வரலாற்று யாத்திரைகள் 12

"பண்ணை நெலத்துல பழியாக்கெடந்து ஒழச்சதுக்கு பாழுங்கெணத்துல விழுந்து செத்துருக்கலாம்டி, ஆனகட்டி போரடிச்ச நாட்டுல ஆக்கித்திங்க சோறில்லாம கெடக்குறோமே”,காலிப்பானையை சுரண்டிக்கொண்டிருந்த பாப்பாவிடம் கதறிக்கொண்டிருந்தான் ராமய்யன்.
“அப்புடிலாம் சொல்லாதய்யா, இன்னிக்கு யேசுசாமி பொறந்தநாளுன்னு அந்தோணி பொண்டாட்டி சொல்லிச்சு, மனசுவுட்டுறாதய்யா, சாமி கண்டிப்பா கண்ணைத்தொறப்பாரு” பாப்பாவும் முடிந்தவரை சமாதானப்படுத்தி பார்த்தாள்.
“அடிப்போடி மடச்சி, சாமியாஞ்சாமி.. செஞ்ச சோலிக்கு முறையான கூலி கேட்டதுக்கே முத்துசாமியையும் கணபதியையும் மிராசு ஆளுக்காரங்க கட்டிப்போட்டு அடிச்சிருக்காங்களாம், அவிங்கள எந்தச்சாமி காப்பாத்திச்சு.. உண்டியல நெறக்கிறவனுக்குத்தாண்டி சாமி கூட வேல செய்யுது, நம்மள மாதிரி உளுத்துபோயி கெடக்குறவங்களுக்கில்ல.. கையப்பாருடி எங்கையப்பாருடி , எவ்வளவு கதிரை இந்தக்கை அறுத்துருக்கும், எவ்வளவு அரிசி மூட்டைய இந்தக்கை தூக்கியிருக்கும்.. ஆனா பசியின்னு வர்றப்ப ஒருவாய்க்கூழுக்குகூட வழியில்லாம போச்சுதேடி இந்த கைக்கு… அந்த மிராசுதார் நெலத்துல உழைச்சு வந்த வேர்வைய பிடிச்சு வச்சிருந்தாலும் குடிக்கிறதுக்கு உப்புத்தண்ணியாவது இருந்துருக்குமேடி…” ராமய்யன் ஆற்றாமையை அடக்கமுடியாது நெஞ்சிலடித்து கதறத்தொடங்கினான்.
பண்ணையாள் முறை இருந்து கொண்டிருந்த காலமது. ராமய்யனும் பண்ணையாளாக அடிமைக்கூலிக்கு ஒரு மிராசுதாரிடம் பணியாற்றி வந்தான். ஊருக்கு வெளியே ஒரு எட்டுக்கு பத்து குடிசையில் , தினமும் வயிற்றையும் வாயையும் கட்டிக்கொண்டுதான் வாழ்க்கை நடத்தி வந்தனர் அவனும் அவன் மனைவி பாப்பாவும். அந்த வருடத்தில் கடுமையான பஞ்சம் வேறு. மழையில்லை, உழவில்லை.., ஆனாலும் உழைக்க மறுக்கவில்லை ராமய்யனும் மற்ற பண்ணையாட்களும். தங்களுடைய கடுமையான உழைப்பிற்கு தகுதியான கூலியென ஒரு படி நெல் மட்டுமே அதிகமாக கேட்டனர், கிடைத்தது சாணிப்பாலும் சவுக்கடியும்தான். பசியையும் வலியையும் மறக்க கதறியழுவதைத் தவிர அவர்களால் வேறெதும் செய்ய இயலவில்லை.
ராமய்யனின் கதறலையும் மீறி துப்பாக்கி வெடிச்சத்தமும், பெண்களின் ஓலச்சத்தமும் ஊருக்குள்ளிலிருந்து வரத்தொடங்கியது. அதிர்ந்த ராமய்யன் பாப்பாவை குடிசைக்குள்ளேயே பத்திரமாக இருக்கச்சொல்லிவிட்டு வெளியில் ஓடினான். அவன் சென்ற சில விநாடிகளிலேயே தன் மூன்று வயது குழந்தையை தூக்கிக்கொண்டு ஓடிவந்தாள் சின்னப்பிள்ளை.
“பாப்பா… மிராசோட ஆளுங்களும் போலீசும் ஊருக்குள்ற கன்ணுல படுறவங்கள எல்லாம் சுடுறாங்கடி....ரெண்டு மூணு பேரு குண்டடி பட்டு செத்துட்டாங்க பாப்பா… எம்புருசனுக்கு என்ன ஆச்சுன்னு தெரியலடி” என அழத்தொடங்கியவளை சிறிது நடுக்கத்துடனேயே அணைத்து சமாதனப்படுத்தினாள் பாப்பா..
