போற்றுகிறேன் என்னவனை இந்நாளில்

காற்றுக்கு வாசமீந்தும் கர்ணப் பிரபுவே
செற்றத்தை வேரறுக்கும் சீற்றமே -மெல்லிய
முல்லைக்கு தேரீந்த வள்ளலே வாடுமிந்த
வல்லைக்கு வாழ்வு கொடு!

வாழ்வு கொடுயென கையேந்தி நின்றென்னை
தாழ்வாய்நீ எண்ணாமல் தாயாய் -ஒருநல்ல
தோழனாய் ,சிந்தித் துரைத்தாயே வஞ்சகரின்
கீழான எண்ணம் தனை !

அன்பு மொழியொழுகும் அட்சயப் பாத்திரமே
பண்பு வழிநடக்கும் போதிமரப் புத்தகமே
கண்டதும் காதல் கசியாமல் -வாழ்வதை
பெண்ணுக்குக் கற்றுவித் தாய் .

தாய்போ லொருவனை தாரணியில் கண்டுநான்
சேய்போல் மகிழ்ந்தே புதிதாய் பிறந்தேனே
தாயாக மாறியே என்னவனை ஈன்றெடுத்த
சேயாக காத்திடு வேன் !

எழுதியவர் : பிரியாராம் (14-Feb-15, 3:16 pm)
பார்வை : 252

மேலே