நீ என் காதலியானால்
பிரபஞ்சம்
பிழிந்தெடுத்து
தென்றல் தீண்டா
தேகமதை
மஞ்சள்
குளிப்பாட்டுவேன்....
கருநீல
வானமெடுத்து
ஈரம் தோய்ந்த
நீள் குழல்
உலர்த்துவேன்.....
அன்றலர்ந்த
நறுமலர் எடுத்து
பாவையுனக்கு
ஆடை நான்
நெய்வேன்.....
தேகம் தேய்ந்த
பிறை நிலவெடுத்து
கார் குழல்
சீவி சரி செய்வேன்.....
சிதறிக்கிடக்கும்
நட்சத்திர
துகள் பொறுக்கி
பொன் மேனியதற்கு
ஆபரணம் செதுக்குவேன்....
பாதாளம்
பிளந்தேடுத்து
எரிமலை குழம்பதில்
நகைகளுக்கு
வர்ணம் சேர்ப்பேன்.....
வலம் வரும்
வியாழனை இடை நிறுத்தி
வலயம் இரண்டை
கடன் வாங்கி
கம்மல் செய்வேன்....
மின்னல் கீற்றை
அடுக்கி வைத்து
மழைத்துளி வைரத்தை
பதுக்கி வைத்து
பட்டிதழ் செவிகளுக்கு
மாட்டல் செய்வேன்....
வால்வெள்ளி
பிடித்து வந்து
நூலிடை பூவுனக்கு
மேகலை பூட்டுவேன்....
சுட்டெரிக்கும் கதிரவன்
ஒளி திரட்டி
பிறை நிலா நுதலுக்கு
திலகமிடுவேன்....
அறுபத்து மூன்று
நிலவையும் சரிபாதியாக்கி
கமலப்பாதங்களுக்கு
கொலுசு நான் மாட்டுவேன்...
பூலோகம் ஒதுக்கி
முதலாறு
கோள்களையும் நசுக்கி
உன் பாதம் தொடும்
கொலுசதற்கு
மணிகள் செய்வேன்....
என் உயிரதை
எரித்து
இரத்தத்தில் குழைத்து
உன் இமைகளுக்கு
அஞ்சனம் பூசுவேன்....
இத்தனையும்
போதாதென்றால்
ஏழு ஜென்மம் கடந்து
எட்டாவது ஜென்மமெடுப்பேன்
உனக்காக.....
நீ என் காதலியானால்.......!