காதல் காதல் காதல்

உன்முகம் எண்ணி
விண்வெளி பார்த்தேன்,
விண்மீன் இருண்டது!
உன்விழி எண்ணிக்
கண்விழி திறந்தேன்,
சொர்க்கம் பிறந்தது!
பெண்ணே உந்தன்
பூவிதழ் மலரக்
காற்றும் கரைந்தது!
நீ
இந்திரலோக சிலையோ?
அந்த
பிரம்மனின் அற்புதக் கலையோ!
என்
சிந்தை மொத்தமும்
உன்சிறு முகமே
சிவந்து கிடக்குதடி!
உன்
சிவந்த கண்கள்
கண்டால் எந்தன்
சிறுமனம் சிதறுதடி!
நிலவில் பூத்த மலரே
உன் நினைவில்
என்பேர் இல்லையோ?
என்
இதயம் வெடிக்கும்
ஓசை உந்தன்
செவிகள் சேரவில்லையோ?
மந்திரம் போலுன்
பெயரை தினமும்
செப்பிச் செப்பிக்
கரைகிறேன்!
கரைகள் இல்லா
கடலினைப் போலக்
கவிதை உனக்கென
வடிக்கிறேன்!
வெள்ளி போன்ற வெண்பற்கள்
மாலை வானச் செவ்விதழ்கள்
மணவாளன் என் காதில்
காதல் சொல வாராதோ!?
பேரழகி உன்னாலே
பைத்தியம் ஆனேனே!
பாவிஎன் காதலைநீ
ஏற்றுவிடக் கூடாதா?
அந்தகாரம் சூழ்ந்தாலும்
எந்தநாளும் நீவேண்டும்!
மந்தமான என்மனதில்
மல்லிகையாய் வரவேண்டும்!
வான் இடிந்து வீழ்ந்தாலும்
லோகம் என்ன ஆனாலும்
மண்ணில் உள்ள
காலம் வரை
நீயும் இன்றி வாழ்வேனோ?!
விலகாதே வெண்பனியே.....
தென்பொதியச் சந்தனமே...
ராஜராஜன் வந்தாலும்
ராணி உன்னை
நான் பிரியேன்!!!...
------------------------------------------------சு.தா(நான்)