நீதான்

நீதான்...

என் கனவைத் தின்றவள்!
என் நுனி விரல் பிடிக்கக்
காப்புரிமைப் பெற்றவள் !
காலமும் காலனும்
தின்னும் வரை
எனை சுமப்பவள்...

தொலைந்த பொம்மையைத்
தேடும் சிறு குழந்தையினும்
சிறு பிள்ளைத்தனமானது ...
நானுனைத் தேடியது...
தொலைக்கும் முன்னரே....

என் குழந்தையாய் இருக்கனுமாம்!
ஆடம்பரத்த வெறுக்கனுமாம்!
துணிவாத் துணியனுமாம்!
திரும்பிப் பார்க்கவே மறுக்கனுமாம்!
கலைநயம் கசியனுமாம்!
அடம் பிடிக்கணுமாம்!
அழுமூஞ்சியாய் இருக்கனுமாம்!
அவுங்கப்பாம்மவ மதிக்கனுமாம்!
இப்டியெல்லாம் இருக்கனுமாம்......

தொங்கும் தூக்கணாங்குருவியின்
களிமண் மின்மினிப் பூச்சியானது...
தேடல்கள் என்னுடன் மட்டும்
இறந்தே போனது...

இரவும் பகலொடு
கலந்தே போனது...
பேனா நுனியில்
எழுத்துக்களைப்
பார்த்த என் கண்கள்
கணினியில் எழுத்துக்கள்
தேடிக்கொண்டிருந்தன...

வழக்கமாய் ஒரு
பேருந்துப் பயணம்...
வழி நெடுகிலும்
ஊர்களை ஏலம் விடும்
நடத்துனரிடமிருந்து
அவ்வூரும் தப்பவில்லை.....!
திம்மாச்சிபுரமெல்லாம் எறங்கு......!

ஓடும் பேருந்து
அன்று நமக்காய்
நின்றதோ?
மன்னிக்கவும்
எனக்காய்
நின்றது....

பயணங்களின் பலனை
அன்றே அடைந்தேன்...
கனவைத் தின்றவள்
காப்புரிமை பெற்றவள்
எனை சுமப்பவள்
நேரில் நின்றாள்....

பிரசவித்தத் தாயாய்
தாயால் நுகரப்பட்டசேயாய்
மனம்
கன்றெனத் துள்ளியது...

பேருந்து தேரானது....
நெடுஞ்சாலை நெடுஞ்சோலையானது....
பயணிகள் தேவரானார்கள்...
என்னவள் தேவதையானால்...
சோகபுரி சொர்க்கபுரியானது ....

மதுரமான என்னவளுக்கு
மதுரா எனும் பெயர்தான்
மதுரமாய் பொருத்தமென
இதயம் தானாய் உளறியது....

என்னவள் திரும்பியும்
பார்க்கக் கூடாதென
எண்ணியிருந்தேன்...

ஒவ்வொரு முறையும்
உறுதி செய்தாய்
நீயே அவ்வென்னவளென்று!
மறந்தும் நீ
திரும்பி பார்ப்பதில்லை!

என் கனவு நீயென்று
எனக்குத் தெரியும்!
உன் கணவன் யாரென்று
உனக்கு மட்டுமல்லவோ தெரியும்...!

அது நானாயிருப்பேனென்று
மறந்தும் எண்ணியதில்லை!
உயிரை எவனோ
பிடுங்கிக் கொண்டதாய்
உணர்ந்தேன் எண்ணியது
உண்மையானபோது....

எதுவாகினும்
எவனாகினும்
என்னவளின்
உடலுக்கு மட்டுமல்லோ
இல்லறச் சங்கிலி
கட்ட முடியும்...

அவன் என்னவளின்
இரண்டாம் தாரம்...
நகைக்க வேண்டாம்!
நான் கனவிலே
என்னவளைக்
கள்மணம் புரிந்தவன்...

குழந்தைகளைப்
பள்ளிக்கு அனுப்பியவன்...
அவள் படித்த
ஆங்கில அகராதியை
எம் குழந்தைகளுக்காய்
நாளிதழ் அட்டையிட்டுக்
காத்தவளாய்க் கனவில்
வாழ்ந்தவன்!

என் மதுராவின்
உண்மைப் பெயர்
அறியக் கூட நாட்டமில்லை!
அவள் பெயரை
அவளேக் கூற
அதை நான் கேட்க
வேண்டுமென விருப்பம்!

இல்லையெனில்
அவள் மறுமண
அழைப்பிதலிலாவது
அவள் காட்டி
அறிவிக்கட்டும்
அவள் பெயரை!

