இரண்டாம் தாரம்
பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருந்தது அச்சக இயந்திரங்கள். பலர் அங்கு பத்திரிக்கை அடிப்பதற்கும் நிறுவன விளம்பர நோடிசுகள் அடிப்பதற்கும் வந்து போய் கொண்டிருந்தனர். ஒரு பெண் கணினியில் திருமண பத்திரிக்கை ஒன்றை தட்டச்சு செய்து கொண்டிருந்தாள். அப்போது உரத்த குரல் ‘கலையரசி, கலையரசி’ என்று இயந்திரங்களின் சப்தத்தை தாண்டி கேட்டது. அந்த கூச்சலிலும் ஏதோ நினைவோடு எழுத்துக்களை அழுத்திக்கொண்டு தட்டச்சு செய்து கொண்டிருந்தவளை, அருகில் இருந்த சக ஊழியரான பெண் அவளை கைகளால் உசுப்பி விட்டு ‘கலை! சார் கூப்பிடறாரு’ என்று சொன்னதும் எழுந்து ஓடினாள். சுதாரித்தபடி சற்று பதட்டத்துடன் வந்து சார் என்றபடி நின்றாள்.
ராஜேந்திரன் சுருக்கிய புருவங்களோடு ‘ஏம்மா கூபிட்ட குரலுக்கு வரமாட்டிய, என்ன அவ்ளோ அலச்சியமா வேல பாக்கரிங்கன்னு தெரிய மாட்டேங்குது’ வெறுப்புடன் பேச ‘இல்ல சார் ஒரு பத்திரிக்கை அடிச்சுகிட்டு இருந்தேன்’ ‘எதுத்து பேசாதே என்று கோபத்தோடு அதட்டியவர் ‘போ... இந்த பத்திரிகையையும் அளவு வாங்கிட்டு செஞ்சுறு சாயங்காலம் ப்ரூப் பாக்க வருவாங்க’ என்று கையில் எழுதி வாங்கிய விபரங்களை கொடுத்துவிட்டு எழுந்து இயந்திரங்கள் ஓடும் பகுதிக்கு சென்றுவிட்டார்.
சக ஊழியரான பெண் சுஜாதா கலைக்கு நல்ல தோழி. இருவரும் ஒன்றாக வேலை செய்வதால் ஏற்பட்ட நட்பு, கலை வேலைக்கு புதிதாக சேர்ந்த பொழுது அவளுக்கு எல்லா வேலைகளையும் கற்றுக்கொடுத்தாள் இன்று சுஜாதாவுக்கே சொல்லிக்கொடுக்கும் அளவுக்கு கலையரசி தேறிவிட்டாள்.
கலையரசி கம்ப்யூட்டர் அருகில் பேப்பரை வைத்துவிட்டு உட்கார, ‘என்ன கலை சார் கிட்ட பெர்மிசன் வாங்கிட்டியா’ சுஜா சிரித்தபடி கேட்க. ‘இல்ல சுஜா சார் ரொம்ப கோபமா இருக்கார் அப்புறமா கேக்கலாம்னு’ என்று இழுக்க ‘சீக்கிரம் கேட்டுவிடுடி இல்லாட்ட அதுக்கு வேற கோபப்படுவார்... சாயங்காலம் பொண்ணு பாக்க வராங்கன்னு சொல்லு ஒன்னும் சொல்ல மாட்டார்.’ அக்கறையுடன் சுஜா சொல்ல ‘கேக்குறேன் சுஜா’ என்று சொல்லும் போதே அவள் முகத்தில் வெறுப்பு தென்பட்டது.
முதலாளி ராஜேந்திரனின் குரலை கேட்டாலே எல்லோருக்கும் வேலையில் மட்டும் கவனம் போய்விடும். சுஜாதா ஒருமுறை செய்த தவறுக்கு ராஜேந்திரனிடம் திட்டு வாங்கியது நினைவிற்கு வந்தது. ஒரு முறை ராஜந்திரன் சுஜாதாவை அழைத்து நம் அச்சகத்தின் பெயர் என்ன என்று சிரித்துக்கொண்டே கேட்டார். அழகு அச்சகம் சார் என்றாள் சிரித்துக்கொண்டே ‘அத இந்த பத்திரிகையிலும் போட்டா எவ்வளவு அழகா இருக்கும்’ என்று சொல்லும்போதே அவர் முகம் மாறியது ‘எத்தன முறை உன்னக்கு சொல்லறது எந்த வேல செஞ்சாலும் அதுல நம்ம அச்சகம் பேர போடனும்னு’ என்று ஆரம்பித்தவர் கோபம் தீர சுஜாதாவை திட்டி தீர்த்தார். அன்று முதல் சுஜாதா அந்த தவறை செய்வதில்லை என்று கலையிடம் சொல்லிகொண்டிருந்தாள். அன்று கலை எதையும் காதில் போட்டுக் கொண்டதாக தெரியவில்லை.
