காலனின் பிடியில் ஒரு வேண்டுதல்

கண்களில் உயிராய்,உலகமாய் நீயடா!
காத்திருந்த காலனின் பிடியில் நானடா!
உலகமே நீயாக வாழ்ந்த போதும்
நீயே உலகமாக வாழும் போதும்
உன் ஆர்ப்பாட்டங்களிலும்
உன் மவுனத்திலும் வழி நடத்தினாய்!
இதயத்தில் நான் சுமந்த நினைவுகளை
இன்று நீ பாரமாய் சுமக்கிறாய்!
வெறும் மண்தான் பெண் என்பவள்
சிலையாக்கியது உன்னுடன் வாழ்ந்த நாட்களே!
வாழ்க்கை கடலில் நீந்த
உன்னுடன் இணைந்தேன்!
உன் தோள்களில் தலைசாய்த்து
என் பாரங்களை இறக்கி வைத்தேன்!
சிரித்துக் கொண்டே
சுமைகளை எல்லாம்
சுகமாக மாற்றும் வித்தையை
சுலபமாய் எனக்கும் புரியவைத்தாய்!
தந்தையின் கண்டிப்பும்,
தாயின் பரிவும்,
தோழனின் ஆறுதலும்,
ஆசானின் அறிவுறுத்தலும்,
சகோதரப் பாசமும்,
பிள்ளையின் குறும்பும்
ஒருவர் குறையும் தெரியாமல்
அறுபதின் தனிமையை உணர்த்தாமல்
எல்லாமும் நீயாகவே மாறிவிட்டாய்!
மணமுடித்த கையுடன்
விவாகரத்து படிவம்
வாங்குபவர் வாழ்ந்திடும் காலத்தில்
ஆஸ்பத்திரி மருந்து சீட்டுடன்
எனக்கான பயணம் செய்கிறாய்!
காலனுக்கு மட்டும் என்மேல்
கோபம் ஏனோ?
நீ வரும்வரை பொறுக்காமல்
வீசுகிறான் பாசக்கயிற்றை!
செல்கிறேன் மணாளனே
பறக்கத் தயாராகிவிட்டது
உயிர்ப்பறவை!
ஆன்மா மட்டுமே விட்டுச்செல்கிறேன்.
விண்ணில் சந்திக்க
வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கிறேன்.

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (31-Jan-15, 4:41 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
பார்வை : 66

மேலே