பிறந்தநாள் பரிசு
தீபாவளித் தினத்தன்று ...
உன் அத்தைமகளின் உடைகண்டு
அழகாயிருக்கிறதெனச் சொல்லி
அத்தையைக் கண்டவுடன்
சும்மாச்சொன்னேனென்ற
உன் குட்டிப் புளுகில்
மொத்த குடும்பமும் சிரித்துமகிழ
நீயும் ... சிரித்த பொழுதிற்கீடாய் ...
பொங்கலன்று வேட்டியில் நான்வர
அப்பா மாப்பிள்ளை மாதிரியிருக்காரென
அம்மாவிடம் நீ உரைக்க
பொண்ணு யாருடாவென அவள் சீண்ட
நீதானம்மா ... எனச்சொன்ன
உன் குறும்பு ...பேச்சிற்கீடாய்...
என்விரல் பிடித்து நீ நடைபயின்று
என் உடல்முழுதும் நீ விளையாடி
வாய் வலிக்கும்வரை உன் மழலைகேட்டு
பாய் விரிக்கும்வரை உன் சேட்டைதாங்கி
தினம் ...தினம் ..நகரும் தீராத பொழுதிற்கீடாய்
எதை தருவேன் ...என் மகனே... ?
அரவமாய் தீண்டிய நட்பு
அலுவல் பணியின் தவிப்பு
பணமின்றி கடந்த நாட்கள்
பிணம்போல் உடைந்த நொடிகளென
நான் நொறுங்கி சிதைந்த பொழுதெல்லாம்
மறவாதெனை மீட்டெடுத்ததுன்
மழலை மொழியல்லவா ..!
எப்பொருளை நீ வாங்கினாலும்
எனக்கொன்று என் அக்காவிற்வொன்றென
நீ ..மொழியும் போது..மெல்ல
என் சகோதரியின் நினைவுகளை
என்னுள் ..நீ மீட்டினாய் ...
என்னால் பதிலளிக்கவியலா...
ஏதோவொரு உன் கேள்வியால்
நானிப்படி இருந்திருப்போனோவென்று
என் தந்தையின் நினைவுகளை
என்னுள் ...நீ மீட்டினாய் ...
பொய்யாக என் மனைவியை
நான் கோபித்தாலும்
மெய்யென நீ எண்ணி
உன் தாய்க்கு பரிந்து நீ வருகையில்
என் தாயின் நினைவுகளை
என்னுள் ...நீ மீட்டினாய் ...
புதிதாய் நம் வீட்டில் நுழைந்த
குட்டி மழலையை யாரடா இதுவென
உன் சித்தப்பன் வினவ ...
என் தங்கையென நீ சொந்தம் சொன்ன நொடிகளில்
என் சகோதரனின் நினைவுகளை
என்னுள் ..நீ மீட்டினாய் ...
இன்றுனக்கு ஆறாவது பிறந்தநாளாம்...
எதைத் தரலாம் எனப்பலவாறு யோசித்து
வழக்கம்போல் மிட்டாயும் ..கேக்குமாய்
நான் வீடு வந்து சேர ...
முழுமையாய் நீ மகிழ்ந்து நின்றாய் ..!
ஆனாலும்
அன்றொரு பொழுது ...
நடுநிசிவரை முழித்திருந்து
நீயும் ..உன் அக்காளும்...
அவள் செய்த கோதுமை விநாயகரையும்
நீ ..நீயாய் வரைந்த ஓவியக்கிறுக்கலையும்
என் விரல் பிடித்து எனக்களித்து
பிறந்த நாள் வாழ்த்துச்சொன்ன
உன் அன்பு மழலைக்கீடாய்
"உன் பிறந்த நாள் பரிசாக "
எதைத்தருவேன் ...நான் ..என்மகனே ..?
-------------------------------------------------------------------------------------------------------------
(இன்று 23.1.2015 என் மகனின் 6 வது பிறந்த நாளுக்காய் நான் எழுதிய கவி )
குமரேசன் கிருஷ்ணன்