சப்பே கொகாலும்-கொங்குக் கரடிகளும் - பொள்ளாச்சி அபி

இயற்கையோடு இயைந்த வாழ்வு,அளவற்ற மனிதாபிமானம்,அதற்கு குறைவிலாத விலங்கபிமானம்,புரிதலோடான காதல்,சக உயிர்களும் தனது வடிவமே என்ற மேம்பட்ட நாகரீகம்..என பல சிறப்புகளையும் கொண்டு வாழ்ந்து வருகின்ற, தற்போது எண்ணிக்கையில் அருகி வரும் இருளர் எனும் மலைவாழ் பழங்குடி மக்களின் வாழ்வியல் குறித்து நாம் இதுவரை அறிந்திடாத உண்மைகளை, நயமான இலக்கியமாக வெளிப்படுத்தியிருக்கும் அதே நேரத்தில்,இடத்தைக் கொடுத்து,பின் மடத்தையும் பறிகொடுத்த இருளர்களின் வாழ்வில் வஞ்சனைகளையும்,கொடூரங்களையும் நிகழ்த்திய ‘கொங்குக் கரடிகளின்’ வரலாறும் பின்னிப் பிணைந்ததாக,எழுத்தாளர் ஒடியன் லட்சுமணனின் “சப்பே கொகாலு” நூல் வெளிப்பட்டிருக்கிறது.இது இவருடைய இரண்டாவது நூல்.

இருளர் இன மக்களின் நடுவே புழங்குகின்ற,அவர்களின் சொந்த மொழியிலான பாடல்களை தொகுத்துக் கொடுத்துள்ளதுடன்,அவற்றின் பின்னுள்ள வரலாறுகள் மற்றும் புனைவுகளும்,மிக அழகான சிறுகதைகளாகக் காட்சிப் படுத்தப் பட்டுள்ளது.மிகச் சரளமான மொழிநடையில்,தோழர் லட்சுமணனின் பதினைந்து ஆண்டுகால உழைப்பும், களஆய்வும் பக்கம்தோறும் விரிகிறது.

இருளர்களின் பதி ஒவ்வொன்றுக்கும் மூப்பன், மண்ணுக்காரன், குறுதலை,வண்ணடாரி,குருவன் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலம்,பதியின் நிர்வாகம் நடைபெற்றதையும்,பதியில் அவர்களின் பணி குறித்தும் விவரிக்கப்பட்டிருப்பதின் மூலம்,அவர்களின் சமூக,கூட்டு ஒழுங்கை அறிந்து கொள்ளலாம்.

தங்கள் நிலங்களில் விதைக்கப்பட்ட சிறுதானியங்கள், விளைந்து வரும்போது,மான் உட்பட சிறுவிலங்குகளும், பறவைகளும் உண்டதுபோக, எங்களுக்கும் கொஞ்சம் கொடுக்க மனமிறங்கு கடவுளே..! என்று அவர்கள் வேண்டிக் கொள்வதும், காட்டின் ராஜா என்று அவர்களால் அழைக்கப்படுகின்ற, யாiனைகளை அந்நியர்கள் வேட்டையாடுவதைக் கண்டு அவர்கள் பதைபதைப்பதும், வன உயிரினங்களுக்கு தங்களால் நன்மைதான் விளையவேண்டுமே அல்லாது தீமை விளையக்கூடாது என்பதில் அவர்கள் முனைப்பாக இருக்கிறார்கள் என்பதை அறியவரும்போது,காடும்,விலங்குகளும் சூழலின் மிக முக்கிய உயிர் சமன்பாட்டுக்கான கருவி என்பதை அவர்கள் நமக்கும் முன்பே உணர்ந்திருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது.

