படித்து மூடிய பழைய புத்தகத்தின் பக்கங்கள்

படித்து மூடிய பழைய புத்கத்தின் பக்கங்கள்...

தூசிதட்டி பார்க்க எத்தனிக்கும் நொடிப் பொழுதில் நாசியை எட்டிப்பார்க்கும் என்றோ ஒருநாள் சுவாசித்தல் மணம்...

புரட்டிய பக்கம் ஒன்றில் பாடம் செய்த செம்பருத்தி, சாயம் போயும் அழகாய் மலர்ந்து சிரிக்கிறது...

சாப்பிடும் பொழுது சிதறி மிச்சங்கள் எச்சமாக ஒட்டிய வடுக்கள் சில பக்கங்களில்..

தோழன் ஒருவன் வரைந்து வைத்த சித்திரம் சிரித்தபடி நண்பனை நினைவுபடுத்தும் நொடியில் அடுத்த பக்கம் கடக்கிறேன்...

குட்டிக்காக அடைகாக்கும் மயில் இறகுகள் வருடங்கள் கடந்தும் அதே பக்கத்தில்...

75 பைசா பச்சை வண்ண பயணச்சீட்டு ஒன்று திறந்த பக்கம் ஒன்றின் மூலையில் அடிக்கும் குளிருக்கு வெதுவெதுப்புக்காக ஒன்றியபடி...

அரைகுறையாக கிழித்து மிஞ்சிய பக்கம் ஒன்றில் பென்சில் கொண்டு அச்சிட்ட ஐந்து பைசா, இருபது பைசா சுவடுகள் நினைவு சின்னமாய்...

என்றோ ஒருநாள் படித்து மூடி வைத்த புத்தகத்தின் பக்கங்கள் நினைவலைகளை சேமித்து நிற்கும் அரிய பொக்கிஷ பெட்டகமாய்...

அறிவியல் வளர்ச்சிதனில் மென்பொருளாய் புத்தகங்கள். பக்கங்களை புரட்ட முடியா இன்றை தலைமுறை இழந்து கொண்டு இருப்பது என்றோ ஒரு நாள் சுவாசித்த நறுமணத்தை மட்டும் அல்ல சந்தோஷமாக நினைவலைகளை பக்கம் பக்கமாய் திரும்பி பார்ப்பதையும் தான்....

எழுதியவர் : இராமதுரை ஜெயராமன் (22-Jan-15, 12:27 am)
சேர்த்தது : ராமதுரை ஜெ
பார்வை : 174

மேலே