அலையாடும் குளங்கள் - சிறுகதை = பொள்ளாச்சி அபி
வெளிச்சம் தனது கைகளால்,மெதுவாய் இருட்டைத் துடைக்கத் துவங்கியிருந்த அதிகாலை..,எனது அலைபேசியில் யாரோ அழைத்தார்கள்.
கண்களுக்குள் கப்பியிருந்த இருட்டை விலக்கி,அலைபேசியை எடுத்துப் பார்த்தபோது,தங்கைதான் அழைத்திருந்தாள்.அவளின் அழைப்பு, ‘சட்’டென எனக்குள் ஒரு பதட்டத்தை ஏற்படுத்திவிட்டிருந்தது.இந்நேரத்தில் அழைக்க வேண்டிய அளவிற்கு முக்கியமான சங்கதி என்னவாக இருக்கும்..? கேள்வியை ஹலோ வாக்கினேன்.
“அண்ணா..,நம்ம வத்சலா அக்காவோட வீட்டுக்காரர்,திடீர்னு நேத்து ராத்திரி இறந்துட்டார். இன்னைக்கு காலைலே பதினொரு மணிக்குள்ள அடக்கம் பண்றதுக்கு ஏற்பாடு பண்ணிருக்கு.நீ வர்றதுனா..அதுக்குள்ள வந்துடு.!”
“அடக்கஷ்டமே..!.. சரிசரி..நான் இப்பவே கிளம்பறேன்.எப்படியும் ஒன்பது மணிக்குள்ள அங்க வந்துர்றேன்.எனக்கு இப்ப அவங்க இருக்கற வீடு தெரியாது.அங்க வந்துட்டு போன் பண்றேன்.யாராவது பசங்க இருந்தா என்னை பிக்கப் பண்ணிக்கச் சொல்லு..”
“சரி வா..” தங்கை தொடர்பை துண்டித்துக் கொள்ள,நான் மனைவியை எழுப்பி விபரத்தை சொல்லிவிட்டு,கிளம்புவதற்கு ஆயத்தமானேன்.
மணி ஏழு..கோவை செல்லும் பேருந்தில் ஏறி,வசதியாய் கிடைத்த இருக்கையில் அமர்ந்து கொண்டேன்.
‘வத்சலாவின் குடும்பம் எங்களுக்கு பல ஆண்டுகளாகப் பழக்கம். அடுத்தடுத்த வாடகை வீடுகளில் எங்கள் இரு குடும்பமும் வசித்தபோது,நாங்கள் அனைவரும் சிறியவர்கள்.பின்னர் நாங்கள் வளர வளர,படிப்பு மற்றும் வசதிகளைத் தேடி வேறு வீடுகளைப் பார்த்துக் குடியேறியதில்,இரண்டு குடும்பங்களும் வௌ;வேறு ஊர்களுக்கு மாறிவிட்டாலும்,பழக்கத்தை மறக்கவில்லை.குடும்ப நிகழ்ச்சிகளில் பரஸ்பரம் கலந்து கொள்ளவும் தவறவில்லை. வத்சலாவின் திருமணம்,பின்னர் அண்ணன் ராமன்குட்டியின் திருமணம்,அவர்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கான பெயர் சூட்டுவிழா.. என்று தொடர்ந்து போய்க் கொண்டிருந்தது.
என்னைவிட இரண்டுவயது குறைவான வத்சலாவின் தங்கை கீதாவின் திருமணத்திற்கு சிலமாதங்கள் முன்பாக,எனது படிப்பு, அதற்கேற்ற வேலை..என,நான் சென்னைக்குப் பறந்துவிட்டேன். அதனால்,வத்சலாவின் வீட்டில் நடைபெற்ற பல விசேஷங்களையும் தவறவிட்டேன்.முக்கியமாக கீதாவின் திருமணம் நடைபெற்றபோது, எனது குடும்பத்தாருக்கு தனியாகவும்,வெளியூரில் இருப்பதால் எனக்கு தனியாகவும் அழைப்பிதழ் வரத்தான் செய்தது.வாய்ப்பிருந்தும் அந்தத் திருமணத்திற்கு செல்ல ஏனோ எனக்கு மனம் வரவில்லை.
