இரவல் இரவு

இரவல் இரவு..

எங்கோ கேட்கிறது,
ஓர் அபலையின் ஒப்பாரி...
அவளுக்காக விடைப்பெறவில்லை தான்
அந்த கதிரவன்,
விடைப்பெற்ற நொடியில், தினமும்
விடை இல்லா புரியாத புதிர்கள் காண்கிறாள்..
அந்த முடிவில், தவறாமல்
வழியனுப்ப வந்திடும்
கண்ணீரில் காய்ந்த கைக்குட்டைகள்...

எங்கோ கேட்கிறது,
ஓர் ஆணின் குறட்டைச் சத்தம்...
அவனுக்காக பணிவிடைச் செய்த அவளோ,
அவரசத்தில் துலைத்த அந்தரகத்தைத்
தேடிப் பார்க்கிறாள்,
அந்த நள்ளிரவின் தேடலில்,
அவளோடு பயணிக்க
காத்திருக்கின்றன நட்சத்திரங்கள்...

எங்கோ கேட்கிறது,
ஓர் அப்பாவின் புலம்பல்..
மாத இறுதி வருகையாளர்களை எண்ணி.
அவர் சட்டையில் பையும் இல்லை, அதனால்
அங்கே எட்டணாவுக்கும் பத்தணாவுக்கும் சண்டையில்லை..
ஆனால், காற்சட்டைப் பையின் ஓரமாய்
கண்ணடிக்கின்றன "நம்பர்" காகிதங்கள்....

எங்கோ கேட்கிறது,
ஓர் அம்மாவின் விசும்பல்,
முதிர் காய்கள் கூடையின் ஓர் ஓரமிருக்க,
முதிர் கன்னிகள் கூரையின் கீழ் படுத்திருக்கிறார்கள்,
முகவரி தொலைத்திருந்த அவளின் மூன்று மடந்தைகள்,
அவளின் கடைசி
மூச்சு நின்றுவிட்டால்,
காய்களுக்குக் கூடைதான் அடைக்களம்,
முதிர் கன்னிகளுக்கு ? சாயமிழந்த சாரளங்கள்...

எங்கோ கேட்கிறது,
ஒரு மகனின் ஆரவாரங்கள்...
படிக்க வந்தவன்
பாடிக் களி(ழி)க்கின்றான்,
"கரவோக்கே" இசையில்
காதைக் கிழிக்கின்றான்,
அங்கே காணமல் போவது எதுவோ ?
பெற்றோரின் வியர்வைகள் ,
உடன் பிறப்புகளின் கனவுகள் ; நம்பிக்கைகள்...

எங்கோ கேட்கிறது,
ஓர் இளம் விதவையின் விம்மல்..
கைப் பிடித்து நடக்க கற்றுத் தந்தவரை
எட்டி உதைத்து விட்டாள், இன்று
கைப் பிடித்து ஓட கற்றுத் தந்தவன் யாரேன கேட்டு ,அவளை
எட்டி உதைக்கிறது வயிற்றில் வளரும்
தந்தை முகமறியா குழந்தை,
வாழ்க்கைப் பந்தயத்தில்
காலனோடு தோற்றுவிட்டான் காதல் கணவன்...


எங்கோ கேட்ட
ஒப்பாரி,
குறட்டைச் சத்தம்,
புலம்பல்,
விசும்பல்,
ஆரவாரங்கள்,
விம்மல்..

இவைகளில்
இவர்கள் பயணித்த
இரவுகளை
இரவல்கள் கேட்க துணிவோமா ? துணிவு
இல்லை என்றால்
இந்த இரவு கொடுத்த
இறைவனுக்கு ,
இமை மூடி நன்றி சொல்லிடுங்கள்
இதயங்களே...

எழுதியவர் : ஜனனி ராஜாராம் (2-Feb-15, 9:20 pm)
Tanglish : iraval iravu
பார்வை : 68

மேலே