மனிதக் காதல் அல்ல -ரகு
எள்ளளவில் தான்
உள்ளே
விழுந்திருக்கும்
உன் பார்வை
குடிசையுள்
பற்றவைத்த
விளக்காய்
ஒளிர்ந்தது
இதயம்
சந்திப்பினூடே
ஊடலின்
பிரவாகம்
சிலபல
நாட்களில்
சாத்தியமானது
நம்
காதலுக்கு
நாம் சந்திக்க
புங்கையொன்றின்
நிழல் தேர்ந்து
பரப்பியிருந்தோம்
நம் காதலை
அது
வெட்டியானின்
வேட்கையில்
பின்னொருநாளில்
காணாமற் போனது
வேறுகதை
கனல்
கொஞ்சம்மூட்டிப்
பார்த்தோம்
அவ்விடத்தை
ஒருநாளில்
புங்கையின்
வேர் பதித்த
தடயத்தில்
விழுந்து தெரித்தது
நம் காதல்
மரமாற்றம் புரிந்து
நமக்கிடையிலான
அலைகள்
தெளித்தோம்
நிழற்பரப்பில்
நம்
காதலுக்குப்
பிறகான
மழைநாள் அது
மாடு மேய்க்கும்
சிறுவர்கள் சகிதம்
ஓரிடம் தேடி
ஒளிந்துகொண்டோம்
மழை கனக்க
நம்மிடம்
காதல் இருந்தது
அவர்களிடம்
கல்வி இல்லை
நீடித்த
மழையில்
நனையத்
துணிந்தோம்
சிறகாகக்
கையசைத்தனர்
சிறார்கள்
வழியில்
முதியோர் இல்லம்
தொலைத்துவிட்டப்
பாட்டி ஒருவர்
முகவரிக்கு
அணுகினார் நம்மை
பெற்ற நான்கும்
வீதியில் விட்ட
சோகம்
அப்பிக்கொண்டது
நம் காதலில்
பின்
இரு வேறானப்
பாதையில்
பிரியத் துணிந்தோம்
என் காதல்
உன்னிடமும்
உன் காதல்
என்னிடமும்
பத்திரப்பட்டதற்கு
சாட்சியாய்
பல்வேறு மரங்கள்
நட்டுவிட்டோம்
மாடு மேய்க்கும்
சிறுவனில் ஒருவன்
படிக்கிறான்
முதியோர்
இல்லமொன்றிற்கு
நன்கொடை
ஈட்டுகிறோம்
நாம்
மணமாவதைக்
காலம் தன்
விரலசைவில்
வைத்திருப்பது
நிஜமெனில்
காத்திருப்போம்
அதுவரையில்........!