மூன்று ஆண்டுகள் கழித்து,எனது சம்பளம், வசதிக்கேற்றபடி பார்க்கப்பட்ட பெண்ணோடு,எனது திருமணம், பெண்வீட்டாரின் விருப்பப்படி சென்னையிலேயே நடைபெற்றதால், வத்சலாவும்,அவரது கணவர் ராஜனும் எனது உறவினர்களுக்கென ஏற்பாடு செய்யப்பட்ட பேருந்தில் வந்திருந்தனர்.ராமன் குட்டிக்கு உடல்நிலை சரியில்லை.கீதாவின் கணவருக்கு லீவு கிடைக்கவில்லை. அதனால் அவர்களால் வரமுடியவில்லை என்றும் சொன்னதாக நினைவு.
அதற்குப்பின் கடந்துபோன இந்தப் பத்து ஆண்டுகளில்,எனது நிறுவனத்தின் கிளை அலுவலகம் இருந்த பொள்ளாச்சிக்கு இடமாறுதல் பெற்றுக் கொண்டு,அங்கேயே சொந்த வீடு குழந்தைகள் படிப்பு என செட்டிலாகிவிட்டேன். ஆனால்,இந்த இடைப்பட்ட நாட்களில் ஒரு முறைகூட, வத்சலாவின் வீட்டில் நடந்த எந்தவொரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை.சரியான சந்தர்ப்பம் கிட்டவில்லை அல்லது செல்வதற்கான மனநிலை இல்லை..இதில் ஏதோவொரு காரணம் எனக்கு இருந்தது.
ஆனால்,இது அவர்கள் குடும்பத்தில் ஏற்பட்ட முதல்மரணம்.இதற்கும் போகாமல் தவிர்ப்பது எனில்,அது எனக்கே நியாயமாகப் படவில்லை. அதனால்தான் கிளம்பிவிட்டேன்.
ராஜன் கண்ணாடிப் பேழைக்குள் உறங்குவதைப் போலக் கிடந்தார்.எவ்வித முன்னறிவிப்புமின்றி வந்த ஹார்ட் அட்டாக் அவரது உயிரைப் பறித்துச் சென்றுவிட்டதாக தெரிவித்த வத்சலா, கூடவே முட்டிக்கொண்டு வந்த அழுகையினூடே,“அவரு நல்லா இருக்கும்போதெல்லாம் வந்து பார்க்காமே..சாகறதுக்குன்னு காத்திருந்தியாடா..”,என்று கேட்டபோது,இதற்கு என்ன சொல்வதென்றே எனக்குத் தெரியவில்லை.
சில நிமிடங்கள் மௌனமாக நின்று கொண்டிருந்தேன்.அடுத்தடுது சிலர் இறந்தவரின் முகத்தை இறுதியாகப் பார்ப்பதற்கு உள்ளே நுழைந்தபோது,ஏற்பட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, மெதுவாய் அந்த அறையைவிட்டு வெளியே வந்து,இடவசதிக்காக கான்கிரீட் சாலையின் பரப்பையும் சேர்த்து போடப்பட்டிருந்த ஷாமியானாப் பந்தலின் கீழ்,பரப்பப்பட்டிருந்த இருக்கைகளின் கடைசி வரிசையில் சென்று அமர்ந்து கொண்டேன். நிறையப் பேர் ஏற்கனவே அங்கே அமர்ந்து கொண்டிருந்தனர்.
இறந்தவரை அடக்கம் செய்வதற்கு முன்பாக வீட்டில் செய்யப்படும் சடங்குகளுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருப்பது தெரிந்தது. “ஏய்..பூ எங்கே..கற்பூரம் இங்க வெச்சிருந்தேனே..நீ எடுத்து எங்கியாவது வெச்சியா..? சுடுகாட்டுக்கு போறதுக்காக வரச்சொன்ன ஆம்புலன்ஸை இன்னும் காணோமே..?,திரும்பியும் அவனுக்கு ஒரு போன் போடு..” நெருங்கிய உறவுக்கார ஆண்களும் பெண்களும் பரபரப்பாக இருந்தனர்.
