நீ நான் நிழல்சிறுகதை

இரவுகள் மாற்றங்களுக்கானது.....காற்றாய் பயணிக்கும் பகல்கள் இரவுகளால் குளிர்விக்கப்படுகின்றன....இரவுகளைத் தொலைத்தவர்கள் தான் தூங்கித் தொலைகிறார்கள் என்றொரு கவிதைக்குள் தன்னை யாரோவாக்கி பின் தானாக, முயற்சி செய்து கொண்டிருந்த பொழுதில் தான்... அர்ஜுனுக்கு மீண்டும் அந்த அலைபேசி வந்தது......

"ஹெலோ யார்ங்க.... நான் தான் ராங் நம்பர்னு சொல்றேன்ல.... சும்மா சும்மா ஏன் கூப்டறீங்க...."- மெல்லிய குரலில்... நிதானமாக கூறினான் அர்ஜுன்...

மறுமுனையில் ஒரு பெண்குரல்....

"மன்னிக்கவும்... எப்படியோ உங்களுக்கே அழைத்து விடுகிறேன்.. மீண்டும் மன்னிக்கவும்.." என்று மெல்லிய, மெல்லிய குரலில்... மயக்கும் வார்த்தைகளாக எதையோ தேடியது போல ஒரு ஆத்மார்த்தம் கலந்தபடி மௌனித்தது....

நான்கு நாட்களுக்கு முன்னால் ஒரு பின்னிரவு வேளையில் வந்தது ஒரு அழைப்பு.. ராங் நம்பர் என்று முடிவானது....... இன்றோடு இது ஐந்தாவது முறை..... இந்த முறை அர்ஜுனுக்கு அந்தக் குரல் ஏதோ செய்தது....அடிக்க அடிக்க அம்மியும் நகரும் என்பது போல... அந்தக் குரலில் ஒரு தேடல் இருந்ததை உள் வாங்க முடிந்தது... சரியாக இரவு 11 மணிக்கு மேல்தான் அந்த போன் வருகிறது.... அன்பினால் செய்யப்பட்ட குரலாகவே அவனுக்கு தோன்றியது.... அவன் அலைபேசியையே பார்த்தான்.... தூக்கம் வரவில்லை.... நேற்றிலிருந்து இந்த குரல் பற்றிய எண்ணம் மெல்ல, நீரோடையாகிக் கொண்டிருக்க வேண்டும் என்பதை இன்று வந்து, கட் ஆன பின் உறுதிப் படுத்திக் கொள்ள முடிந்தது.. எங்கே எப்போது, யார் குரல் பிடிக்கும் என்று யாருக்கு தெரியும்... தெரிந்தாலும் தெரிந்து விடுகிறதா என்ன?...

மீண்டும் அலைபேசியைப் பார்த்தான்..... அது வெடித்து விடும் இதயத்தை மாற்றிக் காட்டுவதாகப்பட்டது... தனிமைக்குள் இரவின் நெடி அவனெங்கும்... புதிய ஊர்.... புதிய மக்கள்... புதிய வேலை....எதுவுமே ஒட்டாத ஒரு வாழ்க்கையை அவன் கடந்து கொண்டிருக்கும் போது இந்த புது சூழல் இன்னும் இன்னும் அவனை தூரமாக்கிக் கொண்டே செல்வது போல இருந்த ஒரு வேளையில் தான் இந்த அலைபேசியின் அழைப்பு... மிக நெருக்கமான ஒரு கத கதப்பை ஒரு இயலாமையின் இருண்மையாக அவனுள் எதையோ புதைப்பதாகவும் தேடுவதாகவும் மாற்றி மாற்றி ஜாடை காட்டிக் கொண்டிருந்தது....

ஒவ்வொரு முறையும் அந்த பெண் பெரிதாக எதுவும் பேசுவதில்லை.. அது ஒரு தீர்க்கமான குரலாகப் படுகிறது.... ராங் நம்பராக இப்போது தொடரவில்லை... மெல்லிய இழைகளால் நெய்யப்பட்ட பட்டு போல ஒரு ஜரிகையாக அந்தக் குரலில் ஒரு வசீகரம் இருப்பதை நினைவுகளில் உணர முடிந்தது.. காத்திருத்தல், கலகம் செய்யும் கவிதை மனதில்... என்பது போல...

மறுநாளும் அதே நேரம் காத்திருப்பின் வாசம் தாண்டி அலைபேசியின் ரேகை தடவிக் காத்துக் கொண்டிருந்த விரல்களில் அன்னிச்சை செயல் போல ரிங், தன்னை "திற திற" என்று அடி மனதில் இருந்து கத்தியது.. சட்டென்று தொட்டான்... ஒளிர்ந்த பச்சையில், அவள் குரல்...... மீண்டும் அதே பேர்... கேட்கிறது....

இம்முறை.. தீர்க்கம் உடைத்தான்.... மௌனம் வாங்குவது போல....

