இவனின் பூகம்பம் -சந்தோஷ்
இவன் இவனாக இல்லை
இப்போது மட்டுமல்ல எப்போதும்.
இவன் , கடந்த
காலடியின் பாதச்சுவடுகளின்
ஒவ்வொரு பதிவிலும்
ஒவ்வொரு பூகம்பம் ஒளிந்திருக்கிறது.
இவன் பார்வையற்றவனும் இல்லை
தொலைத்தூர பார்வையாளனுமில்லை
கிட்டப்பார்வையில்
காதலை எட்டியுதைத்திடுவான்.
கிட்டகிட்ட நெருங்கி
அன்புகாட்டினால் கட்டிக்கொள்வான்.
இவனை இவனாக
யாரும் விடுவதில்லை.
இவன் அன்பில்
யாவரும் அவர்களாக
இருந்ததுண்டு..-அவர்களால்
இவனும் இறந்ததுண்டு..!
அன்பு என்பது
இருந்தால் அமுதம்
விலகினால் விஷம்.
இவனின் இருதயம் கோப
இரும்புத்துண்டுகளை தின்று கொழுத்தது.
இரும்புத்துண்டு மென்பூவாய்
இவனாலே மாறுவதுமுண்டு.
புறக்கணிப்பு விரக்தியால்
இவனின் நுரையீரலில்
நிக்கோட்டிங் கோபரத்தை
கட்டிவைத்திருக்கிறான்.
கோபுரங்கள் சாய்வதில்லைதான்
ஆனால் சாகடிக்கும் .
இவனொரு புற்றுநோயாளி
இவன் , கடந்த
காலடி பாதச்சுவட்டின்
ஒவ்வொரு பதிவிலும்
ஒவ்வொரு பூகம்பம் ஒளிந்திருக்கிறது
பூகம்பம் ,
என்றாவது சாதனையாய் வெடிக்கும்.
அன்று நீங்கள் கைத்தட்டும்போது
இவனின் புகைப்படத்தில்
பூமாலை போடப்பட்டிருக்கும்..!.
-இரா.சந்தோஷ் குமார்.