பனிரெண்டு வயதுள்ள ஒரு சிறுமி,ஒரு பிளாஸ்டிக் கப்பில் வழியவழிய தேநீரை எடுத்துக் கொண்டு,அது சிந்திவிடாதபடி மெதுவே வந்து கொண்டிருந்தாள்.அப்படியும் அது தளும்பியதில் பாவம் சூடுபட்டுக் கொண்டாளோ என்னவோ..,ஷ்..ஆ..என்ற படியே கவனமாய் கைமாற்றி,மாற்றிப் பிடித்துக் கொண்டே வந்தாள்.
அவளது அவஸ்தையைக் கண்டு, “ஏ..பாப்பா..பாத்து..எங்கே கொண்டுபோறே..? நான் கொண்டு வந்து தறட்டுமா..?” என்பதற்குள் என்னை நெருங்கிய அந்த சிறுமி, “அங்கிள்..இது உங்களுக்குத்தான்.. எங்க அம்மா கொடுக்கச் சொன்னாங்க..!”
தேநீர் டம்ளரின் வெப்பத்திலிருந்து முதலில் அவளை விடுவிக்கவேண்டும் என்ற நினைப்புடன், “சரி சரி..கொண்டா..என்று எழுந்து சென்று வாங்கிக் கொண்டேன்.தனது பாவாடையில் கையைத் துடைத்துக் கொண்டே,மீண்டும் கூட்டத்திற்குள் ஓடிமறைந்தாள் அவள்.
மெதுவாக தேநீரை உறிஞ்சினேன்.இனிப்பு சற்றே கூடுதலாக இருந்தது.
எனக்கு அடுத்த இருக்கையில் தலை,முகம் என எல்லாம் வெளுத்து நரைத்துப் போய் அமர்ந்திருந்தவரைப் பார்த்து, “சார்,நீங்க டீ சாப்பிடறீங்களா..? என்று கேட்டுக் கொண்டிருந்தபோதே.. “டேய்..நீ..அஷோக்தானே..நல்லாயிருக்கியா..?” என்று அவர் பதிலுக்கு கேட்க..,எனக்கும் இப்போது அவரை நன்றாக அடையாளம் தெரிந்தது.அது ராமன்குட்டி..
என்ன..அடையாளமே தெரியாத அளவுக்கு மாறீட்டிங்க..ஜிம்முக்குப் போய்,தேத்திகிட்டு இருந்த ஒடம்பா இது..? எனக்கேற்பட்ட ஆச்சரியம் வினாக்களாக விழுந்தது.
ஆமாடா..அதெல்லாம் பல வருசத்துக்கு முன்னாலேயே விட்டுப்போன விஷயமாப் போச்சு.வேலை,குடும்பம்,பசங்க படிப்பு..அப்புறம் அவனுகளுக்கு வேலைன்னு..டென்சனாவே காலம் கழிஞ்சு போச்சு…அப்புறம் நீ எப்படியிருக்கே..உனக்கு குழந்தைங்க எத்தனை..என்ன பண்றாங்க..? நீயும் கூடத்தான்,லேசா தொந்தி போட்டு,தலையிலே அங்கங்க கொஞ்சம் நரைச்சும் போச்சு,உன்னையும் சட்டுனு அடையாளம் கண்டுபிடிக்க முடியாத மாதிரி மாறித்தான் இருக்கே..,உன் வயசுக்கே அப்படினா..என்னோட வயசுக்கு எப்படியிருக்கும்னு நீயே யோசிச்சுப் பாரு..!”
“சரிதான்..” என்று நானும் ஆமோதித்தேன்.அதற்குப்பிறகும் பரஸ்பரம் விசாரணைகள்,தகவல்கள் என,நேரம் ஓடிக் கொண்டிருந்தது.