நான் அர்ஜுன்.... உன் பேர் என்ன.... என் வயசு 30...... உனக்கு ஒரு .....

24....

மறுமுனை வேகமாக கூறியது.......

ஒரு மீனாட்சினு.... வெச்சுக்கலாமா உன் பேரை....

வெச்ச பேர்... தெரியாது..... வெச்சுக்கிட்ட பேர் நியந்தா......

நியந்தா.... !.......புதுசா இருக்கு....

நானும் புதுசு தான்...

எதுக்கு...?

எதுக்கும் ......

நீ வேணும்னு தான எனக்கு போன பண்ற...?

ம்ம்.. வேணும்னுதா போன பண்றேன்...

எந்த ஊர்...

கோயம்புத்தூர்.....

நான்....மேட்டுப் பாளையம்....

பக்கம் பக்கந்தான்.. போல.....

என்ன ஏதோ பாட்டு கேக்குது...

இரு நல்ல கேளு....

"ஊரும் உற்றாரும் உறவும் ஏதுமின்றி உலவும் சம்சாரி நான்...பல நாளும் சந்தோசம் நடத்திப் பார்த்து விடும் நானோர் சந்நியாசி தான்...."

அலைபேசியை மீண்டும் காதுக்கு கொண்டு சென்றான்....

ரெம்ப விரக்தி போல...!

விரக்தி இல்லைன்னா அது என்ன வாழ்க்கை..?

புரியலையே..!

எல்லாம் புரிஞ்சிட்டா... அதும் என்ன வாழ்க்கை...?

சிரித்தாள்........ ஒவ்வொரு சிரிப்பிலும்..... முத்துச் சிதறலோ....!

தொடரும்.... என்று போட்டு இரவு விடிந்தது....... மீண்டும் தொடர்ந்த இரவில் மற்றுமொரு பகல்... கொஞ்சம், கண் சொக்கிய நொடியில் முத்தமிட்டு எழ செய்யும் அளவுக்கு அலைபேசி சூடானது....

எல்லாம் பிடித்தது ... வண்ணம் பிடித்தது .. எண்ணம் பிடித்தது ... பிடித்த படம் ஒன்றானது.. பிடித்த உணவு ஒன்றானது.....

எனக்கு............................................ பிடிக்கும் என்று.... மிகவும் ரகசியக் குரலில் சொன்னான்...

எனக்கும் பிடிக்கும்...... என்றாள் சத்தமாக...

ஹே..... என்ன பேசற.. இந்தியாவுல அதும் தமிழ்நாட்டுல.. அய்.........யோ...... சான்சே இல்ல.... எப்டி அதெல்லாம் பிடிக்கும்...!?....

ஏன், நீங்க மட்டும் தான் ............................ படம் பாப்பீங்களா...........? அதுமில்லாம இது காமசூத்ரா பொறந்த மண்ணு......

ஹ ஹஹா......

இம்முறை அர்ஜுன் சிரித்தான்......

சிரிப்பையும் அழுகையையும் மாற்றிக் கொண்டார்கள்..... என்ன உடை என்று கேட்டு அந்த வண்ணத்தில் உடை அணிந்து கொண்டார்கள்....

அவளின் அலைபேசி வரத் தாமதமாகும் நாளில் அவன் தன் வசம் இழக்கத் தொடங்கினான்... இல்லாமலே போய்விடுமோ என்று யோசித்த ஒரு வாழ்கையை ஒரு அலைபேசி திருப்பித் தந்ததாக நினைத்தான்........ ஒருவேளை "ஹெர்" படத்தில் வருவது போல இது ஒரு கணிப்பொறியின் குரலாக இருக்குமோ என்றுகூட மனதுக்குள் ரீங்காரம், வண்டாகி குடைந்தது.......முத்தங்கள், காற்றலையோடு கூந்தல் விரித்தன......... கூந்தல், கட்டிலோடு தாலாட்டியதாக அவன் நிர்வாணம் கூறும் நேரங்களில், அவன் அறை வெட்கப்படும் அளவுக்கு மோகித்துக் கிடந்தான்....

நாட்கள் கடக்க, நாட்களே கடிக்க.... ஒரு நாள் சட்டென்று கேட்டான்.. முன்னிரவு முழுக்க யோசித்ததன் விளைவாக கேள்வி சிவப்பாய் மூன்று முடிச்சு பற்றியதாகிப் போனது....

................................

ஏன் முடியாது....? என்ன லவ் பண்ற தான...?

ஆமா...

அப்போ ஏன் கல்யாணம் பண்ணிக்க முடியாது.....!

மீண்டும் மௌனம்.....

"இல்ல நியந்தா..... நான் ரெம்ப தூரம் உன்கூட வந்துட்டேன்.. இனி திரும்ப போக சொல்றது நியாயம் இல்ல... பேசாம நான் செத்து போறேன்... செத்து போறது பெரிய வேலையே இல்ல.. இதோ இப்போ என் கையில புது ப்ளேடு இருக்கு.. இடது மணிக்கட்டு நரம்பை அறுத்துக்கிட்டு உன்கிட்ட பேசிட்டே செத்து போய்டுவேன்...."

