காக்கைச் சிறகினிலே

பச்சைவண்ணப் பட்டுடுத்தி
பொன்னணி கலன்பூட்டி
வாசமல்லிச் சரஞ்சூடி
வாட்டமான மனதோடு
நாணத்தால் தலைகவிழ
நான்நின்றேன் உன்முன்னே !!

மண்பார்த்து நின்றயெனை
கண்நோக்கிப் பார்த்தநொடி
உன்முகம்போன போக்கென்ன ?
உன்னுறவுகளும் முழித்ததென்ன ?
களையானபெண்ணென்று தரகருஞ்சொன்னாரோ ?
கருப்பென்றஉண்மைதனைச் சொல்லாதுமறைத்தாரோ ?

வாய்பேசாது வயிறுநிறைத்து
போய்ப்பின்னே சொல்வோமென
விடைபெற்றுச் சென்றீரே ....
விடையிலெனைக் கழித்தீரே ...!
மங்கையுள்ளங் கொதிக்கிறதே ...
கங்கைபோலப் பொங்கிடுதே ...!

குணம்பாராமல் நிறங்கண்டாய்
குறையென்றே புறக்கணித்தாய் !
காக்கைச்சிறகின் வண்ணத்தில்
கண்ணனைக்கண்ட மீசைபாரதியே !
மீண்டுமுதித்துவா முண்டாசுகவியே !
வண்ணபேதமொழிய சாட்டைசுழற்று ...!!

எழுதியவர் : ராஜ லட்சுமி (15-Feb-15, 12:08 pm)
பார்வை : 56

மேலே