தரைச் சீட்டு
“நடேசா வாக்குச் செலுத்தீட்டியா..”
பக்கத்துத் தேநீர்க்கடையிலிருந்து வந்த குரலுக்கு, காய்கறி முருகனின் மிதிவண்டியின் பின் சக்கரத்தின் மென் சக்கரத் துளையை நீக்கிக் கொண்டிருந்த நடேசன் நிமிர்ந்து பார்த்தான் அது வாத்தியார் அசோகன். அவரிடம்தான் நடேசன் ஆறு முதல் எட்டு வரை படித்தான் ஆனால் படிப்பில் மனம் இல்லை எட்டுக்குமேல் பள்ளிப்பக்கம் தலை வைத்தும் படுக்கவில்லை. உழைத்துப் பெற்றோரைக் காக்க வேண்டும் என்று பதினைந்து வயதில் இந்த அருண் மிதிவண்டி நிலையத்தில் வேலைக்குச் சேர்ந்தான் ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டது தனியே கடை போடவேண்டும் என்ற தைரியம் இன்னும் வரவில்லை. முதலாளிக்கு நம்பிக்கையான வேலைக்காரன். “போகணும் ஐயா, இந்த ஒரு வண்டிய முடிச்சிட்டு கெளம்பனும்..”.
ஒட்டி முடித்து மென் சக்கரத்திற்கு முழுவதுமாக காற்றை நிறப்பிவிட்டு அருகில் இருந்த தண்ணீர் நிறப்பிய சற்று ஆழமான பாத்திரத்தில் மென் சக்கரத்தின் ஒட்டப்பட்ட பகுதியை இட்டுப் பார்த்தான் காற்று கசிகிறதா என்று. இல்லை என்பதை உறுதிப் படுத்திக்கொண்டு பின் காற்றை மென் சக்கரத்திலிருந்து வெளியாக்கினான். பின்னர் சக்கரத்தில் பொறுத்தி காற்றைச் செலுத்தி முழுமையாக்கி முருகனிடம், “முருகா வண்டி தயார்..” என்றான். முருகன் ஒரு ருபாய் ஐம்பது காசுகள் கொடுக்க அதை வாங்கி கடைக்குள் சென்று சுவரோரம் வைக்கப்பட்டிருந்த மேசையில் மேலரையைத் திறந்து ரூபாய்களோடு ஒற்றை ரூபாயை அடுக்கிவிட்டு அதனருகில் இருந்த டப்பாவில் ஐம்பது பைசாவைப் போட்டுவிட்டு வெளியில் வந்தான் நடேசன், முருகன் நன்றி சொல்லி விட்டு தன் வியாபாரம் பார்க்கப் புறப்பட்டான்.
நடேசனும் முதலாளியின் வருகைக்காக இங்கும் அங்கும் பார்த்துக்கொண்டிருந்தான். சற்று தூரத்தில் TVS 50 யில் அவர் வருகை தென்பட்டது. நேற்றே சொல்லியிருந்தார் முதலாளி, இன்று பக்கத்து நகரத்திற்குச் சென்று தேவையான உதிரிப் பக்கங்கள் மற்றும் வேலைக்குத் தேவைப்படும் பொருட்களை வாங்கி வரும்படி. எனவே கிளம்பவேண்டிய நேரம் வந்துவிட முதலாளியின் வரவை எதிர்பார்த்திருந்தான் நடேசன் முதலாளியும் வந்துவிட்டார். TVS 50 யைக் கடைக்குமுன் நிறுத்தி இறங்கி சற்று ஓரமாக நகர்த்தி நிற்பியின் உதவியால் வண்டியை நிலைப் படுத்துவிட்டு பின் தன் சட்டைப் பையிலிருந்து சில நூறு ரூபாய் நோட்டுக்களை எடுத்து நடேசனிடம், “நடேசா இந்தா பிடி..” என்றார் அதைப் பெற்றுக் கொண்ட நடேசன் அதில் ஐந்நூறு ரூபாய்கள் இருந்ததை உறுதி செய்துகொண்டான். “அண்ணே வண்டி எண் மூணும் பதினாலும் மரக்கடை சேகர் சொல்லி எடுத்துக் கொடுத்திருக்கான் புத்தகத்தில குறிச்சு வச்சிருக்கேன். அப்புறம் போகும்போது பள்ளிக்கூடத்துல வாக்குச் செலுத்தீட்டுப் போயிடறேன்.. “
“சரி எங்கேயும் நேரம் எடுக்காதே ஆறு மணிக்குள்ள வந்துடனும் எனக்கு வெளில வேலை இருக்கு...” என்ற முதலாளிக்கு சம்மதம் சொல்லிவிட்டு வரிசையில் நின்ற பின் இருக்கை வைத்த மிதிவண்டி ஒன்றை வரிசையிலிருந்து வெளியில் எடுத்துப் புறப்பட்டான் பள்ளிக்கூடம் நோக்கி.
