சுவர்க்கோழி மனது
திடீரென உறக்கம் கலைந்து
..விழித்தபோது
கனவு ஒன்றும் கலைந்து போனது..
நினைவு படுத்தி பார்த்தால்
நினைவுக்கே வரவில்லை..
ஆனாலும்..
மனமெல்லாம் ரம்மியமாக..
ஏதோ இனம் புரியாத
ஆனந்தம் தென்றல் காற்று
வெயிலின் இடையில் வீசும்
நிலை உணர்ந்தேன்..
யாருடனோ பேசிக் கொண்டிருப்பது போல்
மெல்லிய துணி ஒன்று முகத்தில் போர்த்தியது போல்
நினைவுக்கு வர..பின்னணியில் இன்னிசை கீதம் ஒன்று..
அது யார் ..என்ன பேசிக் கொண்டிருந்தோம்..என்ன பாட்டு..
என்பது மீண்டும் நினைவில் வராமல்
அன்றைய நாள் முழுவதும்
பசித்தவன் கையில் இருந்த பாதி தோசையை
யாரோ பறித்து சென்றது போல் ஒரு
விசனமும்..
கனவில் ஏற்பட்ட ஆனந்த உணர்வும்..
கலந்து கடத்திய நாள்..
முடிவுக்கு வந்தது ஒரு வழியாக..!
கொஞ்ச நாளே பழகி ..
இன்னிசை சுரங்கள் தந்து
கனவாய் கலைந்து சென்றவள்
கனவில் வந்திருப்பாளோ ?
இன்று ஏன் உறக்கம் வரவில்லை..
சுவர்க் கோழி ஒன்றின்
இடை விடாத சப்தத்தில்
எப்படியோ நான் உறங்கிவிட்டேன்..!
என்ன கொடுமை இது..
இன்றும் அதே மாதிரி....
சுவர்க் கோழி இன்னும்
பலமாக கத்திக் கொண்டிருக்க..
இருளில் கண் திறந்தபடி நான்!