எனக்கும் தருவீர்களா

கருவறையில்
உருவாகி
கழிவறையில்
கண் விழித்த
எனக்கும்
தருவீர்களா.....?

பிரம்பெடுத்து
புற முதுகில்
அடித்து பின்
ஒரு புறம் அமர்ந்து
அழும் அன்னையை....

ஹிட்லர்
பார்வையில்
அதட்டி பின்
நகைக்கும்
தந்தையை.....

சடையிழுத்து
கொட்டி பின்
கொஞ்சும்
அண்ணனை....

சண்டை
பிடித்து பின்
சமாதானம்
பேசும் அக்காளை.....

ஒன்றாய்
திருடித்தின்ற பின்
ஒன்றுக்கு ரெண்டாய்
மாட்டிவிடும்
தம்பியை....

செவி சாய்த்து
கதை கேட்டு பின்
மடி சாய்ந்து
தூங்கும் தங்கையை.....

அனாதை
என்ற பட்டத்துக்கு
பின் ஒரு விடியலை
எனக்கும் தருவீர்களா...?

எழுதியவர் : ம.கலையரசி (31-Jan-15, 8:31 am)
பார்வை : 73

மேலே