கனவே மீண்டும் எப்போது
இரவின் திரையிலே
தூக்கம் துளையிடும் நேரம் !
கண்கள் மூடிக்கொண்டு
கனவுகளுடன் வாழத் தொடங்கினேன் !
தேர்வீதியில் கடந்து போகும்
பெண்கள் போல
ஒவ்வொரு கனவும்
ஒவ்வொரு மாதிரி !
சில கனவுகள்
எனைப் பார்த்து சிரித்தன !
சில கனவுகளை
நான் பார்த்து சிரித்தேன் !
சில கனவுகள்
ஓரக்கண் வீசி மறைகின்றன !
சில கனவுகளோடு
பருவத் தகராறு !
மர்மமான முறையில்
மனத்திரை வெள்ளையடிக்கப்பட்டதால்
கனவுகள் எல்லாம் கொள்ளையடிக்கப்பட்டன !
மயான அமை"தீ"
மளமளவெனப் பற்றியது
அதோ ....
விண்ணும் மண்ணும் முத்தமிட்ட இடத்தில்
வித்தமிட்டுப் பிறந்த "கனவு" - அவள்
என்னை நோக்கி வருகிறாள் !
அவள் பாதம் தரைத்தொட்டதும்
மூளை இடுக்குகளில் ரீங்காரம் !
பல நாட்கள் பழகிய ஸ்பரிசம் !!
தாய் வயிற்றில் தவழ்ந்த நொடியில்
உள்ளங்கையில் ரேகையாய்
முளைத்தக் கனவு இவள் தானோ ?
அஞ்சு ருபாய் பஞ்சு மிட்டாய்
பிச்சுப்பிச்சுத் தின்னும்னோது
குச்சிமீது ஒட்டிக்கொண்ட கனவு இவளோ ?
தந்தை விரலைப் பிடித்தக்
கையின் இறுக்கத்தை
ஆராய்ந்தக் காற்று இவளோ ?
பருவம் எய்தியதும் துளிர்விட்ட
அரும்பு மீசைக்குள் ஒளிந்திருந்த கனவோ ?
கொட்டும் மழையில் குடைக்கடியில்
வானவில்லை ரசித்த நொடியை
படம்பிடித்தக் கனவோ ?
ஆசைப்பெண் கன்னத்தில்
ஓசையோடுப் பதித்த
முத்த எச்சிலின் மிச்சமோ ?
கேள்விகள் பல அடுக்கியதில்
கேவலமாய்ப் பார்த்தாள் கனவுக்காரி !
காதல் கொள்ள வந்தவளை
ஊடல் ஊதச் செய்தேன் !
சண்டையிட்டு சென்றுவிட்டாள்
தன் தாய் வீட்டிற்கு !
தீயில் தண்ணீரூற்றியதுப் போல்
ஆவியென எழுந்தேன் உறக்கத்திலிருந்து !
என்றோ ஒரு நாள் என்னிடம்
வந்து தானே ஆக வேண்டுமென
எண்ணி மீண்டும் அயர்ந்தேன்
விடியலுக்கு நேரம் பார்த்து !
கனவுகள் தொடரும் !