ஒரு கவிதையின் பிரசவம்-- சந்தோஷ்
இங்கே விதிகள்
உடைத்தெறியப்படுகிறது.
காலில் சலங்கை கட்டிக்கொண்டே
சத்தமில்லாமல் சில
களவாடும் நிகழ்வும்
அவ்வப்போது.நிகழும்.
கற்பனை கன்னியை
கட்டியணைத்து
கலவியில் ஈடுப்படும்
ஒற்றை ஜீவன்.
கருத்தரிப்பின் போது
உலக உருண்டையினை
கர்ப்பபையாக
ரகசிய உடன்பாட்டில்
கைக்குலுக்கிக்கொள்ளும். .
பத்தாவது மாதத்தில்
அல்லது
பத்தாவது நிமிடங்களில்
அல்லது
பத்தாவது நாட்களில்
சில சமயம்
பத்தாவது நாழிகையில்
அரிதாக
பத்தாவது திங்களிலும்
பிரசவ குத்தின்
தீவிரத்தினால்
பிரசவ சிகிச்சை
மூளை அறையில்
நடந்தேறும்......!
உருவாகிய சிசுவின்
அவசர உதையில் எழும்பும்
சிந்தனைத்தாய் கதறலொலி
மெளன காதுகளில்
கேட்டுக்கொண்டிருக்கும்.
ஒரு குடுவை
அமில திரவத்தினுள்
சிக்கித்தவிக்கும்
பூச்சியினைப்போல
நாடி நரம்புகள்
துடித்துடிக்கும்...
துடித்திட்ட நரம்புகளினூடே
உலக உருண்டையிலுள்ள சிசு,
மூவிரலுக்கு வந்துவிழும்
அந்த நொடியில்.........
பேனா மருத்துவச்சியால்
எழுத்து உடலோடு
மொழி உயிரோடு
ஒரு கவிப்பிள்ளை
காகித தொட்டிலில்
பிரசவம் செய்திருக்கும்
உண்மையில்,
கவிதை மழலையுடன்,
விமர்சனங்களில்
மரணித்த
ஒரு கவிஞனும்
பிரசவமாகியிருப்பானாம்........!
-இரா.சந்தோஷ் குமார்.