குச்சிக்காலன் 7
குச்சிக்காலன் - 7
ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்டு இடைவெளிவிட்டு குழந்தைகளைப் பெற்றுக்கொண்டாலும் பெற்றோரின் சாபமோ என்னவோ குச்சிக்காலனுக்கு பெண் குழந்தைகளே பிறந்ததால் பெருத்த ஏமாற்றம். மூன்றாவது பெண் குழந்தை பிறந்த இரண்டாவது நாளே
கலாவல்லிக்குத் தெரியாமல் நமது குச்சியார் கு. க. ஆப்ரேஷன் செய்துகொண்டான். தன் பெற்றோர் மூக்காயி ராக்கப்பன் போல ஐந்து பெண்குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள ஆசைப்பட்ட நாட்டுச் சுரைக்காய் மூஞ்சி அழகி கலாவல்லியின் கனவு கானல் நீராய்ப் போனது.
=====
கலா தனக்கேற்ற ஆண்மகனை காதல் வலை வீசிப்பிடித்து மணங்கண்டும், இன்னும் இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பைக் குச்சிக்காலன் கெடுத்தது பற்றி அவளுக்கு தீராத வருத்தம். கனிமொழி பேசி காமக் கணை வீசத் தெரிந்த எந்தப் பெண்ணும் மனதுக்கேற்ற மணாளனைப் பெறுவது கடினமான செயல் அல்ல என்பது கலாவின் (குடும்ப) அனுபவ அறிவு. அவளைப் பொருத்தவரை ஏரியில் மீன் பிடிப்பது போன்ற எளிதான செயல் தான் ஒரு ஆண்மகனைப் பார்வையாலும் பின்னர் தேனொழுகும் கொஞ்சு மொழியாலும் காதற் சிறை பிடிப்பது. அதனால் தான் நிறையப் பெண் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற வெறியோடு குச்சியைத் தன் வலையில் அணுவளவு சிரமமும் சிக்கலும் இல்லாமல் விழ வைத்தாள்.
=======
தன் குறிக்கோளும் ஆசையும் பகற் கனவாய்ப் போனது பற்றி கொஞ்ச நாட்கள் ஆதங்கப்பட்டாள் கலா. பின்னர் தனது மனதைத் தேற்றிக்கொண்டாள். இருப்பினும் அவள் வசிக்கும் பகுதியில் ஆண் குழந்தைகள் உள்ள வீடுகளில் உள்ளவர்களையெல்லாம் தன் எதிரிகளாகவே கருதினாள். பருவ வயதில் உள்ள ஆண் குழந்தைகளை அவளுக்குப் பிடிக்கும் (பார்வையால் அவர்களின் இளமை அழகைப் பருக). ஆனால் சின்னப்பையன்களைக் கலாவுக்குப் பிடிக்காது. அவர்களைக் கண்டாலே அவளுக்கு எரிச்சல் தான் வரும். அவர்களின் பெற்றோரிடம் ஏதாவது பொய்க் காரணத்துக்காக அடிக்கடி சண்டை போடுவாள். அவள் பேச ஆரம்பித்தாள் காட்டாற்று வெள்ளம் போல் நிறுத்தாமல் பேசிக்கொண்டே இருப்பாள். அதனால் அவளோடு வாதாட யாரும் விரும்பமாட்டார்கள். கற்றவர்க்கே அவள் காதகி; மற்றவர்க்கோ அவள் தானைத் தளபதி.
=======
திடீரென்று ஒரு நாள் கருப்பையா வேர்க்க விறிவிறுக்க ஓடி வந்தான். அதைக் கண்ட அங்குசாமி, “என்ன கருப்பையா, என்ன ஆச்சு. குள்ள நரியைக் கண்ட முயலைப் போல ஓடி வர்ற? ஏம் பதட்டமா இருக்கே?” என்று கேட்டான். “ஒண்ணுமில்ல ஏட்டையா. எனக்குப் பல நாளா இருந்த சந்தேகம். நம்ம ஆபிசரு பலராமன் அய்யாவை தெனமும் அவரோட ஆபிஸிக்கு ஏத்திட்டு போற வேன் கவர்ன்மெண்ட் வேன் தானே?” என்று கேட்டான் கறுப்பையா. “அதிலென்ன சந்தேகம்?’ என்றார் அங்குசாமி.