சின்னப்பிள்ளையை தொடர்ந்து, வயதானவர்களும் இளையவர்களும் குழந்தைகளுமாக அந்த குடிசைக்குள் தஞ்சம் புகத்தொடங்கினார். ஒவ்வொரு முறை கதவை திறக்கும் போதும் ராமய்யனாக இருக்கும் என எண்ணிதான் திறந்தாள் பாப்பா. அவன் வரவேயில்லை. நான்கு பேர் காலை நீட்டி படுக்கமுடியாத அந்த குடிசையில் நாற்பத்தி எட்டு பேர் தங்கள் உயிரை கையில் பிடித்தபடி நின்று கொண்டிருந்தனர். பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள். எப்படியாவது இந்த இரவு முடிந்துவிடக்கூடாதா என்ற அவர்களின் பிரார்த்தனைகளை பொய்யாக்குவது போல வெளியிலிருந்து கேட்டது அந்த கொடூரன் மிராசுதாரின் குரல்.
“டேய்!!!, அந்தக் கதவை பூட்டுங்கடா… எவ்வளவு தைரியமிருந்தா இந்த அடிமை நாயிங்க என்கிட்டயே கொரல உசத்துவானுக., அவனுகளுக்கு பொண்டாட்டி புள்ளைக ஒரு கேடா… பூட்டுங்கடா கதவை, குடிசையோட கொள்ளி வைங்கடா அத்தன பேத்துக்கும், பண்ணையாரை பகைச்சிகிட்டா என்னாகும்னு அவனுகளுக்கு புரியட்டும்”
வானத்தை கிழிக்குமாறு ஓலமிடத்துவங்கினர் ஏதுமறியாத அந்த அப்பாவிப்பெண்கள். கதவை திறக்க முடியாத அளவிற்கு கூட்டம் குடிசையை நிறைத்திருந்தது.நெருப்பின் தனலும், புகையும் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களின் உயிரைக்குடிக்க ஆரம்பித்த அந்த தருணத்தில் அவர்களின் ஓலம் உண்மையிலேயே வானத்தை கிழித்திருந்தது. அதுநாள் வரை பொழியாது காத்திருந்த வானம், உழைப்பவர்களின் சோகம் பொறுக்காது கண்ணீரை பெருமழையாய் பொழிந்து அந்த கீழ்வெண்மணி கிராமத்தை வெள்ளத்தால் நிறைத்தது. அநாவசியமென சரிசெய்யாமல் விடப்பட்டிருந்த ராமய்யனின் ஓட்டைக்கூரை அந்த 48 பேரின் உயிரையும் காப்பாற்றியது.
ஒரு வழியாக கதவை உடைத்து அனைவரும் வெளியில் வந்த சில நொடிகளில், கதிரறுத்து கதிரறுத்து கூராகிவிட்டிருந்த உழைப்பாளிகளின் அரிவாள் , அந்த மிராசுதாரின் கழுத்து ரத்தத்தில் குளித்து மறுபிறப்பெடுத்தது.
——————————————————————————————————————————————
கதையில் கூறப்பட்டுள்ள அனைத்து பெயர்களும் கீழ்வெண்மணியில் உயிர் நீத்த தியாகிகளின் உண்மையான பெயர்கள்.
டிசம்பர் 25, 1968 - தலித் சமூகத்தைச் சார்ந்த பண்ணையாட்கள் தங்கள் உழைப்புக்கேற்ற ஊதியம் கேட்டதை பொறுக்காத கோபாலகிருஷ்ண நாயுடு எனும் நிலச்சுவாந்தார் தனது அடியாட்களுடனும், கிஸான் போலீஸ் எனப்படும் விவசாயிகள் சங்கத்திற்கு எதிரான அமைப்பினரோடும் சேர்ந்து, பண்ணையாட்கள் குடியிருந்த கீழ்வெண்மணி எனும் கிராமத்தில் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். துப்பாக்கிகளுக்கு பயந்து ஓடிய கிராமத்து மக்கள் ஊருக்கு வெளியிலிருந்த ராமய்யன் என்பவரின் குடிசைக்குள் தஞ்சம் புகுந்தனர். எட்டுக்கு பத்தடி இருக்கும் அந்த சிறு குடிசையில் நாற்பத்தி எட்டு பேர் ஒளிந்திருந்தனர். துப்பாக்கி சூடு நடத்தியும் தனது வெறி அடங்காத அந்த கொடூர நிலச்சுவாந்தாரின் ஆணைப்படி, அந்த 48 பேரும் , ஒரு மூன்று வயது குழந்தை உட்பட, குடிசையோடு தீவைத்து எரிக்கப்பட்டனர். இதில் நால்வர் தப்பிக்க, மற்ற 44 பேரும் உடல் கருகி இறந்தனர்.
ஏப்ரல் 6, 1973 - சென்னை உயர் நீதிமன்றம் இந்த படுகொலையில் கோபாலகிருஷ்ண நாயுடுவிற்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லையென்று அவனை விடுவித்தது.
டிசம்பர், 1980 - விடுவிக்கப்பட்டு 7 ஆண்டுகளுக்கு பிறகு, கீழ்வெண்மணி தியாகிகள் நினைவிடத்திற்கு முன்பு கோபாலகிருஷ்ண நாயுடு நக்சல்பாரி இயக்கத்தினரால் வெட்டிக்கொல்லப்பட்டான்.