அவன் தன் காதலை பால்வீதியில் சமைக்கத் தொடங்கி வெகு நாட்களாயிற்று....... காதல் எத்தனை துயரமானது என்பது அதில் வியந்து வாக்கியமான ஒருவனுக்குத்தான் தெரியும்....... அது கலவியின் உச்சம் அடைவது போல.... ஒரு நொடி சுண்டல்.. அதை நோக்கித்தான் அத்தனை அன்பும்.. வாழ்வும்..... வாழ்க்கையே ஒன்றுமில்லாமல் போக ஒரு பெண்ணின் சிறு புன்னகை போதும் என்று தன்னையும் காவியம் படைக்க செய்து விடும் நாளில் அவன் காதலோடு செத்து போவதே மேல்.....

அர்ஜுன் பேசிக் கொண்டேயிருந்தான்...

அவள் மறுமுனையில் அழுதாள்.......

தேம்பி தேம்பி அழுதாள்....

இத்தனை பிடிக்குமா என்னை.. என்று மீண்டும் தேம்பினாள்...

அவள் செத்து போனால் உடன்கட்டை ஏறும் அளவுக்கு பிடிக்கும் என்றான்....... இது, தன் வாழ்நாளுக்கான காதல் என்றான்.... அவன் எங்கு தேடியும் கிடைத்திடாத ஒரு வகை பரவசம் அவள் என்றான்..

அவளில் இருந்தே தன்னை கண்டு கொள்வதாகக் கூறினான்.......தன் முகமூடி களைந்து நிர்வாணமாக அவள் முன்னால் நிற்பதாக கூறினான்........ முகம் பார்க்காத பெண்ணுக்காக இத்தனை தூரம், தான் போவது ஒருவகை பைத்தியகாரத்தனம் தான்.. ஆனால் அதில் தானே காதலும் இருக்கிறது.... புத்திசாலிகளால் ஒரு போதும் காதலை கட்டிலில் இருந்து காப்பாற்றி விட முடியாது......

அர்ஜுன் பேசிக் கொண்டேயிருந்தான்...

மறுநாள் ஓடோடி வந்தாள்.. நியந்தா....

கட்டிக் கொண்டே தாலி கட்டிக் கொண்டார்கள்.... இரவு பகல் என்று கட்டிலோடு இணைந்தே கிடந்தார்கள்.....இருவரின் தொடர் பார்வைகள்... தொடர்... கோர்வைகள்....... ஒவ்வொரு அணைப்பிலும் பார்வையிலும் ... ஸ்பரிசத்திலும் காதலை வளர்த்துக் கொண்டேயிருந்தார்கள்.......பலம் கொண்டு இறுக்கி ஒருவர் முதுகை ஒருவர் துளைத்துக் கொண்டேயிருந்தார்கள்.... கலவியின் போது தான் ஒரு மனித உடல் முழுமையாக பூரணத்துவம் அடைவதாக காதோரம் ரகசியமாகக் கூறிக் கொண்டார்கள்...... காதலில் காமமும் காமத்தில் காதலையும் முழுமையாக பகிர்ந்து கொண்டார்கள்.... ஒவ்வொரு நொடி தோறும்... ஒவ்வொரு வியப்பில் வாழ்வைக் கொண்டாடினார்கள்........ ஒருவரையொருவர் கடித்து தின்று விட தீர்மானித்துக் கொண்டது போல... தீர்க்கமாய் கிடந்தார்கள்.....அவர்களின் காட்டுக்குள் இலைகள் பூத்துக் கொண்டே இருந்தன..........

காதோரம்... நான் உன்னைக் காதலிக்கிறேன் என்று 1001வது முறையாக சொல்லிக் கொண்டார்கள்...

ஒரு மாதத்திற்கு பின்....

நியந்தா சமையல் அறைக்குள் ஏதோ வேலையாக இருக்க,... அர்ஜுன் பின்னால் சென்று கட்டி அணைத்தான்... வழக்கம் போல...

அவள் சட்டென்று உதறினாள்....

"இதே வேலை தான.. இத தவிர வேற ஒண்ணுமே இல்லையா.. எப்பவும்.... செக்ஸ்...... செக்ஸ்..... செக்ஸ்..... அலுப்பா இல்லையா..... நான் மனுஷிதான..... மிருகமா....... ரெம்ப முடியலனா... ஏதாது ஒரு வேசிகிட்ட போக வேண்டியது தான........அதான் ஏற்கனவே போய் பழக்கம் இருக்கில்ல....."

அவள் பேசியபடியே குனித்து கொண்டாள்.. அவள் கண்கள் நீர் கோர்த்து துடித்தன...

