை போல
என்னை மார்போடே
தாங்கி வளர்த்தாய்...
தட்டி தவழ்ந்து
நடை பழகும் நேரத்தில்
என்னோடு குழந்தையாய்
மாறினாய்...
பால் மனம் வீசும்
என் தேகத்தை
ஆசையோடு அணைத்து
முத்தங்கள் பதித்தாய்...
ஆணாக நான் பிறந்திருந்த போதிலும்
பெண்ணாடை அணிவித்து
பூரிப்படைந்தாய்...
கண்மூடி ஒருகணம்
கடந்த காலம்
செல்கிறேன் தாயே..
என் நாவில்
உணர்கிறேன்
தாய்பாலின் சுவையை..
என் கன்னத்தில் உணர்கிறேன்
நீ பதித்த
முத்தங்களின் ஈரங்களை ...
கொடியாய் உன்மேல்
நான் தவழ்ந்த
உன் தேகத்தினை
என் மார்போடு உணர்கிறேன்
கசிகிறது கண்ணீர் துளிகள்...
வாய் திறந்து பேசா நிலையில்
என் வாய் பார்த்து நின்றவள் நீ
இப்போது பேசுகிறேன் நான்...
தொலைதூரத்தில் நீ,
உன் கல்லறையில் புலம்புகிறேன் நான்
ஒவ்வொரு ஆண்டும்...
என்னை பிரிந்து சென்றது ஏன்
என்னை உன்னுடன்
அழைத்து செல்லாதது ஏன்....