என்ன செய்ய ஆருயிர் தோழியே - சந்தோஷ்

------------------வழமை போலவே.. ”நான் இங்கு நலம் நீ அங்கு நலமா.? ” கேட்கத்தான் துடிக்கிறேன் தோழி. கேட்கமுடியவில்லை. உன்னிடம் எந்த விசாரிப்புகளையும் கேட்டு. என்னால் இப்பொழுது இந்த கடிதத்தில் எழுதமுடியவில்லை எனதருமை சிநேகிதியே.!

---நம் உறவு எனும் வசந்தகாலமே பத்துவருடத்திற்கு முன்பான இலையுதிர்காலத்தில் தானே ஆரம்பித்தது ? அது ஒர் அலுவலகம். புதிய தொழில் நுட்பங்களை பற்றிய கலந்தாய்வு கூட்டத்திற்கு நீயும் நானும் அழைக்கப்பட்டிருந்தோம் இல்லையா ? அது ஒரு குளிரூட்டப்பட்ட அறை, இருந்தாலும் நீ அந்த அறையில் நுழைந்த அந்த சில நொடிகளில்... மட்டும் பல ஆடவர்களின் மனதில் ஒருவிதமான வெப்பத்தை ஏற்படுத்தியிருக்கும். ஏன் சராசரி ஆண் வர்க்கமான எனக்கும் தான்.
---.வானத்து நீலத்தில் அழல் மெருகேற்றிய நிறத்திலான காட்டன் புடவையில், வசீகர செவ்விதழ் விரித்து ஒரு மெல்லிய சிறு புன்னகை ஏந்தி, , பட்டாம்பூச்சி சிறகடிப்பாய் உன் இமைகள்.. நேயவிழிகளில் உன் கூரிய பார்வையோடு பொன்னிறமும் கருமையும் கலந்த கைகடிகாரம் மற்றும் மெலிதான ஒரு அழகு தங்க வளையல் அணிந்த கரங்களால் முன்புறம் சரிந்த கூந்தலின் சில வரிகளை சரிசெய்தவாறே நீ நடந்து வந்த அந்த நடையழகு இருக்கிறதே..... அடடா அந்தநேரத்தில் என்னுள் உறங்கிய ஒரு கவிஞனை நீ தட்டி எழுப்பினாய் தெரியுமா? தெரியும் உனக்கு..

-- ஆம்.! பின்னொரு நாளில்.. உன்னை வர்ணித்தே, உனக்காக மட்டுமே, உன் மின் அஞ்சலுக்கு ஒரு கவிதை அனுப்பி இருந்தேன். அதை நீ ரசித்தாய். அதில் என்னையும் நீ ரசித்தாய்.. இல்லையா ?

-- அந்த அலுவலகத்தில்.. அந்த கலந்தாய்வுக்கு பிறகான நம் தனிப்பட்ட சந்திப்பில், ஏதோ ஒரு விதமான புரிந்துணர்வு நமக்குள் ஏற்பட்டு.. ஒரு புனித பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டோம். அதற்கு நட்பு என்று கூட பெயரிட விரும்பவில்லை.. காதல் என்று கூட அந்த பந்தத்திற்கு சாயம் பூச நாம் இன்றுவரை யோசித்ததே இல்லை. ஆமாதானே மை டியர்...!

-- உன் குடும்பத்திலுள்ளவர்களுக்கு என்னை நண்பன் என்று அறிமுகப்படுத்திய அந்த நொடியில், ஏனோ நீ என்னை பார்த்து கண்ணடித்தாய்.. ? ஏன் என்று இதுவரை எனக்கு விளங்கவில்லை. ஆனால் ஏன் என்று கேட்கவும் விரும்பவில்லை. ஏதோ ஒர் உணர்வு திசையில் நம் உறவு பயணிக்கிறது. பயணிக்கட்டும் என்று விட்டுவிட்டேன். இது உனக்கும் புரியும் தானே ?

-- புதுமை பெண்ணாக நீயிருந்தும் ஒரு கட்டாய சூழ்நிலையில் சிக்கவைக்கப்பட்டு அமெரிக்காவிலிருக்கும் ஒருவரை மணந்து சென்றுவிட்டாய். உன் திருமணத்திற்கு உனை வாழ்த்த வந்திருந்தேன்.. உன் கணவரிடம் என்னை அறிமுகப்படுத்திய போது என்ன சொன்னாய் தெரியுமா..? ஞாபகம் இருக்கிறதா? ” இவன் என் நண்பன்.. நண்பனுக்கும் மேல.. என்னை புரிஞ்சுகிட்ட ஒரே ஜீவன் “ என ஆங்கிலத்தில் நீ சொன்னாய் அல்லவா.. ? அப்படி நீ சொல்லும் போது உன் முகத்தில் ஒரு திமிர் தெரிந்தது . ஏன் தோழி.. ?