மிரண்டு போனான் அர்ஜுன்..... ஒன்றும் புரியவில்லை....

தொடர் கேள்விகளால் மூர்ச்சையாகி பதில் வேண்டாத மௌனத்தில் உலகம் காணாதவனாகக் கிடந்தான்.... அவன் அவளிடம் எதுவும் பேசவில்லை.... வேகமாக எழுந்தான்....... கதவைப் படாரென்று அடைத்து விட்டுக் கிளம்பினான்....

"சந்தோசமாக இருக்கும் போது சொல்லும் உண்மைகளை இந்த பொண்டாட்டிகள் சண்டை வரும் போது சாதகமாக்கிக் கொள்வது, எந்த விதத்தில் நியாயம்....குடிக்கத் தோன்றவில்லை....... குடித்தால் மனதுக்குள் காதல் வந்து விடும்.. மனம் இலகும்.. வேண்டாம்......" என்று கால் போன போக்கில் நடக்கத் தொடங்கினான்........

"அப்படி என்ன பண்ணிட்டேன்..... அப்டியே உடம்பு முடியலனா, இன்னைக்கு வேண்டாம்னு சொல்ல வேண்டியது தான...... நான் என்ன சொல்ல போறேன்.... அதுக்கு வேசிட்ட போன்னெல்லாம் சொல்ல வேண்டாமே...."- என்று அவன் எண்ணங்கள் சுழன்று கொண்டே நடக்க........ இரவுகள்.. சாலைகளை... வீடுகளாக்கிக் கொண்டது போல ஒரு கூட்டம் சாலையோரம் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தன..... அவர்கள் நிம்மதியாக தூங்குகிறார்கள் என்று கூறுவது, பறவைக்கு அழத் தெரியாது, பறவைக்கு துக்கம் இல்லை என்று சொல்வது போல... தத்துவங்கள்... தேவை இல்லாத போதுதான் வரும் என்பதை அவனுக்கு வந்த பசி உணர்த்தியது.........

"தப்புகள் இல்லையென்றால் தத்துவம் இல்லையடா... தத்துவம் பிறக்கட்டுமே தப்பு பண்ணேன்டா...."- எங்கோ ஒரு காற்றலையில் ரகிசய குரலில் பாட்டு கசிந்து கொண்டிருந்தது...... கால்கள் அழத் தொடங்கிய குழந்தையாக பீரிட்டு கத்தியது... மௌன கதறல் கண்ட சாலை... சரித்ராவின் வீட்டுக்கு போக சொன்னது...

"போயே தீர வேண்டுமா.... தீர வேண்டிய தூரத்தை அடைவே முடியாத போது, இது என்ன ஒரு தூரமா....?..... .. என்னை ஒரு அற்பமாக நினைச்சிட்டாளே... நான் அவ்ளோ மோசமானவனா....... இங்கு எதுவும் சரி இல்லை ..."-மனம் முணங்கிக்கொண்டே இருக்க, கால் டாக்ஸி பிடித்தான்... அவனுக்கு கோபம் வந்து கொண்டே இருந்தது....வண்டி கோவையை நோக்கி பறந்தது.....


மேட்டுபாளையத்துக்கும் கோவைக்கும் ஒரு மணி நேரம் தானே....

இரவு 10 மணிக்கு கதவைத் தட்டினான்... ....

"நான் கல்யாணத்துக்கு முன்னால் ஒரு விபச்சாரியிடம் போனதை தேவையே இல்லாமல் கூறி என்னை நோகடிக்க கூடிய மனம் எப்படி வந்தது அவளுக்கு....."-

மனம் ரத்தம் கசிந்தது ...

"ஆம்.. இன்றும் போனேன் என்று அவளிடம் கூற வேண்டும்........."

நினைவுகளைத் தாண்டி கதவைத் திறந்த சரித்ரா.... கண்கள் விரிய.. ஓடி வந்து அணைத்துக் கொண்டாள்...

மௌனங்களை முத்தமாக கொடுத்தாள்...... வார்த்தைகள் வராத போதும் கண்ணீர் தானாக எதையோ பேசியது.. புரிந்தும் புரியாததும்.... நிறைய இருப்பதாக அவளின் மார்பு சூடு உணர்த்தியது....

சுட சுட இட்லி கொடுத்தாள்..... தலை தடவி முகம் கையில் ஏந்தி.... "எப்டி இருக்க....?" என்றாள்....

அவள் கண்களையே பார்த்தான் அர்ஜுன்.. அது எப்பவும் போல பிரகாசமாக மின்னியது..... அதில் கொஞ்சம் கூட கள்ளமோ கபடமோ இல்லை... அவன் முன்னாலேயே வெள்ளை தாவணி அணிந்து கொண்டாள்.."உனக்கு பிடிக்கும் தானே... "

"மூக்குத்தி மாத்திட்டேன் பார்த்தியா..... உனக்கு பிடிக்கும் தானே....?"