உணவுக்காக வேட்டையாடும்போது பிடிபடும் கடமான்,அப்போதுதான் குட்டியொன்றை பிரசவித்திருப்பதை அறிந்த கோயனும்,சடையனும் காயம்பட்ட மான்களுக்கு மருந்திட்டு, உணவளித்து,காட்டுக்குள் விரட்டிவிடுவதும், வெறும்கையுடன் அவர்கள் குடிசைக்கு திரும்புவதையறிந்த மற்ற வேட்டைக்காரர்கள்,அவர்களுக்கு தெரியாமலே,முன்சென்று தாங்கள் வேட்டையாடிய இறைச்சியைத் தந்துவிட்டு செல்வது நெகிழ்வை ஏற்படுத்தும் காட்சி.

பருவ வயதை எட்டிய இருளர் இன ஆண்களுக்கு தங்கள் துணையை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் எந்த அளவிற்கு உள்ளதோ அதே அளவிலான சுதந்திரம் பெண்களுக்கும் இருக்கிறது.மேம்பட்ட சமூகம் என்று பம்மாத்து பண்ணிக்கொண்டிருக்கும் நம் சமவெளி மனிதர்களைப் போன்ற எவ்வித நிர்ப்பந்தத்திற்கும் உள்ளாகாமல், காதலை ஏற்றுக் கொள்ளவும்,மறுக்கவும்,திருமணத்தில் இணைந்திருக்கவும்,விலகவும் என சுயமாய் முடிவெடுக்கக் கூடிய அதிகாரம் இந்தப் பெண்களுக்கு இருக்கின்றது. காரணம்,வேட்டை என்றாலும்,விவசாயம் என்றாலும்,இசைக்கருவிகள் இசைப்பதானாலும் என ஆண்களின் தகுதியாக உணரப்பட்ட அனைத்து அம்சங்களும் இவ்வினத்துப் பெண்களிடமும் இருந்துள்ளது.

அதேபோல் ஊரின் தலைவனான மூப்பனின் மனைவி மூப்பத்தி, வெறுமனே அதிகாரத்தை சுகிப்பவளாக இல்லாமல்,தங்கள் பதிக்கு அந்நியர்களால் வரும் தீமைகளைத் தடுத்துநிறுத்த போராடுபவளாக, அதற்காக தன்னுயிரையே ஈவதானாலும் தயங்காமல் முன்னிற்பவளாக இருக்கிறாள் என்பதை உணர்த்தும் பாடல்களில்,தாய்வழிச் சமூகத்தை உயர்த்திப் பிடிக்கும் பண்பும் இருக்கிறது.

இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்க,மிகப்பெரும் படைபலத்தைக் கொண்டு,நாட்டின் எல்லையை,பரப்பளவை பரவலாக்கிக் கொண்டே சென்ற அரசர்கள்,மலைகளையும், காடுகளையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.இந்தக் கட்டுப்பாட்டில்,திரட்டப்பட்ட படைபலமற்ற மலைவாழ் மக்களின் சுதந்திரமும் கட்டுண்டு போனது.இதற்கு மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளும் தப்பவில்லை.

இவ்வாறு வலுத்தவனின் வெற்றி மட்டுமே வரலாறுகளாகவும்,இலக்கியமாகவும் பதிவு செய்யப்பட்டதில்,பாதிக்கப்பட்டவர்களின் தோல்வி கண்டுகொள்ளப்படவே இல்லை.இளஞ்சேரல் இரும்பொறைகள்,பெரும்சோழ மன்னர்கள்,சுல்தான்கள், ஆங்கிலேயர்கள் என வந்தேறிகளினால் தொடர்ந்த நூற்றாண்டுகளின் சோகம்,சுதந்திரம் பெற்ற பின்னும் சொந்த நாட்டவராலும் சுரண்டப்படுவதுதான் ஆகப் பெரும் சோகம்.

இவர்களின் வரலாற்று வெற்றிகள் எப்படியெல்லாம் கல்வெட்டுகளாக, இலக்கியங்களாகப் பதிவு செய்யப்பட்டதோ,அதேபோல் இருளர் இன மக்களும் தங்கள் இயல்பான வாழ்க்கையையும்,வந்தேறிகளினால் ஏற்பட்ட பாதிப்பையும், தோல்வியையும்,கலாச்சாரப் பண்பாட்டு சீரழிவுகளையும்,அதனால் விளைந்த சோகங்களையும் வாய்மொழி இலக்கியங்களாகப் பதிவு செய்ததோடு,அதனை தங்கள் பரம்பரைகளுக்கு கடத்தவும் தவறவில்லை.