-- திருமண ஆனபிறகும் கூட மின் அஞ்சல் , அலைப்பேசியில் நம் உறவு தொடர்ந்தது நமது வாழ்வு பிரச்சினைகளுக்கு ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிக்கொண்டோம். உனது கணவரும் எனக்கு நல்ல நண்பர் ஆனார்.

என் திருமண நாளுக்காக ஆர்வத்துடன் காத்திருக்கும் என் குடும்பத்தினரில் நீயும் ஒருத்தி. .. ’ யாரையாவது காதலிச்சு தொலைடா ‘ என்று அதட்டினாய். வயது ஆகிறது என்று வருத்தப்பட்டாய். ஆனால் அன்று நீ வருத்தப்பட்டபோது நான் அப்படி சொல்லியிருக்க கூடாதுதான். நான் சொன்னது “ .. என் நெருங்கிய தோழி உனக்கே என்னை கல்யாணம் பண்ணிக்க தோணல தானே பிறகு என்னை எவ காதலிக்க போறா? “ என்று ஒரு வெறுப்பில் சொல்லிவிட்டேன். கேட்டதும் நீ துடிதுடித்தாய்.

அன்று நீ அனுப்பிய ஒரு மின் அஞ்சலில் ஏதோ மனவருத்தத்தில் நீயிருக்கிறாய் என்று நான் தெரிந்து உன்னிடம் வலுக்கட்டாயமாக கேட்டும் நீ சொல்லவில்லை. பிறகு உன் தந்தையிடம் கேட்டு தெரிந்துக்கொண்டு நான் உன்னை அலைப்பேசியில் தொடர்புகொண்டபோது நான் கேட்டேன்
“ ஏன் டா என்கிட்ட மறைக்க விரும்புற ?

நீ சொன்னாய் “ சாரி டா. இனிமேல் இப்படி செய்யமாட்டேன். ஆனா.... ***** உன்னிடம் நான் நேரிடையாக தெரிவிக்கப்பட முடியாத செய்தி ஒன்றே ஒன்றுதான் இருக்கும் அது என் மரணமாக இருக்கும் ” என்று நீ அன்று சொன்னதை நான் பெரிதாக எடுத்து அலட்டிக்கொள்ளவில்லை தோழி.......

ஆனால்......ஆனால் இன்று.. இந்த விடியற்காலையில் அலறித்துடிக்கிறேன் தோழி.............! என் விழிகளிலிருந்து கண்ணீர் வரவில்லை. ஆனாலும் அலறித்துடிக்கிறது இதயம். 5 வயது குழந்தைக்கு தாய் நீ.. திமிர்பிடித்த கணவனை அன்பான கணவனாக மாற்றிய மந்திரவாதி நீ.. பாரதி கண்ட புதுமைப்பெண் நீ.. எலலாம் சரி.... ஆனால் எப்படி எப்படி தோழி இது நிகழ்ந்தது...? . உனக்கு 30 வயது கூட முடியவில்லையே தோழி...
--என் நெஞ்சமெல்லாம் பாரம். டா . அன்று நாம் சந்தித்த இலையுதிர்காலத்தை போலவே... . இப்போதும் எனக்கு இது இலையுதிர்காலமாக தெரிகிறது மை டியர் .
என்னமோ தெரியவில்லை டியர். எனக்கு அழுகையே வரவில்லை. நான் என்ன செய்ய ? என்ன செய்யட்டும் தோழி...?

-- இந்த மடலை நான் எந்த மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பினால் நீ படிக்க முடியும்.........? கொடூரக் காலனிடம் கேட்டுச் சொல். அனுப்பி வைக்கிறேன். முடிந்தால் நானும் உன்னை சந்திக்க வருகிறேன். .

ஏய் .. விஞ்ஞானிகளே..!!
மரணத்தை வெல்லும் சூத்திரம் ஏதும் உங்களால் கண்டறிய முடியாதோ ?

-------------------------------------------------

-இரா.சந்தோஷ் குமார்.

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (16-Feb-15, 6:35 am)
பார்வை : 343

மேலே