நம் தேசம் போற்றுவோம் மண் பயனுற வேண்டும் கவிதைப் போட்டி 2015

பாசம் காட்டும் விலங்கினைப்பார் - உணவைப்
பகிர்ந்தே உண்ணும் பறவையைப்பார்!
வேசம் போடும் மனிதர்களே ! - நமக்குள்
வேண்டாம் சாதி மதபேதம்!

பிறப்பிடம் வேறே என்றாலும் - நதிகள்
இணைவது எல்லாம் ஓரிடந்தான்!
பிரிவுகள் ஆயிரம் இருந்தாலும் - நாம்
இந்தியத் தாயின் பிள்ளைகள்தாம்!

மதங்கள் என்னும் போர்வையிலே - மனிதன்
மதந்தான் பிடித்தே அலைகின்றான் !
உதவும் எண்ணம் இழந்திட்டான் - நல்
உயர்வைக் காண மறந்திட்டான்!

மொழிகள் ஆயிரம் இருந்தாலும் - நமக்குள்
வேற்றுமை என்பது வேண்டாமே!
மதங்கள் பலவாய் இருந்தாலும் - நம்
மனங்கள் ஒன்றாய் இணையட்டும்!

ஒற்றுமை இன்றி ஒருநாளும் - பெரும்
உயர்வைக் காண்பது அரிதாமே !
பற்றினை வைத்து நம்நாட்டை - நாம்
பாரில் உயர்த்த உழைப்போமே!

எழுதியவர் : thnmuganambi (7-Feb-15, 2:20 pm)
பார்வை : 77

மேலே