காயும் கல்லறை மாலைகள்
மதம் பிடிக்கவில்லையாம்
மதம் பிடித்தது கோவில் யானைக்கு !
கோடியாய் இருந்தபோதிலும் மக்கள்
தெருக் கோடியில் நிற்கிறது மனிதம் மட்டும் !
மத சார்பற்றவர்கள்தான் நாங்கள்
சச்சின் சதம் அடிக்கும்போது மட்டும் !
அடிக்கடி சொல்லுங்கள் இந்தியாவின்
இறையாண்மை பற்றி !
அறம் மறந்து மரங்களாய்
நிற்கும் எங்களுக்கு
மதம் தெரிவதில்லை
பாய் கடை பிரியாணியிலும்
அம்மன் கோவில் பிரசாதத்திலும்
தேவாலய சிற்றுண்டியிலும் !
எங்கு தெரிகிறது மதம்
தேவை மணப்பெண் / மணமகன் !
அடிக்கொரு கோவில்கள்
மதம் வளர்க்க !
ஒன்றுகூடவா இல்லை
மனிதம் வளர்க்க !
மாதம் ஒரு பண்டிகை
வளர்க்கிறது மனிதம் மறந்து மதத்தை !
மன்னர்கள் ஆண்ட காலம் மறைந்து
மதங்கள் ஆள்கின்றன இன்று நம்மை !
ஜாதியும் மதமும் ஜாதி சேர்த்து இசைக்கிறது
வன்முறை என்னும் வண்ண கீதம் !
காதல் மாலை சூடவேண்டிய பலருக்கு சூட்டபடுகிறது
காயும் கல்லறை மாலைகள் !
காகிதங்களை எரித்தோம் எங்கள்
காதலை மறைக்க !
இதோ காகிதங்கள் எங்களை எரிக்கின்றன
மதங்களுக்குள் எங்களை மறைக்க !
கல்லூரிகளும் பள்ளிகளும் மட்டும்தான் இன்று
மனிதத்தை சுமக்கின்றன
நட்பென்ற ஒற்றை சங்கிலி அங்கே
பிணைந்திருப்பதால் !
நாட்பட்ட காயமாய் நம்மை
அழுந்திக்கொண்டிருக்கும் இந்த
மதம் மனிதத்தை மாய்க்கிறது என்பதை
மறந்து நாம் இன்னும்
கனவில்தான் வாழ்கிறோம்
மதச்சார்பற்ற இந்தியா என்று
கூறும்போது !
ஓட்டுக்காக மட்டுமே
இங்கே மதச்சார்பு இருக்கிறது
மக்களின் மனதில் மனிதத்தை கொன்று தின்று
மதம் மட்டுமே வாழ்கிறது !
இதுதான் இந்தியாவின் மதச்சார்பின்மையோ !