யாராலும் எழுதப்படாத கவிதை

(அவர்கள் 70 அகவை கடக்கிறார்கள். அப்போது அவர்களின் திருமண நாள் வருகிறது. அன்று அந்த கிழ ஜோடிகளின் காதல் வசந்தத்தின் சொர்க்க மகரந்தம் இது ."யாராலும் எழுதப்படாத கவிதை" ஆகிறது
******************************************************************************************************************************************************

காலக் கிழவனின்
கணக்குப் புத்தகத்தில்- நாம்
ஆரம்ப பக்கங்களில்
அமர்ந்திருக்கிறோம்.

பக்கங்கள் கிழிப்படுகின்றன
சொர்க்கங்கள் வசப்படுகின்றன
*
மேற்கு திசையில்
ஒரு மணித்தீவு
மணித்தீவில் நாம்
புதையலாகுமுன்
மலரும் சந்தங்களை
உச்சரிப்போம். வா!

அவை-
பூமரச் சருகுகளின்
மலர் நினைவுகள்
அந்திப் பொழுதின்
அதிகாலை ஞாபகங்கள்
*
இளங்காளைப் பருவத்தின்
இளவரசி - என்
கண்ணீரோடு நடந்து வந்த
மனையரசி,

கண்ணீர்த் தீவுகளை - நாம்
சிரிப்புகளை வீசிக் கடந்தோம்
சந்தோஷக் கணங்களை
கண்ணீரை யழுது ருசித்தோம்

நம்
சராசரி எல்லைக்குள்ளே - ஒரு
சாம்ராஜ்யம் நிறுவினோம்

அன்பு எனும்
ராஜவாளைக் கொண்டே
எல்லா உணர்ச்சிகளையும்
வென்றோம்

ஏய்... கிழவி!
நந்தவனச் செடிகளுக்கு
இன்று
வயதாகி விட்டதடி

நம்
வசந்த கால ரோஜாக்களை
தேவதைகள் பறித்துவிட்டன.

கால நதியில் - நாம்
கடலருகே மிதக்கின்றோம்
கடலருகே மிதந்தாலும்
காலத்தை ரசிக்கின்றோம்

இதோ ...உன்
நெற்றியில் விழுந்திருக்கும்
விதியின் சுருக்கங்கள்
கவிதை வரிகளைக்
காட்டுகின்றன.

அதில் நான்
காதலை வாசிக்கிறேன்

அது-
யாராலும் எழுதப்படாத காதல் (1995)


('தரையில் இறங்கும் தேவதைகள்' நூலிலிருந்து) எழுத்தில் மறு பதிவு

எழுதியவர் : கவித்தாசபாபதி (2-Feb-15, 10:13 pm)
பார்வை : 263

மேலே