அவனுக்கு அழ வேண்டும் போல இருந்தது...... அவளைக் கட்டிக் கொண்டு அழுதான்... அவள் தேற்றினாள்.... படுக்கையில் சரிந்தாள்... அவனை இழுத்துப் படுக்க வைத்தாள்........ கொஞ்ச நேரம் அணைத்தபடியே கிடந்தார்கள்.... வலது பக்கம் திரும்பி சுவிச்சை ஆப் பண்ணினான் அர்ஜுன் ....

அவள் திகைத்து போய் அவனை உற்று நோக்கினாள்...

இரவு விளக்கு வெளிச்சத்தில் அவன் கண்கள் மூடி எதையோ யோசிப்பது புரிந்தது....
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


அவனும் என்ன தான் செய்வான்.... எத்தனை நாள் தான் இந்த தனிமைக்குள்.... இரவுக்குள்....... வெண்ணிலவின் ஸ்பரிசத்தில்.. ஜன்னல் வெறித்துக் கிடப்பான்.....மிரண்டு கிடக்கும் வயதை என்ன செய்வது.... மிரட்சியின் நீட்சியென.... தீராத் துயருக்குள் செருக்கு காட்டும்... காமத்தை அடக்க என்ன தான் செய்வது.. எது செய்தாலும் மீண்டும் மீண்டும் விழித்துக் கொள்ளும்... உலகத் தத்துவதில் புதியவை ஒன்றும் விளைவிக்க முடியாத தாபத்தில் புரண்டு படுப்பதைத் தவிர வேறு புதிதாக என்ன செய்து விட முடியும்..அவன் அறை சொல்லும் கண்களில் மயக்கத்தில்.... இன்னும் ஒரு பெண் நடிகை தன்னை திறந்து காட்டிக் கொண்டிருப்பதை... சுவரின் இனிபென்று எறும்புகள் ஊர்வதை இரவுத் துளைகள் பதிவு செய்யத் தவறுவதில்லை....

தினம் ஒரு பாடு... தினமே பாடு.... ஏன் இது வரை தன் வாழ்நாளில் ஒரு பெண்கூட இல்லை.. என்ற கேள்விக்குள் நீண்டதொரு பாம்பாய் ஏக்கம் சுருண்டு கிடப்பதை தவிர்க்க முடியவில்லை.. நினைத்து நினைத்து சுய சோகத்தில் இன்பம் பெரும் மனநிலைக்குள் மெல்ல சரிவதைகூட அவன் விரும்புவனாகவே இருக்கத் தொடங்கிய பின்தான் நண்பன் ஒருவன் மூலம் தூரத்து நண்பன் ஒருவன் தொடர்பில் அந்த பெண்ணின் முகவரி கிடைத்தது....

நண்பன் தைரியம் சொல்லி எப்படி பேசுவது.. என்ன பேசுவது... என்று ஒரு செயல் முறை விளக்கமே காட்டி விட்டு ஏதோ அவசர வேலையாக சென்றுவிட... இவன் உடல் நடுங்க... குரலை செருமி தெளிவாக்கிக் கொண்டே அமர்ந்திருந்தான்...ஒவ்வொரு முறையும் தலையை மேல் நோக்கி அறை முழுக்க சுற்றிப் பார்த்து விட்டு அனிச்சை செயல் போல கீழ குனிந்து கொண்டான்..... ஒவ்வொரு துளியாய் வியர்வை அவனை நிரப்பத் தொடங்கியது.... ஜன்னலும் அடைத்த அறைக்குள் வேதாளமாய் புழுக்கம்... காமத்தீயின் இரைச்சல் அரிசியை இரைப்பது போல அறையெங்கும்.. இல்லாத மழைத்தூவலைத் தந்து கொண்டிருந்தன...

சட்டென உள் நுழைந்த அவள்... கண்கள் சுருக்கி... "கொஞ்ச நேரம்....... வந்தறேன் ....." என்பது போல.. ஜன்னலைத் திறந்து விட்டு விட்டு மீண்டும் வேறு அறைக்குள் வேகமாய் ஓடி மறைந்தாள்.......அந்த அறைக்குள் மல்லிகைபூ வாசம்... நிறம் வளர்த்துக் கொண்டிருந்தனவோ.... என்பது போல இவனுக்குள் ஒரு கிறக்கம்.... மெல்ல வருவதை தடுக்க முயற்சிக்கவில்லை.... அவளின் அந்த புருவ சிரிப்பு... ஏதோ செய்தது....சட்டை பட்டன்களைக் கழற்றுவதா வேண்டாமா? என்றொரு தயக்கம்.... ஒரு வேலை போலிஸ் வந்துவிட்டால்.....? புத்தி தடுமாறியது...நண்பன் அடித்துக் கூறினானே....... ... "இது ரெம்ப பாதுகாப்பான இடம்...... சொல்லிக் கொள்ள சொந்தம் இல்லை... வேறு வழியே இல்லாமல் தான் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் இந்த தொழில் செய்கிறாள்... மற்றபடி இது குடியிருப்பு பகுதி கூட... ஆக, பயமில்லாமல் இரவைக் கொண்டாடு......."