உனை நாளும்
சுமக்கும் தாயானேன்!
பிள்ளை மனமென்னவோ கல்லானது...
தாய் மனம் அதையும்
தாங்கிப் பித்தானதே!

உன்னுடன் பேருந்துப்
பயணத்திற்காக
தினமும் என்னுயிர்ப்
பணயம்....
இருசக்கர வாகனத்தில்.....

நீ ஏறி இறங்கும்
நான்கு நிமிடப்
பயணத்தில்
நாலாயிரம் கோடி மைல்
விண்வெளிப் பயணம்..

அதும் போதாதென
அடுத்தப் பேருந்திலும்
தேடல்! இது தேவைதானா?
வினவும் மூளை....!

இதயமும் மூளையும்
ஓருடலிலென்றாலும்
உனை இதயத்தில்
சுமப்பதனால்
மூளைக்கும் பொறாமை!

மற்ற நேரங்களில்
மௌன விரதம்
நடத்தும் இதயம்
நீயருகில் இருக்கையில்
வேகமாய்த் துடித்து
ஆர்ப்பாட்டமே செய்து விடுகிறது!

உன் நுனி விரல்
சுமக்கப் பயணச் சீட்டளிக்கும்
நடத்துனர் மீதும் கோபம்!
தினமும் பேசிவிடுகிறானே!
எங்கம்மா போற.....?

திரும்பியொரு பார்வை...
இதழ் திறந்தொரு வார்த்தை...
உயிருறைந்த நேசம்....
என் காதலை உயிர்த்த நீ....!
எதுவும் வேண்டாமடி எனக்கு...

என்னுயிர் நீயாயிருப்பதை
நான் உணர்திருப்பதை
அறிவிக்கக் கூடவா
சிறை எனக்கு?

நேசிப்பதை உணர்த்துவதும்
பிரிவை அறிவிப்பதுவே மரபு....
நானுனைத் தொலைத்ததைக் கூட
கூற முடியாத பாவியா நான்?

பள்ளிப் பிள்ளைகள்
கல்லூரி நண்பர்கள்
அண்டை அன்பர்கள்
வரம் பெற்றவர்கள்...
ஆம் ! நான் மட்டுமே
சாபம் பெற்றவன்....!

பத்து ரூபாய் நோட்டுகள்
நான் தொலைந்ததை
முதலில் உனக்கறிவித்த
ஊடகங்கள்!

உனக்கனுப்பிய
ஆங்கில அகராதி
என் தேடலை
பதிந்து அறிவித்த
அகராதி.....!

எதுவாகினும்
தொலைத்ததை அறிவிக்க
முனைந்த போதும்
உனைத் தொந்தரவு
செய்ததாகவே உணர்ந்தேன்!

உனை சங்கடப்படுத்தும்
ஒரு நொடியாகிலும்
அனற்புழுவெனவே
துடித்தேன்...

ஒருமுறையேனும்
பார்க்கவேகினும்
துடித்த மனது
இம்முறை
உனைப் பார்க்கக் கூட
சங்கடப்படுகிறது....

என் தேடலை...
நான் தொலைத்ததை...
ஒருவேளை
ஒருமுறை
நீ கேட்டிருந்தால்
என்னுயிர் மோட்சம் பெற்றிருக்கும்...

உனை நான் தேடவில்லை...
என் தேடல் நீயாகிப்போனாய்....
என் தாயின் நகல் நீ.....
சேராமலே
பிரிந்து போனாய்....

கண்ணீர் துளிகளை மட்டும்
நான் செலவழிக்கிறேன்!
அவை மட்டுமாவது
சுதந்திரமாக வெளிவரட்டும்...
பாவம் செய்தவை
என் வார்ததைகள்....!

மூளை சிரிக்கிறது!
எனக்கு அப்பவே தெரியுமென்று....
இதயம் மறுக்கிறது
உனக்கிது புரியாதென்று...

கண்கள் மட்டும்
கலங்குகின்றன ....!
முற்பகல் பார்க்கின்
பிற்பகல் வழியும்....
கண்ணின் துளிகள்...

விடை தெரியாமல்
இன்னும் பயணிக்கிறேன்...!
பேருந்தில் அல்ல
உன் நினைவுகளுடன்...

i miss u....

எழுதியவர் : மனோஜ் கியான் (28-Jan-15, 10:54 pm)
சேர்த்தது : மனோஜ் கியான்
Tanglish : needhan
பார்வை : 148

மேலே