வீரனுக்கு மரணமில்லை - சே குவேரா

அர்ஜென்டீனனாய் பிறந்தாய்
அகிலனாய்த்தான் வாழ்ந்தாய்,

இலத்தீன்-அமெரிக்க விடுதலை என்னும்
இலட்சியம் கொண்டே செயல்பட்டாய்,

ஆன்மாவை மட்டுமல்ல நீ
ஆஸ்துமாவையும் வென்றாய்,

புரட்சியென்னும் ஆயுதம் கொண்டு
புரட்டிப் போட்டாய் ஏகாதிபத்தியத்தை,

காஸ்ட்ரோ காட்டிய பாதை சென்று
கம்யூனிசம் நிறுவினாய் க்யூபாவில்,

அண்டைவீடு அமெரிக்காவின்
அடிவயிற்றில் புளிகரைத்தாய்,

சீ.ஐ.ஏ-வை சீண்டி விளையாடினாய்ச்
சீறும் அப்பாம்பின் நாவறுத்தாய்,

சோவியத்துடன் கை கோர்த்து
சோசியலிசம் தனை விதைத்தாய்,

கல்வி, ஆலை, புரட்சி தந்து
கட்டமைத்தாய் க்யூபாவை,

நின்றதா நின் கனவு அத்தோடு?
நீண்டதேயது காங்கோ, பொலிவியா என்று!

வீணரால் கொல்லப்பட்டு இறக்கவில்லை நீயே
வீரனுக்கு என்றும் மரணமில்லையே, சே!


பி.கு.: கிழக்குப் பதிபகத்தில் நான் வாங்கிய முதல் நூல் திரு.மருதன் அவர்களது ‘சே குவேரா: வேண்டும் விடுதலை’ என்பதே. ஒரே இரயில் பயணத்தில் நான் படித்து முடித்த அந்த நூல் எனக்குப் பலதைக் கற்றுக்கொடுத்தது... சே-வின் வாழ்வினால் கவரப்பட்ட என் உள்ளத்தில் தானாய் ஊற்றெடுத்த இந்தக் கவிதை அவரது வாழ்வைச் சில வரிகளில் பதிவு செய்வது அது என் உள்ளத்துள் பதிந்த பாங்கின் எதிரொலி... தன்னாடு தன்னினம் என்று எல்லைகொள்ளாமல் ‘அகிலனாய்’ (உலகப்பொது போராளியாய்) வாழ்ந்த அந்த வீரனுக்கு என்றும் மரணமும் இல்லை, அவனுக்கு யாரும் நிகரும் இல்லை...

ஆகத்து 2010-இல் எழுதப்பட்டது
நன்றி,
விஜய்

எழுதியவர் : விஜயநரசிம்மன் (12-Feb-15, 11:36 am)
பார்வை : 1068

மேலே