==========
“நானே பல தடவை என் கண்ணாலே பார்த்திருக்கேன். அந்த வேன் தினம் அவர ஏத்திகிட்டு போகுதில்லையா அது எங்கே போகுதுன்னு இதுவரைக்கும் நமக்குத் தெரியாம இருந்திச்சு. எனக்கு அதிலெ தான் கொஞ்சம் சந்தேகம்.” என்றான் கருப்பையா. “என்னய்யா போலீசுக்கே தெரியாத புதுக்கதையெல்லாம் நீ சொல்ற” என்றார் அங்குசாமி.. “இல்லீங்க அய்யா, அந்த வேன் நம்ம ஆபிசர ஏத்திகிட்டு நம்ம தேனாம்பேட்டையிலிருந்து சைதாப்பேட்டைக்குப் போகுது. அங்கே ஒரு பினாயில் கம்பெனியிலெ அவர எறக்கி விட்டுட்டுப் போகுது. அந்தக் கம்பெனிப் பேரு கலாவல்லி பினாயில் கம்பெனி. அப்பறமா அந்த வேன் நேரா அங்கே பக்கத்திலெ உள்ள ஒருத்தர் வீட்டுக்குப் போய் அந்த வீட்டிலெ இருந்து ஒருத்தரை ஏத்திகிட்டு திருவல்லிக்கேணிக்குப் போகுது. அந்த அதிகாரி யாருன்னு இன்னிக்கு நான் கண்டுபிடிச்சிட்டேன். அவரு வீட்டு கேட்லெ மாட்டி வச்சிருக்கிற பெயர்ப் பலகையைப் பார்த்தேன். அதிலெ “உ. பரமசிவம், தொழில் துறை இணை இயக்குநர்ன்னு போட்டிருக்கு” என்று தான் கண்டுபிடித்த ரகசியத்தைக் கூறினான் கருப்பையா.
======
அதிர்ச்சி அடைந்த அங்குசாமி, ”அப்படியா? அப்ப இதிலெ ஏதோ வில்லங்கம் இருக்கும் போல தெரியுதே” என்று யூகித்தார். சிறிது நேர யோசனக்குப் பிறகு, ”அட, எதா இருந்தா நமக்கென்ன? அந்தப் பரமசிவமும் நம்ம ஆபிசரும் ஒரே டிபார்ட்மெண்ட்லே தானே வேல பாக்கறாங்க. அதனால ரெண்டு பேருக்கும் அரசாங்கத்லே ஒரே வேனைக் குடுத்திருப்பாங்க” என்றார். “நீங்க சொல்லறது சரி தான் ஏட்டையா. இருந்தாலும் நம்ம ஆபிசரு பலராமன் அய்யா எதுக்காக அந்த கலாவல்லி பினாயில் கம்பனிக்கே தெனமும் போகணும்? தொழில் நுட்ப அதிகாரின்னா மற்ற கம்பெனிகளுக்கும் தானே போகணும். அது தான் எனக்கு சந்தேகமா இருக்கு”, என்று தனது சந்தேகத்தை வெளிப்படுத்தினான் கருப்பையா. “அட, இதிலெ நமக்கு என்னய்யா நட்டம். மூணாம் மனுஷங்க கதை எல்லாம் நமக்கு எதுக்கு? என்று முடித்தார் அங்குசாமி.
=========
இந்த உரையாடல் நடந்து சரியாக ஒரு மாதம் இருக்கும். அன்று வெள்ளிக்கிழமை. வழக்கம் போல மாலையில் வீடு திரும்பும் பலராமன் அன்று இரவு எட்டு மணியாகியும் வீடு வந்துசேரவில்லை.
கணவனுடன் பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு கோயிலுக்குச் செல்லலாம் என்று ஆசையுடன் தலை நிறைய குண்டு மல்லிகைப் பூவைச் சூடியிருந்த கலாவுக்கு ஒரே ஏமாற்றம். தன்னுயிர் பலாவுக்கு என்ன ஆனதோ என்று பதறிப்போனாள் கலாவல்லி. சுமார் ஒன்பது மணி இருக்கும். ஒரு பையன் கலா வீட்டுக்கு வந்து ஒரு கவரைக் கொடுத்துவிட்டுச் சென்றான். வீட்டிற்குள் சென்ற கலா அவசர அவசரமாக அந்தக் கவரைப் பிரித்தாள். தனபால் என்பவர் தான் அந்தக் கவரில் ஒரு அவசர செய்தியை கலாவுக்கு அனுப்பி இருந்தார். கலாவுக்கு அதிர்ச்சி தரும் செய்தி.
(தொடரும்)