ஓர் ஆணின் கர்ப்பம்
![](https://eluthu.com/images/loading.gif)
ஓர் அகண்ட அகழியில்
முதலை படுத்திருந்தது
ஆண்களை மட்டும் விழுங்குவதற்காக!..
எதிரே
கூட்டம் கூட்டமாய் ஆண்கள்
முதுகில் பெரிய மூட்டையுடன்!.
தாவு தீர்ந்த ஒருவன்
தவறி விழுந்த போது
தெறித்து சிதறின
வண்ணம் பூசப்படாத
எண்ணங்கள்..
அடுத்த மாத வாடகை
ஆயிரம் ரூபாய் அதிகம்
வீட்டு உரிமையாளரின் உரிமை
வீட்டை விட பெரிதாய் இருந்தது!...
ஊதியத்தில்
ஐந்நூறு பிடித்தம் செய்யப்படும்
செத்தபின்பு கண்டிப்பாய் கொடுத்துவிடுவோம்
முன்னறிவிக்கப்பட்ட மரணம்!...
முன்பு
காதல் மட்டும் போதுமெனற்றவள்
இப்போது
கடைசி சொல்லை மட்டும்
மாற்றி உச்சரித்திருந்தாள்….
‘யான வாங்கிட்டு வாப்பா’
என்ற மகளுக்கு
நாய்க் குட்டியாவது
வாங்கிப் போகவேண்டும்…
அண்ணன் இப்போது
வேற்றுகிரக வாசியாய் இருந்தான்
அவனுக்கான குடும்பத்தில்
நான் இல்லை…
அப்பாவின்
நிறைவேறாத ஆசைகள்
சாம்பலோடே கலந்து
கடலில் கலக்க தயாராயிருந்தது…
எதையுமே கேட்டிராத
அம்மாவின் முகம்
அவன் பாரத்தை
இன்னும் அதிகமாக்கி இருக்கக்கூடும்!...
அனுமதி கேளாமல்
மடிக் கணினிக்குள் அமர்ந்திருந்த
மேலாளரின் மின்னஞ்சல்
தமிழ் கெட்டவார்த்தைகளை
ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருந்தது!..
இவற்றினூடே
சிதறிக் கிடந்தது
செரிக்கத் துவங்கியிருந்த துரித உணவும்
செரிக்காத பசியும்…
நாளை ஐந்து மணிக்கு
கூவி எழுப்பும் அலைபேசி
நினைவுக்கு வந்ததும்
எல்லாவற்றயும்
எடுத்துப் போட்டு கிளம்பி விட்டான்
முதலையை நோக்கிய பாதையில்…