மதிய உணவு நேரம் ஆனதும் ராஜேந்திரன் வீட்டுக்கு கிளம்பினார் கலையரசி அந்த நேரம் அவரிடம் சென்று பெர்மிசன் வாங்கினாள். செய்ய வேண்டிய முக்கிய வேலையை சுஜாதாவிடம் கொடுத்துவிட்டு செல்லும்படி உத்தரவிட்டார். கலையரசி மதிய உணவை முடித்துவிட்டு சுஜாதாவிடம் முதலாளி சொன்னதை சொன்னாள். ‘நான் பாத்துக்கறேன்டி’ என்று சுஜாதா கிண்டலாக ‘பொண்ணு பாக்க வரும்போதும் மூஞ்சிய இப்படியே வச்சுக்காதே’ என்றாள்.
கலையரசிக்கு அவள் தாயும் தந்தையும் நினைவுக்கு வந்தனர். அவளுடைய தந்தை உடல் நலக்குறைவால் காலமானார், அந்த துக்கத்திலேயே அவரது தாயும் காலமானார், தற்போது தனது அக்கா வீட்டில் வசித்து வருகிறாள். அக்கா வீட்டில் இருக்க பிடிக்காமல் தான் திருமணதிற்கு சம்மதித்ததாக சுஜாதாவிடம் சொன்னாள்.
‘ஏய்... உன் வயசுதான்டி எனக்கும் ஆகுது, ரெண்டு புள்ளைங்க ஆச்சு’
‘வயசே தான் எனக்கு வெக்கமா இருக்கு முப்பது வயசாச்சு, அப்பா அம்மா இருக்கும் போதே கல்யாணம் பண்ண முடியாம போச்சு’
‘அவங்களையே நெனச்சுக்கிட்டு இருந்தா, உன் வாழ்க்கைய பத்தி யோசி கலை’
‘நான் எங்கயாவது போய் தனியாக வாழ்ந்துடுவேன், அக்கா வோட கட்டாயத்தில தான் சம்மதிச்சேன்’
‘பொம்பளைங்க இந்த உலகத்துல தனியா வாழ முடியாது, எல்லாருக்கும் ஒரு துணை வேணும்’ என்று சுஜாதா அறிவுரை கூறினாள்.
கலையரசி வேலைகளை முடித்து சுஜாதாவிடம் ஒப்படைத்துவிட்டு வீட்டிற்க்கு கிளம்பினாள். வீட்டிற்க்கு சென்ற போது அங்கு அக்காவுக்கும் அத்தானுக்கும் ஏதோ வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது. அவள் உள்ளே நுழைந்ததும் அக்கா கண்களை துடைத்துக்கொண்டு ரூமிற்குள் சென்றாள். இது ஒன்றும் கலையரசிக்கு புதிதில்லை அவ்வப்போது இருவருக்கும் இப்படி சண்டை வருவது சகஜம். ‘மாப்பிள்ளை வீட்ல இருந்து வந்துடுவாங்க நீ போய் புடவைய மாத்திக்கோ’ என்று குபேரன் சொல்ல ரூமிற்கு சென்று அக்காவிடம் அருகில் உட்காருகிறாள்.
விமலா அழுதுகொண்டே ‘அந்த மனுஷன் உன்ன ரெண்டாந்தாரமா கட்டிவக்க பாக்குறார்டி... ஒத்த பைசா கூட வேணாம்னு சொன்னாங்களாம்’ கலையின் கண்களில் நீர் ததும்ப ‘அக்கா நம்ம குடும்ப சூழ்நிலைக்கு, நம்மால இப்ப எதுவும் செய்ய முடியாதில்லையா’ என்று மனதை தேற்றிக்கொள்கிறாள். ‘ஏய் அந்த ஆளுக்கு என்ன வயசு தெரியுமா, அம்பது ஆகுது.’ கலையரசி ‘பரவாயில்ல எனக்கு இருக்கிற வயசுக்கு இனிமே யாரு பொண்ணு கேட்டு வருவாங்க சொல்லு’ என்று அக்காவை சமாதானப்படுத்தினாள்.
கலையரசியா இப்படி பேசுவது என்று அவளுக்கு வியப்பாக இருந்தது, அப்பா இருக்கும் போது பெண் பார்க்க வந்தவர்களை குறை கூறி தவிர்த்து வந்தாள். அதிக வரதட்சணை கேட்கிறார்கள் என்றும், அதோடு ஒரு முறை எதுவும் செய்யவேண்டாம் பெண்ணை மட்டும் கொடுங்கள் என்று வந்த நெருங்கிய உறவுக்கார ஒருவரை அவன் படிப்பறிவு இல்லாதவன், கிராமத்தான் வேண்டாம் என்று சொன்னவளா. இப்படி சொல்வதற்கு அவள் இருந்த நிலைமையே காரணம். விமலா வேண்டா வெறுப்பாக அவளை அலங்கரித்தாள்.