நண்பனின் சொல்லோடு வில்லாகி தவித்துக் கொண்டிருந்த அவனின் கவனம் கலைத்தாள்....

"பேரு என்ன? "

கட்டிலில் கால்கள் சேர்த்து அமர்ந்து இரண்டு கைகளையும் நன்றாக ஊன்றி தோள்கள் குறுக்கி மெல்ல உடலை முன்னும் பின்னுமாக ஆட்டியபடியே கழுத்தை கொஞ்சமாக வலது புரம் சாய்த்து இடது பக்கம் அமர்ந்திருந்தவனைப் பார்த்துக் கேட்டாள்..

பேர்....

"சரித்ரா...... என் பேர்..... உன் பேர் என்ன.. "-மீண்டும் கேட்டாள்....

அவன்... முகம் முழுக்க கண்களால் ஆனது போல.... அவளைத் தின்று விடுவது போல பார்த்துக் கொண்டே...."அர்ஜுன்" என்றான்....

சரித்ரா..... எதையோ.... சொல்ல வரத் தொடங்க.... சட்டென பிடித்து இழுத்து அணைத்தான்......சரித்ரா.. அடங்கிப் போனாள்..... லைட்டை சுவிச் ஆப் பண்ண, ஜாடை காட்டினாள்....

"வேண்டாம்...." என்று பதிலுக்கு ஜாடை காட்டினான் அர்ஜுன்....அந்த வெளிச்சம் அவனுள் அடங்கிக் கிடந்த காமத்திற்கு சாட்சியாய் இருக்கட்டும் என விட்டு விட்டானோ... தெரியவில்லை... தெரியாத போது தெரிந்த ஒன்றாய் கலந்து விடுவது தானே தெரியாமைக்கும் தெரிதலுக்கும் உள்ள இடைவெளி நிரப்பும் படலம்...

தூரத்தில் ஏதோ ஒரு பாடல் முன் பின் தெரியாமல் காற்றோடு... புரண்டு கொண்டிருக்க வேண்டும்....இவர்களைப் போலவே...

இடைவெளிகள் இடம் தரும் போது.... கேட்டாள்

"ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கல...?"

மார்பில் அவளின் தாடை அசைவதை கண்ட அர்ஜுன்.... அவளின் நெற்றி மறைத்த கூந்தலை மெல்ல விலக்கியபடியே.... "ஜாதகம் சரி இல்லையாம்.. ஒருத்தனும் பொன்னு தர மாட்டேங்கறான்.... என்ன பண்ண...?" என்றபடியே மீண்டும் லைட்டை ஆன் பண்ணினான்......

இரவுகள் தொடர் கதை ஆனது..... தொடர் கதைக்குள் எத்தனை சிறுகதைகள் எழுதினார்கள், படித்தார்கள்.... என்று கணக்கு இல்லை... அர்ஜுன் தொடந்து வந்தான்.. வாரத்தின் 10 நாட்கள் வரத் தொடங்கினான்.. அவளும்... சமைக்கவே தொடங்கினாள்... அவனின் துணிகள் துவைத்து தரும் அளவுக்கு ஏதோ ஒரு வகை ஈர்ப்புக்குள் அவளும் இருந்தாள் என்று தான் கூற முடியும்.. ஆனால் அதற்கும் சேர்த்தே அவன் பணம் கொடுத்துப் போனான்.....ஒரு நாள் காதோரம் கிசு கிசுத்தாள்.

"உன் முத்தத்தில் பணத்திற்கான மாற்று இல்லை.... ஈரம் மட்டுமே...." என்றாள்.....அவனும் சிரித்துக் கொண்டே... இன்னும் ஓர் ஈரம் பதித்தான்....

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அவனை இன்னும் இறுக்கமாய் அணைத்துக் கொண்டு ஒரு குழந்தையைப் போல அவன் கழுத்துக்குள் நுழைந்து விடத் துடித்தாள்... அவன் அவளை இறுக கட்டிக் கொண்டு ஆதரவாய் தலை தடவி அப்படியே தூங்கிப் போனான்.. அவளின் தூக்கத்தில் வெறும் கண்ணீர் ஒரு காட்டாறாய் திசை வெட்டிக் கொண்டிருந்தது....... இரண்டு மனங்களின் தேடலில் ஒரு தீர்க்கம் எப்போதும் அறுந்து விடாத ஒரு சுழலுக்குள் ஒருவரையொரு சார்ந்து கிடந்தார்கள்.. தூக்கம் இல்லாத துக்கம் மௌனம் ஆவது நிதர்சனம்... நிஜம் சொல்லும் தூக்கத்தில் தெளிவு, காலை ஆகிறது.....