“வெள்ளாக்காரந் தோட்டத்திலே..”

“வாராண்டா வாராண்டா வெள்ளாக்காரே.”

“கோணே செருப்பளக
கொங்குநாட்டு மீசக்கார
யாரை மயக்குறேன்னு
மீச முறுக்கறயெ..,”

“கோவே புத்தூர் கரடிகளா..”,

“சீரு செத்தாலும் சினிமாதே..”

“அப்பதேம்பா காலுவண்டி
இப்பதேம்பா ஜீப்புலாரி”

“சாராயக் கடே வெக்கேமோ சின்னா தோரெ
கள்ளுக் கடே வெக்கேமோ சின்னா தோரெ..”

கொள்ளு வெளஞ்ச காடுலயோ தில்லேலேலோ
ரயிலுவண்டி பறக்குதுங்கோ தில்லேலேலோ..”

நூல் முழுவதும் விரவிக் கிடக்கும் இதுபோன்ற வரிகள் நிறைந்த இருளர் மொழிப்பாடல்கள், அவர்களின் படிப்படியான வாழ்க்கை சிதைந்த வரலாறுகளை,மிகச் சமீபம் வரையும் சொல்கிறது.

ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு முன்பாகவே,மேற்குத்தொடர்ச்சி மலையின் கிழக்குப் பகுதிச் சமவெளிகளில் இருந்த கொங்கர்களில் பலர், ஜமீன்தாரர்கள்,திவான்கள் என அந்தஸ்தைப் பெற்றுக் கொண்டவர்கள்,ஆட்டுவரி,மாட்டு வரி,திருமணம் செய்ததற்கு வரி,திருமணம் செய்யாததற்கு வரி, வேட்டை வரி,குடிசை கட்டியதற்கு வரி,குடும்ப வரி.என,அதுவரை காடு என்பது தங்கள் சொந்த நாடு என்றிருந்த இருளர் இன மக்களை தங்கள் சுரண்டல்களின் மூலமும்,கொடூரமான வேட்டை முறைகளின் மூலமும் அகதிகளாக்கி மெதுவாக மெதுவாக நாடுகடத்தும் பணியில் கொங்கர்களின் பங்குதான் அதிகமிருந்தது.

இதன் மூலம், மேலும் மேலும் பின்வாங்கிக் கொண்டே போன இருளர்களிடமிருந்து, அவர்களின் நிலமும் வளமும் கையகப்படுத்தப்பட்டுள்ளது.கூடவே,அவர்களின் பண்பாட்டுக் கூறுகள் சிதைக்கப்படுகின்ற முயற்சியும் தொடர்ந்து நடைபெற்றே வந்திருக்கிறது. சிறுதெய்வங்கள் அழிக்கப்பட்டு,பெருந்தெய்வ வழிபாடுகளை நிலைநிறுத்தவும், அதற்காகப் புனையப்பட்ட வரலாற்றுத் திணிப்புகளும் இடையறாது நிறைவேறிக் கொண்டே இருந்திருக்கிறது. காரமடை ரங்கநாதனின் நெற்றியில் உள்ள சிவப்பிற்கு காரணம் என்ன..? என்பதை விளக்கும் பாடலும் கதையும் இதற்கொரு உதாரணம்.

இப்போதைய அவினாசி,சூலூர்,பல்லடம்,கோவை ஆகிய பகுதிகள் இருளர்கள் வாழ்ந்துவந்த வனப்பகுதிகளே என்பதை சோழர்காலக் கல்வெட்டுக்கள் மட்டுமின்றி பல ஆவணங்களின் மூலம் ஆதாரப்படுத்தியுள்ளார் ஆசிரியர் லட்சுமணன்.