மாப்பிள்ளை வீட்டார் வந்துவிட்டனர் என்று குபேரன் வந்து கூப்பிட்டதும் கலையரசியை அழைத்து வந்தனர். அங்கு மாப்பிள்ளை மற்றும் அவருக்கு நெருங்கிய மாமாவும், நண்பர்கள் இருவரும் மட்டுமே வந்திருந்தனர். பெண்ணை பார்த்த மாப்பிள்ளை ‘பொன்னுகிட்ட எல்லா விசயமும் சொல்லிட்டிங்களா, பொண்ணுக்கு இதுல சம்மதமான்னு கேளுங்க’ என்றார். ‘எல்லாம் சொல்லியாச்சு’ என்று சிரித்துகொண்டே குபேரன் விமலாவை முறைத்து பார்த்தான்.
அவர்களது அமைதி மாப்பிள்ளை விநாயகத்திற்கு விளங்கவில்லை ‘சரி! நீங்க சொல்லியிருந்தாலும்... நானும் என்ன பத்தி சொல்லிடறேன்’ என்று கலையை பார்த்து ஆரம்பித்தார். எல்லாவற்றயும் கேட்ட கலையரசி அவளிடம் இருந்த தனிமை அவரிடமும் இருப்பதை உணர்ந்து திருமணதிற்க்கு ஒப்புக்கொண்டாள்.
சுஜாதா ஜெராக்ஸ் எடுப்பதற்கு ஒரு கடைக்கு சென்றாள் அங்கு கலையரசி இருந்தாள். வெகு நாட்களுக்கு பிறகு தோழி சுஜாதாவை சந்தித்ததில் மகிழ்ச்சியடைந்தாள், கலையை கண்டதும் சுஜாதாவுக்கு கண்கள் கலங்கின ‘உன் நிலைமை இப்படியா ஆகனும் என்று புலம்பினாள். கலை அவளை தேற்றி ‘நானே தைரியமாக இருக்கிறேன் உனக்கென்னடி, அன்று என்னை பெண் பார்க்க வந்த பொழுது அவர் என்னிடத்தில் என்ன சொன்னார் தெரியுமா’.
விநாயம் ‘எனக்கு மறுமணம் செய்து கொள்ள விருப்பமில்லை என்னுடைய மாமா வற்புறுத்தியதால் தான் மட்டும் இதற்க்கு சம்மதிக்கவில்லை, என்னுடைய மனைவி காலமாகி ஆறு வருடங்கள் கழிந்த பிறகு இன்று வரை நான் தனிமையில் தான் இருக்கிறேன். எனக்கென்று அவள் விட்டுச்சென்றது பிறவியிலேயே மனநிலை சரியில்லாத எனது மகள் என்னால் அவளை கவனித்துக் கொள்ள முடியவில்லை மகளாயிற்றே, எனது மாமனார், மாமியார் என் மனைவி போன பிறகு மகளையும் பிரித்து கொண்டு சென்றுவிட்டனர், வயதான பிறகு துணை என்று யாரும் இல்லை என்னை திருமணம் செய்துகொண்டாள் நானும் உனக்கு நல்ல துணையாக இருப்பேன் என்று நம்புகிறேன்’
அவர் வார்த்தைகளை கேட்ட கலையரசிக்கு மனம் சற்றே கலங்கியது தானும் அப்பா அம்மா போன பிறகு அடைந்த வேதனையை தான் அவரும் அனுபவிக்கிறார் என்று எண்ணிக்கொண்டாள்.
கலையின் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த சுஜாதா பிறகு என்ன நடந்தது என்று கேட்டாள்.
‘கடைசிவரை நான் இப்படி தனிமையில தான் இருக்கனும்னு கடவுள் விதியை எழுதிட்டார் போல, கலங்கிய கலையரசி ‘கல்யாணம் முடிஞ்சு எங்க தனிமை போச்சு ஆனால் ஒருநாள் திடீரென்று நெஞ்சு வலியில் துடிச்சவரை ஆசுபத்திரியில் சேர்த்தோம்’ என்று அழுதாள். மாரடைப்பால் விநாயகம் மீண்டும் கலையை தனிமையில் விட்டுச் சென்றார்.
‘அழாதே கலை, அந்த கடவுளுக்கு உன்மேல் இரக்கமே இல்லை போல’ ‘கடவுளுக்கு, ஏன்மேல ஏதோ கரிசனம் இருக்குது. அதனால் எனக்குனு ஒரு துணையை கொடுத்துருக்கார். கடையின் உள்ளே விநாயகத்தின் மனநிலை சரியில்லாத மகள் சில பொம்மைகளை வைத்து விளையாடி கொண்டிருந்தாள்.