ராமன்குட்டி உங்களைக் கூப்பிடுறாங்க..யாரோ ஒருவர் குரல் கொடுக்க,“இருடா..வர்றேன்..” என்று என்தோளைத் தொட்டு சொன்னபடியே,அவர் எழுந்து பதட்டமில்லாமல் நடந்து போனார்.
மெதுவாய்,சுற்றிலும் நோட்டமிட்டேன்.அங்கிருந்த பலபேர் தெரிந்த முகங்களாய் இருந்தாலும்,பல ஆண்டு இடைவெளி,என்னை பலருக்கும் அடையாளம் தெரியாத நிலையை ஏற்படுத்தியிருந்தது.எனக்கும் சிலருடைய பெயர்கள் கூட மறந்துபோய் விட்டிருந்தது. வலுக்கட்டாயமாய்ச் சென்று அறிமுகப்படுத்திக் கொண்டு அவர்களோடு பேசும் மனநிலையும் எனக்கு இப்போது இல்லை.நிறைய இருக்கைகள் காலியாய்க் கிடந்தன. அவற்றின் நடுவே போய் நானும் ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.
எனக்கு தேநீர் கொடுத்த சிறுமியும்,ஒரு பெண்ணும் கூட்டத்திலிருந்து விலகி வந்து கொண்டிருந்தார்கள்.அந்தப் பெண்,எனக்கு தேநீரைக் கொடுத்துவிட்ட அவளது அம்மாவாய் இருக்கலாம்.அவர்கள் நேராக என்னை நோக்கி,வந்து கொண்டிருப்பதாகத்தான் தெரிந்தது.சிறுமியோடு வருபவள்..கீதாவா..நான் கடைசியாக,பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தபோது இருந்த அதே உடல்வாகு,அதே நிறம்,முகத்தில் லேசான மூப்பும்,முன்தலையில் சிறு கீற்றுக் கற்றையாய் சில நரைகள் தவிர,வேறெந்த மாற்றமும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை.
“என்ன அஷோக்..எப்படி இருக்கே..?,என்னை அடையாளம் தெரியுதா..? நான் கீதா.. கீதாவேதான்..”
“ ஓ..ரொம்ப நல்லாத் தெரியுது..” என்றபடியே முகத்தைத் திருப்பிக் கொண்ட நான்,அந்த இடத்திலிருந்து,இருக்கைகளை சற்று அவசரமாக விலக்கித் தள்ளிவிட்டு நடக்கத் துவங்கினேன்.
“அஷோக்..இன்னுமா எம்மேலே உனக்கு கோபம் தீரலை..! ப்ளீஸ்..மன்னிச்சுடுடா..” அவளின் குரல் என்னைக் கடந்த வெப்பக் காற்றோடு கரைந்து போய்க் கொண்டிருந்தது.நான் நிற்காமல், கூட்டமிருக்குமிடத்தை நோக்கி போய்க் கொண்டே இருந்தேன்.
ராஜனின் சடலம் இப்போது ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு,மயானத்தை நோக்கிய இறுதிஊர்வலம் மெதுவாக கிளம்பியது.பெண்கள் கதறி அழுதனர்.கீதாவும் அழுது கொண்டிருந்தாள்.எனது கண்களிலும் சில கண்ணீர்த் துளிகள் திரண்டு,சொட்டிக் கொண்டிருந்தது.பல ஆண்டு இடைவெளிக்குப் பின்னும் ராஜனுக்காக நான் அழுகிறேன் என்றே எல்லோருக்கும் தோன்றியிருக்கும்.
அடுத்து வந்த ஒரு மணிநேரம் கழித்து,நான் பொள்ளாச்சி செல்லும் பேருந்தில் அமர்ந்திருந்தேன்.இருவராய் அமரும் எல்லா இருக்கைகளிலும் காதல் ஜோடிகள் அமர்ந்திருந்தன. ஓ..இன்று காதலர் தினம்..!
------