பாரதம் நேற்று இன்று நாளை

"முப்பது கோடி முகமுடையாள் -உயிர்
மொய்ம்புற ஒன்றுடையாள்
செப்புமொழி பதினெட்டுடையாள் -எனில்
சிந்தனை ஒன்றுடையாள் "
எனப் போற்றப்படுபவள் நம் பாரதத் தாய்.தேசப்பிதா மகாத்மா காந்தி முதல் மருது சகோதரர்கள் வரை வாழ்ந்த வீரமும் விவேகமும் நிறைந்த நாடு நம் நாடு.அந்த இந்தியா நேற்று எப்படி இருந்தது இன்று எப்படி இருக்கிறது நாளை எப்படி இருக்கும் என இங்கு காண்போம்
நேற்றைய இந்தியா:
நேற்றைய இந்தியாவில் மக்கள் தொகை குறைவு தான்,ஆனால் மக்கள் மனங்களோ நிறைந்து இருந்தன. வளமும் நலமும் செழித்து மாதம் மும்மாரி பொழிந்தது.தன்னலம் கருதாது பொது நலம் பெரிதென வாழ்ந்த தலைவர்கள் இருந்தனர்.அந்நியரிடம் அடிமைப் பட்டு கிடந்தாலும் எதோ ஒரு நிம்மதி இருந்தது .மொத்தத்தில் நேற்றைய இந்தியா நேசமிகு இந்தியா.
இன்றைய இந்தியா:
எங்கு பார்த்தாலும் ஊழல்,எதற்கெடுத்தாலும் லஞ்சம்,மீறினால் போராட்டம்,சீறினால் கடையடைப்பு.இது தான் இன்றைய இந்தியா.ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் வனவாசத் தண்டனை மட்டும் குடிமக்களுக்கே உரிதாகிப் போனது,மக்களோ அதற்கும் ஒரு படி மேலே சென்று எதிலும் ஆதாயம் தேடி அதிலும் அலட்சியம் காட்டுகின்றனர்.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமை,தீவிரவாதம்,தூய்மை இல்லா வீதிகள்,வேலை இல்லா திண்டாட்டம் என அனைத்து கோடரிகளும் இந்தியா எனும் ஆலமரத்தை அசைத்துப் பார்க்க நினைக்கின்றன.இந்த நிலை இப்படியே நீடித்தால் இந்தியா ஆலமரம் வீழ்வது நிச்சயம் என்பது வருத்ததிற்குரிய விடயம்...
விழவிடுவோமா நம் இந்தியாவை?இளைய தலைமுறையே! விழித்துக் கொள். இந்தியாவை தூக்கி நிறுத்த ஓடி வா!ஒன்றை மட்டும் மனதில் கொள்.இன்றய நமது நிலைக்கு நாமே பொறுப்பு.நமது நன்மையும் தீமையும் நம் செயல்களால் விளைபவை.எனவே நம் செயல்களில் தூய்மையும் நேர்மையும் கொண்டிருக்க வேண்டும்.
நாளைய இந்தியா:
நாளைய இந்தியா எப்படி இருக்க வேண்டும் தெரியுமா நண்பர்களே?
#வீட்டுக்கொரு பட்டதாரி,ஊருக்கொரு அறிவாளி!
#தன்னலம் கருதாத அரசாங்கம்,எங்கும் இளைய தலைமுறையின் ராஜாங்கம்!
#குப்பைகள் இல்லாத் தெருக்கள்,குறைகளே கூறாத மக்கள்!
#வறுமை இல்லா மக்கள்,வளமை குன்றாத வளங்கள்!
#இந்தியா இளைஞன் இந்தியாவுக்காக உழைக்கும் எண்ணம்!
#இவை எல்லாவற்றுக்கும் மேலாக வல்லரசு இந்தியாவை விட நல்லரசு இந்தியாவை விரும்பும் தலைவர்கள்!
மொத்தத்தில் இன்றய இந்தியா மாறி நல்ல வளமான இந்தியா அமைவது நிச்சயம் இளைஞனின் கைகளில் தான்.....இளைய தலைமுறையே பயம் கொள்ளாதே!கலங்கரை விளக்கமாக காமராசரும், காந்தியும்,விவேகானந்தரும் இருக்கிறார்கள்!
வெற்றி நிச்சயம்!இது இளைய தலைமுறையின் சத்தியம்!

எழுதியவர் : (28-Jan-15, 8:58 pm)
பார்வை : 8273

சிறந்த கட்டுரைகள்

மேலே