மிதிவண்டியை மிதிக்க ஆரம்பித்தான் எதிரில் வந்த மோட்டார் வாகனத்திற்கு இடம் கொடுத்து கொஞ்சம் ஓரமாக ஒதுங்கினான் மிதிவண்டியின் முன் சக்கரம் ‘தடக்’ சாலைப் பள்ளத்தில் குதித்து எழுந்தது அருகில் நடந்து சென்ற யாரோ சொன்னார்கள் ‘மிதிவண்டி ஓட்டைய நீக்க நீ இருக்க சாலை ஓட்டைய நீக்க யார் இருக்கா’ திரும்பிப் பார்த்தான் முகம் தெரியவில்லை இருந்தாலும் அதிக கவனம் செலுத்தாமல் பள்ளிக்கூடப் பயணத்தில் மும்முரமாக வண்டியை மிதித்தான்.
நல்ல தண்ணீர் குழாயடியைக் கடந்து செல்கையில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தவர்களில் ஒரு பெண்ணின் குரல் காதில் விழுந்தது ‘இந்த ஒரு குழாய் தான் மூணு தெருவுக்கும் ஒரு நேரம் போலையா இருக்கு இன்னொரு குழாய் போட்டுத்தர யாருக்கும் அக்கறை இல்ல’.
சின்னத்தாயம்மன் கோவிலைக் கடந்து செல்கையில் தன்னையுமறியாமல் கன்னத்திற்குச் சென்று மீண்டும் மிதிவண்டியைப் பிடித்தது நடேசனின் வலது கை.
பள்ளிக்கூடத்திற்குள் நுழைந்தான் மிதிவண்டி நிறுத்தத்தில் தான் மிதித்து வந்த வண்டியை நிறுத்திவிட்டு தான் வசிக்கும் பகுதி எண் எழுதப்பட்டு இருந்த வகுப்பறை தேடிச் சென்றான். வரிசையில் அதிகம் நபர்கள் இல்லை அதிகபட்சம் பத்துப் பேர். பலரும் வெய்யிலுக்கு முன்னதாகவே வந்து வாக்களித்துச் சென்றிருந்தார்கள். வரிசையில் நிற்கும்போது தனக்கு முன்னால் சென்றவர்கள் எந்த மேசைக்கு செல்கிறார்கள் என்ன செய்கிறார்கள் என்று மனதில் வாங்கிக்கொண்டிருந்தான். தனது முறை வந்தது உள்ளே சென்றான் நடேசன். தனது பெயரையும் முகவரியையும் சொல்ல அந்த அதிகாரி ஏட்டில் சரி பார்த்தார். பின்னர் அடுத்த நபரிடம் இடது கை ஆள்காட்டி விரலைக் காட்டினான் நடேசன் அவர் இட்ட மையைப் பெற்றுக்கொண்டு சற்று தொலைவில் தடுப்புகள் மறைவில் வைக்கப்பட்டிருந்த மேசைக்குச் சென்றான் வாக்குச் சீட்டில் அசோகன் வாத்தியார் சொல்லியிருந்த சின்னத்தைத் தேடினான் கிடைத்துவிட அந்தச் சின்னத்திற்கு நேராக முத்திரையிட்டு சீட்டை மடித்து வாக்குப் பெட்டிக்குள் இட்டான்.
வெளியில் வந்து மிதிவண்டியை எடுத்துப் புறப்பட்டான் பேருந்து நிலையம் நோக்கி. இன்னும் சற்று நேரத்தில் பேருந்து ஏறினால் நகரத்திற்குச் சென்று பொருட்கள் வாங்கித் திரும்பிவிடலாம் முதலாளி சொன்ன நேரத்திற்குள்.
மிதிவண்டியை பேருந்து நிலைய மிதிவண்டி நிறுத்தத்தில் நிறுத்தி விட்டு நிறுத்த மேற்பார்வையாளரிடம் ரசீது பெற்றுக் கொண்டு திரும்புகையில் எதிரில் இருந்த பெட்டிக் கடை வாசலில் கைகளில் இன்றைய செய்தித் தாள்களுடன் இருவர், சில தெருக்களுக்கு தெருவிளக்கு இல்லாமல் சிரமமாக இருப்பதைப் பேசிக் கொண்டிருந்தனர்.
அருகில் இருந்த அந்தக் கட்சி அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது. மகிழுந்துகள் வருவதும் சிலர் அலுவலகத்திற்குள் செல்வதும் வெளியில் வருவதுமாக. அந்தப் பெட்டிக்கடைக்கு வந்த அந்தக் கட்சி அலுவலகத்தின் கடை நிலை ஊழியர் சட்டைப்பையில் வைத்திருந்த ஒரே ஒரு இரண்டு ரூபாய்த் தாளை வெளியில் எடுத்துக் கொண்டிருந்தார்.
நடேசன் பேருந்தில் ஏறி ஒரு இருக்கையில் அமர்ந்தான் பல எண்ணங்களோடு ‘வரும் பொழுது இந்த முறை மறக்காம வீட்டு முகப்பு நிலைக்கு ராமா கடைல இருந்து ‘நல்வரவு’ என்று எழுதப்பட்ட வரவேற்பு அலங்கார மணிகளை வாங்க வேண்டும். இன்று முதலாளியிடம் முன்பணமாக நாளைய படிக்காசைக் கேட்கவேண்டும். நகரத் திரையரங்கில் சில மாதங்களுக்கு முன் புதிதாக வெளியாகி சிறப்பாக ஓடிய முத்து திரைப்படம் இப்போ உள்ளூர் வசந்தா திரையரங்கிற்கு வந்திருக்கு வெள்ளையனோடு இரண்டாம் ஆட்டம் செல்ல வேண்டும்’.