நெற்றியில் ஆழமாய் ஒரு முத்தம் தந்து அவன் கிளம்பி சென்றான்...

பெரும் குரல் எடுத்து அழத் தொடங்கினாள் சரித்ரா.....அந்த அழுகை காதலுக்கானது.......
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

சரித்ராவின் கதவு அர்ஜூனால் தட்டப் படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னால்.............

அலைபேசி தன்னை வியாபித்துக் கொள்ள.... அழைத்தது........ஏதோ பேசினாள்....... அவளின் முகம் சிவந்தது..... சிவந்த முகத்தில் துருத்திக் கொண்டு நின்ற ஒரு முக பருவின் வழியே அவளின் தாபம் .... தடுமாறி.. அனலாய்.. குளிராகி.. பின் அவளின் நினைவுகளானது...... நினைவுகளின் விளிம்புகளில் நிஜங்கள் மெய் மறப்பதன் நிலை என்னவோ.....?... கண் மூடி தியானிக்கும் எதுவும் போதியாகுமோ.. என்றொரு கேள்வியில் அவளின் நினைவுகளைப் பின் தொடர்வது நிகழ் காலம்.....

சரித்ரா.... எதற்கு பிறந்தால் என்றால்...... அதற்கு ஒரு காரணம் இருக்கிறது.....அவளை விட இரண்டு வயது நியந்தாவை..... அவளைத் தவிர வேறு யாருமே கண்டு கொள்ளாத ஒரு காலம் இருந்தது... சாலையில் நிர்வாணமாய் எங்கிருந்து வந்தாள் என்றே தெரியாத ஒரு 5 வயது குழந்தையை ஏன் என்றே தெரியாமல் அள்ளி அனைத்துக் கொண்டாள் 7 வயது சரித்திரா.....அதற்கான வாழ்க்கைதான் அவள் பிறப்பு என்று அவளாகவே எத்தனையோ முறை தன்னை சமாதானப் படுத்தியிருக்கிறாள்... தோழிகள்.. சகோதிரிகள்.. எப்படி வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம்.. இவளுக்கு அடித்தால் அவளுக்கு வலிக்கும்..... அவளுக்கு சுமை என்றால் இவளுக்கு கனக்கும் ..

பசி வந்தால் பத்தும் பறந்து போகும்.....வேறு வழியே இல்லை.... கொஞ்ச நேரம் யாரோ ஒரு மூடனை சுமப்பதில் சரித்ராவுக்கு பெரிதாக ஒன்றும் சுமையில்லை....... அதன் பிறகு கிடைக்கும் ரொட்டித் துண்டில் நியந்தா பசி ஆறுவது பெரிதாகத் தோன்றியது......

"உனக்கு பதில் ஒரு நாள் நான் போகிறேன்" என்று கூறிய நியந்தாவை உடல் முழுக்க முத்தங்கள் தந்தே சமாதானப் படுத்தினாள்....

"அவர்கள் அப்படி....." என்று கண் ஜாடை காட்டுபவருக்கு அவர்கள் அப்படித்தான்.. "அவர்கள் அன்பின் ஒளிகள்"- என்றவர்களுக்கு அவர்கள் அப்படித்தான்.... அவள் படித்தாள்... அவள் படுத்தாள்.....

வாழ்க்கை ஓடிக் கொண்டே இருந்தது... ராட்சசனாக....

அந்த நிலை கொள்ளாத கட்டில் வாழ்வில்தான் காட்டில் தொலைந்த தேனியைப் போல ..... ஒரு நாள்..... அர்ஜுன் வந்தான்.... தேகப் பசிக்கு வந்தவன்... சரித்ராவின் மனம் முழுக்க பசி தோண்டி போனான்.....அடிக்கடி வந்தவன்... பின் சட்டென வருவது நின்று போனது... அப்படி இப்படி என்று அர்ஜுனின் நண்பன் மூலம் அவனின் அலைபேசி எண் கிடைத்து அவனை ஆசையோடு அழைத்தாள்.....

அவன் பேச.. இவள் பேச்சற்று நின்றாள்...

"என்ன பேச..? எப்படி பேச..? என்ன உரிமை இருக்கிறது..? யார்..... நான்..?" என்றெல்லாம் யோசித்து ராங் நம்பர் ஆகி.. பின் மெல்ல மெல்ல நெருங்கி அது காதலானது.. பெருங்காதலானது... பின் ஒரு நாள் பார்க்க வேண்டும் என்று அவன் அடம் பிடிக்க, கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டும் என்று அடுத்த மதில் கட்ட... யோசித்தாள்...............

இரவெல்லாம் யோசித்தாள்.. இந்த வாழ்வின் அர்த்தம் நியந்தாதானே!.. யோசித்தாள்.............தலை விரித்துக் கிடந்தது விடிய விடிய அழுதபடியே யோசித்தாள்..

