அம்மா நினைவு

அம்மா
இப்போது
கனவில்
வருவதில்லை !

தொலைக்காட்சியின்
அம்மா பாடல்களுக்கு
கண்ணீரில்லாமல்
வெறுமனே
நெகிழ்ந்து கிடப்பதோடு
சரி !

அம்மாவின்
புகைப்படத்தைக்
கும்பிட்டுவிட்டு
வேலைக்குப்போவது
ஒரு சிலநாள்
தவறி விடுகிறது !

அலைபேசியின்
ஸ்க்ரீனில்
அம்மாவுக்கு பதில்
இப்போது
சாமி படம் !

ஓர்
இணையக் கணக்கில்
i love amma
என்கிற
கடவுச்சொல் மட்டும்
இன்னும்
அப்படியே !

அம்மாவைப் பற்றி
விசாரிப்பவர்களுக்கு
இப்போது
ஒரு வறண்ட புன்னகையுடன்
பதில்சொல்ல முடிகிறது !

சாப்பிடும்போதெல்லாம்
எழும்
அம்மாவின் நினைவை
ஜீரணிக்கப் பழகியாகிவிட்டது !

இருந்தாலும்

தன்
குழந்தையைச்
செல்லமாய் அதட்டி
செல்லமாய்
வேடிக்கை காட்டி
செல்லமாய்ச்
சோறூட்டும்
அம்மாக்களைப்
பார்க்கும்போதெல்லாம்
ஏக்கம் கவிந்து
தாழ்ந்து கொள்கின்றன
கண்கள் !

எழுதியவர் : குருச்சந்திரன் (2-Feb-15, 3:31 pm)
Tanglish : amma ninaivu
பார்வை : 2863

மேலே