காக்கைச் சிறகினிலே - இன்னும் சற்று நொடிகளில் போட்டி கவிதை

வெளிநாட்டில் கட்டிட வேலை
பிழைப்புக்கு கிடைத்திட எங்கள்
வானம் பார்த்த பூமி என்னை
வழியனுப்பி வைத்தது கண்ணுக்கு
தெரியாத கண்களில் கண்ணீரோடு !

பாலைவன தகிப்பிலே பாழும் வறுமை
விரட்டவே பட்டினி வியர்வை துணையிலே
ஏழைத்தாய் இளம் மனைவி நினைவிலே
சேர்த்து வைக்கும் தொகையும் சிறியதே !

என்றைக்கு திரும்புவோம் சொந்த மண்ணுக்கு
என்பது பாலைவனத்தின் கானல் நீரோ
ஏந்திழையாள் கருத்தம்மா காணும் கனவுகள்
என்னோடு வாழ நானோ இங்கு வேக!

காக்கை சிறகினிலே வெண்ணிறம் காணும்
நாளதில்தான் திரும்ப இயலும்போல
என்ற தோழன் சிரித்து சொன்னான்..
அந்தக் காலம் வரும் வரையில் ..

புத்திசாலிகள் எங்கெங்கோ பதுக்கிய பணத்திலும்
கயமை கொண்ட மனிதர்தம் மனங்களிலும்
இருண்ட இவ்வாழ்வின் வண்ணமிது என
காக்கை சிறகினிலே கரியநிறம் காணுவோம் !

எழுதியவர் : கருணா (15-Feb-15, 11:21 am)
பார்வை : 781

மேலே