இதேபோல்,கோவையின் தெற்கேயுள்ள பொழில்வாய்ச்சி என ஒரு காலத்தில் வழங்கப்பட்ட, தற்போதைய பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வன எல்லை ஆங்கிலேயர் காலத்தில் பொள்ளாச்சி நகரிலிருந்து பத்து கி.மீ தூரத்தில் உள்ள அம்பராம் பாளையம் என்ற இடத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.ஆனால்,இருளர்கள் உட்பட சில பழங்குடிகள் வசிக்கின்ற தற்போதைய வன எல்லை,சுமார் முப்பத்தைந்து கி.மீ.க்கள் தள்ளியுள்ள சேத்துமடையையும் கடந்துதான் துவங்குகிறது என்பது மிகச்சமீபத்திய உதாரணம்.இதற்கு முன்பாகவே “ஆனைமலை”என்ற பகுதி இருப்பதும்,அதனையடுத்து “வேட்டைக்காரன் புதூர்” என்ற பகுதி இருப்பதும் மற்றொரு சான்று.

வரலாறு நெடுக கிழக்கிலிருந்து மேற்கேயும்,மலை மற்றும் வனங்களின் மறுபகுதியாகவுள்ள மேற்கிலிருந்து-[கேரளம்,கர்நாடகம்-] கிழக்கிலும் விரட்டப்பட்டு,விரட்டப்பட்டு தற்போது தீவு போன்ற சிறுவனப்பகுதிக்குள் சிக்கிக் கொண்ட மலைவாழ் மக்களுக்கு மேலும் ஒரு சோதனையாக மதவாதிகளின் நிறுவனங்கள் இருக்கிறது.கல்லூரி,ஆசிரமம் என்று பார்வைக்கு நல்ல விஷயமாகப் பட்டாலும்,அதற்குப் பின்னால் இருப்பது வன ஆக்கிரமிப்பும்,கடுமையான லாப வேட்டையும்தான் என்பது வெள்ளிடைமலை.இருளர்களின் பாடல்களில் இந்த அம்சங்களும் இடம்பெறத் தவறவில்லை.இனி,பெரும் முதலாளிகளின் பிரதிநிதியாக இருக்கும் அரசுகளால், சுரங்கங்கள் அமைப்பதற்கும்,அபரிமிதமான இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்கவும் மெதுவாக வாசல்கள் திறக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

ஊமைப்பெண்ணின் குழல் எனும் பொருள்படும்,“சப்பே கொகாலு” நூலைப் பொறுத்தவரை,வாசித்துமுடிக்கும் வரை வனங்களுக்குள்ளேயே நம்மை வாழவைக்கின்ற மொழிலாவகம் நூலின் ஆசிரியர் லட்சுமணனுக்கு இருப்பது மிகப்பெரும் வரம்.இருளர்களின் பாடல்கள்,பாடலுக்குப் பின்னே இருக்கின்ற வரலாறுகள், வரலாற்றை விளக்குகின்ற பாடல்கள்,புனைவுகள் என இதுவரை நாம் அறிந்து கொண்டிராத, மறைக்கப்பட்ட வரலாறொன்றை,தனது கடும் உழைப்பின் மூலமாக,இருளர்களின் மொழியிலேயே வெளிக்கொண்;டு வந்திருக்கிறார்.அந்த வகையில் தமிழ் இலக்கிய வரலாற்றிற்கு புதிய வகையிலான இலக்கியம் ஒன்றை அளித்துள்ளதோடு,மலைவாழ் மக்கள் குறித்த,நாடு தழுவிய,உலகு தழுவிய ஆராய்ச்சிக்கும் புதிய ஆவணமொன்றை அளித்துள்ளார் என்றாலும் மிகப் பொருத்தமே..!

-பொள்ளாச்சி அபி – 13.02.2015
-----------------------
நூல்-சப்பே கொகாலு
ஆசிரியர் -திரு லட்சுமணன்
விலை-ரூ.225/ பக்கம்-280
கிடைக்குமிடம் -நியு செஞ்சுரி புக் ஹவுஸ்.

எழுதியவர் : பொள்ளாச்சி அபி, (14-Feb-15, 4:08 pm)
பார்வை : 245

மேலே