எனக்குப் பிடித்தவை - பாட்டில்

மு.கு.: என் காதலி எனக்குப் பிடித்தவற்றை (அவளைத் தவிர) சொல்லக் கேட்ட பொழுது அதைப் பாடலாய் வடித்தேன்... அதுவே இது! (முதலில் ‘தரவு’ போல ஒரு பாதி ஆசிரிய விருத்தம், மீதம் இரண்டும் முழுதான அறுசீர் விருத்தங்கள் ‘நிரல்-நிரை’ பொருள்கோளில் பிடித்த பொருள்களும், அவற்றின் வகையும் ஒவ்வொரு பாட்டில் வரிசையாய் அமைந்தது.
--------------------------------------------------

அங்கதம் பேசும் கண்ணால் அலைத்திடும் காதல் மாதே
இங்கெனக்(கு) இசைந்த வற்றை இயம்புக என்றாய்க், கேளாய்...

கங்கைசூ டிடுமப் பெருமான், கற்றிடும் இயல்பின் இயலும்,
சங்கரா பரணம், காரும், தமிழொடு, வைகறைப் பொழுதும்,
பொங்கலும், தில்லை, மல்லிப், புரசையும், செம்மை, குழலில்
பொங்கிடும் இசையும், குறளும், புரையிலா வெண்பா அதுவும்!

இறையொடு, கல்வி, இராகம், இயங்குநல் காலம், மொழியும்,
நிறைபொழு(து,) உணவும், தலமும், நெஞ்சளும் மலரும், இடமும்,
நிறமொடு, இசையும், நூலும், நினைவினில் நிற்கும் கவியும்-
உறும்”நிரல் நிரை”யில் வைத்தே உரைத்தன்இப் பதினான் கினையும்!
-----------------------------------

நிரல்-நிரை:
பிடித்த இறைவன் - கங்கைசூடிடும் அப்பெருமான் (சிவபெருமான்)
“ கல்வி (துறை) - இயல்பின் இயல் (இயற்பியல்)
“ இராகம் (பண்) - சங்கராபரணம் (பழம்பஞ்சுரம்)
“ காலம் (பெரும்பொழுது) - கார் (மழைக்காலம்)
“ மொழி - தமிழ்
“ பொழுது (சிறுபொழுது) - வைகறை (விடியற்காலை)
“ உணவு - வெண்பொங்கல்
“ தலம் - தில்லை (சிதம்பரம்)
“ மலர் - மல்லி (ஜாதி)
“ இடம் - புரசைவாக்கம் (சென்னை, நான் பிறந்து வளர்ந்த ஊர்!)
“ நிறம் - செம்மை (சிவப்பு)
” இசை - குழலின் இசை
“ நூல் - திருக்குறள்
“ கவி (வடிவம்) - (குற்றமில்லாத) வெண்பா
...இவை பதினாலுமே!

:-)

எழுதியவர் : விஜயநரசிம்மன் (12-Feb-15, 11:17 pm)
பார்வை : 254

மேலே