செல்லா நோட்டுகள்

இரத்தம் பிழிந்து பாலூட்டியவளுக்கும் ,
வியர்வை சிந்தி வளர்த்தவனுக்கும் ..
இருக்க இடம் இருந்தும் ,
இடம் இல்லையாம் மனதினில் ..!!

உழைத்து தோய்ந்து உதிர்ந்த ,
விலை மதிப்பெற்று விடைபெற்ற ..
செல்லாமல் போன நோட்டுக்களாய் ,
இன்று முதியோர் இல்லங்களில் ..!!

நற்கதை சொல்லி உறங்கவைக்க ,
பொக்கைவாய் தாத்தனும் இல்லை ..
பக்குவம் பல பார்த்துவைக்க ,
இங்கு பாட்டியும் இல்லை ..!!

கதவை பூட்டிக் கொண்டு ,
தனி அறையில் தனியாக ..
கணினியில் கண்டதை கண்டு ,
களித்திருந்த ஒரு குழந்தை ..!!

வீட்டின் வேறொரு மூலையில் ,
விளையாட யாருமின்றி விம்மி ..
அலைபேசியில் பூனைக் குட்டியோடு ,
பேசிக்கொண்டிருந்த மற்றொரு குழந்தை ..!!

சமையலறையில் வேலைக்காரியுடன் இன்பம் ,
சமைத்துக் கொண்டிருந்த தலைவன் ..
குடும்பம் குழந்தை மறந்து ,
முகஅழகு கூட்டிக்கொண்டிருந்த தலைவி ..!!

இங்கு செல்லா நோட்டுக்களின் ,
மதிப்பறிய மறந்த வீடெல்லாம் ..
இன்னும் இப்படி பலபல ,
இன்னல்களின் இடையே நிதர்சனமாக ..!!

-- கற்குவேல் .பா --

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (1-Feb-15, 6:45 pm)
Tanglish : sellaa nottukal
பார்வை : 108

மேலே