விதண்டாவாதம் - வெண்பா

அதென்ன விதண்டாவாதம்? வாதம் இரண்டு - ஜம்பம், விதண்டம். ஒட்டிப் பேசுதல், வெட்டிப் பேசுதல். சொன்ன கருத்தை ஒத்தே வாதிப்பது ‘ஜம்பம்’, எதிராக வாதிப்பது ‘விதண்டம்’.

எதுவாயினும் வீண்வாதம் நேர விரையம். ‘மூர்க்கனும் முதலையும் கொண்டது விடார்’ என்பதற்கேற்பவே சிலர் விதண்டாவாதங்களுக்கு அலைவர். பொதுவாக அவர்களிடமிருந்து விலகியே இருந்தாலும், எப்பொழுதாவது பொறுக்கமாட்டாமல் வாதத்தில் இறங்கிப் பின் ‘இது உனக்குத் தேவையா’ என்று நம்மையே நொந்துகொள்ளும் நிலைக்குப் போய்த்தான் விடுகிறோம்... அண்மையில் அப்படி ஒரு நிலையில் தோன்றிய பாடல் இது (இந்த நீண்ட முன்னுரைக்கு மன்னிக்கவும்! பாடலைப் புரிந்துகொள்ள அது உருவான சூழலை அறிதலும் தேவை!)

மூன்றேகால் என்பார்கண் மூடியே தூங்குதல்போல்
மேன்மையுற வேநடிப்பார் மேய்ந்திடுவார் - ஆன்றோர்
எனச்சொல்லிக் கொள்வாரோ டேன்வீணே வாதம்?
உனக்கெங்கே போச்சுன் அறிவு?!

[நேரிசை வெண்பா]

”மூன்றே கால்” என்பார், கண் மூடியே தூங்குதல் போல்
மேன்மையுறவே நடிப்பார், மேய்ந்திடுவார் - ஆன்றோர்
எனச் சொல்லிக்கொள்வாரோடு ஏன் வீணே வாதம்?
உனக்கு எங்கே போச்சு உன் அறிவு?!

[நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று அடம்பிடிப்பார், கண்மூடித்தனமாய் இருபார் (நாம் சொல்வதைக் கேளாதவர் போல தாம் சொன்னதையே சொல்லி வாதிடுவார், தூங்குபவனை எழுப்பலாம், தூங்குதல் போல் நடிப்பவனை எழுப்ப இயலாதே!), மேலோட்டமாய் வாதிடுவார் (மேய்வார்), தன்னைத் தானே ‘ஆன்றோர்’ (எல்லாம் எனக்குத் தெரியும்) என்று சொல்லிக்கொள்வார், அவரோடு ஏன் வீண் வாதம்?

அப்படியும் மீறி வாதத்தில் இறங்கினால், பின் வருத்தப்பட்டுத்தான் முடிக்க வேண்டியிருக்கும்... அப்பொழுது, ‘உனக்கு எங்கே போச்சு உன் அறிவு?’ என்று நம்மை நாமே நொந்துகொள்வோம்! சரிதானே தோழர்களே? :-)

எழுதியவர் : விஜயநரசிம்மன் (6-Feb-15, 7:06 pm)
சேர்த்தது : விசயநரசிம்மன்
பார்வை : 303

மேலே