காற்றில் மிதக்கும் இறகு -26

தூரத்தில் புள்ளியாய் நிற்கின்றேன்
தூரத்து தேசங்களை நினைத்தப்படி !
தூற்றவும் மனமில்லை தாய்நாட்டை
போற்றாமல் சிந்தித்தன படும்பாட்டை !
காற்றில் வந்திட்ட இலையொன்று
அருகில் வராது தள்ளியேநின்றது !
தனிமையில் சிந்தனை என்னவென
தாங்காமல் வினவியது என்னையும் !
வெறுத்து வந்திட்டேன் இவ்விடமே
பொறுத்து பார்த்தேன் இயலவில்லை !
நொடிக்கொரு கொடியும் பிறக்குது
கோடிகளும் வானுயரம் பறக்குது !
அழிக்கவே முடியா வறுமைக்கோடு
அறிந்திடா வழியுமிங்கு சாபக்கேடு !
பஞ்சமிலா வஞ்சகங்கள் பரவுகிறது
பட்டினிச் சாவுகளோ உயருகிறது !
சாதிமத வேறுபாட்டால் வன்முறை
இனம்மொழி வெறியால் கலவரம் !
தாய்மொழி காத்திடவோ நாளும்
சேய்களோ செய்கிறது போராட்டம் !
அழுக்கான அரசியலும் ஆட்டமிங்கே
அறிந்திட்ட வாக்காளர் காட்டமிங்கே !
புரிந்திடும் தவறால் புண்ணாகின்றனர்
புரிகின்ற காலத்துள் மண்ணாகின்றனர் !
உழுதிட்ட உழவனுக்கோ நிலமில்லை
உழவனின் வாழ்விலோ வளமில்லை !
வயல்களின் வண்ணமோ மாறுகின்றது
வரப்புகளும் சுவடின்றி மறைகின்றது !
வறியவர் எண்ணிக்கையோ கூடுகின்றது
வரிசையும் மதுக்கடையில் நிலையாகுது !
விற்பனையோ பெருகுது கல்வியிலும்
விற்பன்னர் முதலிடம் விளம்பரத்தில் !
விண்ணைத் தொட்டிட போட்டியிங்கே
விலைவாசி நொடிதனில் ஏறுதிங்கே !
வழிகிறது முதியோர் இல்லங்களும்
வலிக்கிறது காணும் உள்ளங்களும் !
அடுக்கியதால் அயர்ந்திட்டேன் நானும்
அலைபாயும் நெஞ்சமும் வருந்தியது !
தனித்து நிற்பதின் காரணம் புரிந்ததென
தனித்தே வந்திட்ட இலையும் தவித்தது !
காற்றில் வந்திட்ட இலையும் பறந்தது
வந்திட்ட வழிநோக்கி மீண்டும் சென்றது !
காற்றில் மிதந்த இறகுகளின் தாக்கமிது
வருந்தும் இதயத்தில் பிறந்த வரிகளிது !
பழனி குமார்
( கவிதைக்கு காரணம் , நண்பர் குமரேசனின் காற்றில் மிதக்கும் இறகும்
அதன் தொடர் கவிதைகளும் . நன்றி அனைவருக்கும் )