நியந்தாவை அழைத்து "இனி நீ தான் சரித்ரா.... ஆனால் நியந்தாவாகவே போ.. நீ தான் அவனிடம் இத்தனை நாட்கள் அலைபேசியில் பேசி காதல் செய்தாய் என்று சொல்லி போ... கட்டிக் கொள்.. நீ வேறு ,நான் வேறு அல்ல.. போ...." என்று கத்தினாள்... அவளைப் பற்றி தெரிந்த நியந்தா அழுதாள் .... அறைக்குள் ஒரு குழந்தையாகி கிடந்தாள்.. உடல் முழுக்க முத்தமிட்டு அனுப்பி வைத்தாள்...

வெறித்த பார்வையில் திக்கித்த மனதில் அறைக்குள் நிர்வாணமாய் கிடந்தாள்.... அவளின் கண்ணீர் சிவப்பாய் உடைந்து கட்டில் முழுக்க கிடந்தது.... ஒரு பேயின் கையில் தன்னை கொடுத்து விட்ட துக்கத்தில் வாய் பொத்தி அழுதாள்...

"நான் பிறந்திருக்க வேண்டாமே..."-என்று முணங்கினாள் ....... அவளின் துக்கம் தீர்ந்தபாடில்லை....அவள்.....விகாரமாய் அறைக்குள் ஒரு மாற்றுருவம் வேண்டி பிராத்திப்பது போல கால் விரித்துக் கிடந்தாள்.....

அவள் தீர்க்கமாய் கண்கள் துடைத்துக் கொண்டாள்......... அர்ஜுனுக்காக காத்திருக்கத் தொடங்கிய நொடியில் ...மீண்டும் அலைபேசியைப் பார்த்தாள்....... சற்று முன் வந்த அலை பேசி மீண்டும் அவளுடன் பேசுவது போல தோன்றியது.......

"இத்தன நாள் நீ சொன்னத நான் கேட்டேன்ல சரித்ரா....... இன்னைக்கு ஒரு நாலாவது நான் சொல்றத நீ கேளு.. உன்ன என்னால பாக்க முடியல... அர்ஜுன் படுத்துக்கிட்ட மடின்னு என் மடில நீ படுத்துக்கறதும்... அர்ஜுன்... அணைச்ச உடம்புன்னு என்னை அணைச்சிக்கிறதும்....... அர்ஜுன்... பிடிச்ச விரல்கள்னு என் விரல்கள கோர்த்துக்கறதும்........ என்னை நீ அர்ஜுனாவே பாக்கறதும்...... என்னால தாங்க முடில சரித்ரா.. என் உயிர் நீ போட்ட பிச்சை.... அதான்.. இன்னைக்கு வேணும்னே சண்டை போட்டு அர்ஜுன தூண்டி விட்ருக்கேன்.... என் கணக்கு சரியா இருந்தா அர்ஜுன் அங்க தான் வரணும்....இன்னைக்கு அர்ஜுன் உன் கூட இருக்கட்டும்..... ஏதும் பேசாத....... அழாத....... மறுத்தா நான் செத்து போய்டுவேன் சரித்ரா........" என்று ஆழமாய் முத்தம் பதித்து கட் பண்ணினாள்.........
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நெற்றியில் ஆழமாய் ஒரு முத்தம் தந்து அவன் கிளம்பி சென்றான்............

பெரும் குரல் எடுத்து அழத் தொடங்கினாள் சரித்ரா.....அந்த அழுகை காதலுக்கானது.......அந்த அழுகை காதலுக்கானது....அந்த அழுகை காதலுக்கானது....அந்த அழுகை காதலுக்கானது....அந்த அழுகை காதலுக்கானது....அந்த அழுகை காதலுக்கானது....அந்த அழுகை காதலுக்கானது....அந்த அழுகை காதலுக்கானது....அந்த அழுகை காதலுக்கானது....அந்த அழுகை காதலுக்கானது....அந்த அழுகை காதலுக்கானது....அந்த அழுகை காதலுக்கானது....அந்த அழுகை காதலுக்கானது....அந்த அழுகை காதலுக்கானது....அந்த அழுகை காதலுக்கானது....அந்த அழுகை காதலுக்கானது....அந்த அழுகை காதலுக்கானது....அந்த அழுகை காதலுக்கானது....அந்த அழுகை காதலுக்கானது....அந்த அழுகை காதலுக்கானது....அந்த அழுகை காதலுக்கானது....அந்த அழுகை காதலுக்கானது....அந்த அழுகை காதலுக்கானது....அந்த அழுகை காதலுக்கானது....அந்த அழுகை காதலுக்கானது....அந்த அழுகை காதலுக்கானது....அந்த அழுகை காதலுக்கானது....அந்த அழுகை காதலுக்கானது....அந்த அழுகை .......அந்த.......அந்...அ.......


கவிஜி

எழுதியவர் : கவிஜி (5-Feb-15, 10:23 am)
பார்வை : 458

மேலே